சிவபெருமானுக்கு 16 முகங்கள் உள்ள திருக்கோவில்,

சிவபெருமானுக்கு 16
முகங்கள் உள்ள திருக்கோவில்,
பிரதோசத்தன்று தரிசனம்
செய்யப்பட வேண்டிய கோவில்!

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஆத்தூர் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில், இயற்கை எழில் கொஞ்சும் பொன்பரப்பி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். தமிழர்களின் கட்டடக் கலைக்கும், புராதனச் சிறப்புக்கும் சான்றாக விளங்கும் இந்த சிவாலயம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மகத ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிற்றரசனான வானகோவராயன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது.

புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநர்களை கொண்டும், நுணுக்கமான வேலைப்பாடுகளுடனும் இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில், இவ்வூரில் செல்வம் கொழித்து பொன்னும் பொருளும் அளவற்றுப் புழங்கியதால் இவ்வூருக்கு `பொன் பரப்பி’ என்று பெயர் சூட்டி அழைத்திருக்கிறார்கள்.

பக்திக்குச் சான்று

சிற்றரசனான வானகோவராயனை, சேர, சோழ, பாண்டியர் மூவரும் தங்களுக்குக் கப்பம் கட்ட நிர்பந்தித்து வந்தனர். ஆனால் வானகோவராயன் அதற்கு உடன்படவில்லை. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத வானகோவராயனின் மீது ஆத்திரமடைந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களின் படையோடு மகதம் நோக்கி வந்தனர். இதை அறிந்த வானகோவராயன், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சொர்ண புரீஸ்வரரை வணங்கிவிட்டு வீரத்துடன் போருக்குக் கிளம்பினான்.

ஈசனின் பூரண அருளைப் பெற்று
போர் முரசு கொட்டி வந்த வானகோவ ராயனைப் பார்த்த மாத்திரத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களது அரச முடிகளை கழற்றி வைத்துவிட்டு போர் நடவடிக்கையை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர். இதனாலேயே அந்த இடம் மும்முடி என்றழைக்கப்பட்ட தோடு, சொர்ண புரீஸ்வரரின் அருளுக்கும் வானகோவராயனின் பக்திக்கும் சான்றாகவும் இருந்து வருவதாக வரலாறு கூறுகிறது.

கல்வெட்டுச் சிறப்பு

இக்கோயிலைப் பற்றிய வரலாற்றை,
ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் திருக்கோயில் சுற்றுச்
சுவர்களில் உள்ள கல்வெட்டுக்களில் காணலாம்.

காசி போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று ஆயிரம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்குவதன் மூலம் பெறும் பலன்களை, இக்கோயிலுக்குச் செய்யும் ஏதேனும் சிறிய அளவிலான திருப் பணியின் மூலமும், ஈசனின் தரிசனத்தின் மூலமும் பெறலாம் என்பது போன்ற தகவல்களும், சிவதரிசன வழிமுறைகளும், வழிபாட்டு பலாபலன்களும் தெளிவாக இக்கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

ஷோடசலிங்கத்தின் சிறப்பு

இங்கு அருளாட்சி செய்யும் சொர்ணபுரீஸ்வரர் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கிறார்.நவபாஷாணத்துக்கு நிகரான, காந்தத் தன்மையும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஷோடசலிங்கம் பல சிவாலயங்களில் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டு மின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக் கபட்டுள்ளதால், உலகையேகட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

நிறம் மாறும் அபிஷேகப் பால்

பெரும்பாலான சிவாலயங்களில்
உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், அவரின் திருமுகம் ஏதேனும் ஒரு பக்கத்தில் சாய்ந்திருப்பது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ண புரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பிரதான நிலைப்படியில் இருந்து சிவ தரிசனம் செய்வதற்கு வசதியான அமைப்பில் இருப்பது சிறப்பாகும். இந்த நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால் உள்ளிட்டஅபிஷேக பொருட்கள் நீல நிறமாக மாறி வழிந்தோடுவது குறிப்பிடத்தக்கது.

சிற்பங்களின் எளிமை

இக்கோயில்களில் உள்ள சிற்பங்களின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், தெய்வ உருவங்கள் ஒவ்வொன்றும் வெறும் ருத்ராட்ச மாலையுடன் காட்சி அளிப்பதே. ஏனெனில், காகபுஜண்ட ருக்கு சிவபெருமான் எளிமையாக தரிசனம் தந்ததை உணர்த்துவதற்காக மற்ற தெய்வங்களும், ஆடம்பரங்கள் எதுவுமின்றி மிக எளிமையாக காட்சியளிப்பதாக ஐதீகம்.

அதுபோலவே, வெளிப்பிராகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் ஆசனம் இட்டு அமர்ந்திருக்கும் முருகப்பெருமான், சுமார் 8 அடி உயரத்துடன் மிக பிரமாண்டமாக காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பம்சம். இது தவிர சண்டிகேஸ்வரர், கன்னிமூல விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகிய தெய்வ மூர்த்திகளும் சிற்ப அழகுடன் காட்சி தருகிறார்கள்.

தேன் அபிஷேக மகிமை

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலங்கள் மற்றும் திங்கட்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து தேனபிஷேகம் செய்து வழிபட உகந்த நாட்களாகும்.

நீண்ட காலமாக திருமணமாகாதவர் கள், இந்தக் கோயிலுக்கு வந்து ஈசனுக்கு தேனபி ஷேகம் செய்து வழிபடுவதுடன், தொடர்ந்து 16 பிரதோஷ தினங்களில் வந்திருந்து ஈசனைத் தரிசித்து வேண்டிக் கொண்டால் திருமணத் தடை நீங்கும். மேலும் ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திர தோஷம் முதலான தோஷங்கள் கொண்டவர்களும், பிள்ளை பாக்கியம் இல் லாதவர்களும், தீராத மனக்கவலை கொண்ட வர்களும் சொர்ணபுரீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்து, பிரதோஷ காலங்களில் தொடர்ந்து வழிபட்டால் பிரச்னைகள் யாவும் அடியோடு நீங்கும் என்பது நம்பிக்கை.

தோஷம் உள்ளவர்கள், ஸ்வாமிக்கு தேன் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தரப்பட்ட தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.

இந்தத் தலத்தில் சிவபெருமான் முனிவருக்கு காட்சியளித்தது பிரதோஷ வேளை என்பதால், இந்த ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு விமரிசை

யாக நடைபெறுகிறது. பிரதோஷ நாட்கள் மட்டுமின்றி பௌர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் திங்கட் கிழமைகளில் வரும் சோமவார பூஜை, தமிழ் வருடப்பிறப்பு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை, கார்த்திகை தீபம் போன்றவையும் இங்கு வெகு விசேஷமாக நடைபெறுகின்றன.

காகபுஜண்டர் வழிபாடு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகபுஜண்ட சித்தர் சிவ தரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டிருந்தார்.அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அவருக்கு இங்கே காட்சி தந்தாராம். அதனாலேயே காக புஜண்டர் இங்கே சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், தற்போது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே ஈசானத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோயில் ஈசானத்தில் அமைந்துள்ள சித்தரின் ஜீவ சமாதியை 16 முறை வலம் வந்து, 2 முதல் 16 தேங்காய் வரை உடைத்து வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவ தோஷங்கள், தீராத மனக் கவலைகள் நீங்கி சிவ புண்ணியம் பெறலாம் என்பது நம்பிக்கை.

அவர் அருளிய நாடிச் சுவடியில் இக்கோயிலின் கருவறை மிக உக்கிரமானதாக இருக்கும் என்றும், அதனால் கருவறையில் ஏற்றப்படும் தீபம், எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் இறைவனின் கருவறையில் அமைந்துள்ள தீபம் துடிப்போடுதான் எரிந்து கொண்டிருக்கிறது.

திருச்சிற்றம்பலம்.
சிவாய நம.

No comments:

Post a Comment