விக்னேசுவரி, கணேசினி, கணேஸ்வரி, கஜானனா, ஐங்கிணி


 "ஒன்றே குலம், ஒருவனே தேவன்', "பேராயிரமுடைய பெம்மான்', "ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க', "பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே' என்பன தமிழ்ச் சான்றோர்களின் அறிவுரைகள்; ஆய்வுரைகள். இவை இறைவன் ஒருவனே எனும் கருத்தை வலியுறுத்தினாலும், வழிபடும் மாந்தரின் தன்மை, மனப்பக்குவம், வழிபாட்டு நெறி, புராண- இதிகாசக் கதைகள் ஆகிய வற்றிற்கேற்ப இறைவனின் திருவுருவங்களும் பெயர்களும் மாறுபடுகின்றன; பலவாகப் பெருகுகின்றன. பழமையான ரிக் வேதம், "இறைவன் எனும் உண்மைப் பொருள் ஒன்றே. அப்பரம்பொருள் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலையும் புரிகின் றது' எனக் கூறுகிறது. காத்தல் தொழில் செய்யும் இறையாற்றல் "விஷ்ணு' எனும் தெய்வமாக வழிபடப்பட்டது. பின்னர் அப்பர மாத்மா தசாவதாரக் கடவுளாகவும், வேறுபல பெயர்களாலும் அழைக்கப்பட்டார்; வழி படப்பட்டார்.

பரம்பொருள் ஒன்றேயாயினும் அதனுள் பல ஆற்றல் அடங்கி இருக்கிறது. சூரியன் ஒருவனே. ஆனால் அவனிடத்து சுடுதல், காயவைத்தல், ஒளிருதல் ஆகிய ஆற்றல்கள் அடங் கியிருப்பதை யாவரும் அறி வோம். இன்றைய விஞ்ஞான அறிவும் அச்சூரிய ஆற்றலால் சமைத்தல், மின்னாற் றலை வெளிப்படுத்தல் ஆகிய பலவற்றையும் செய்வதை அனைவரும் நன்கு அறிவோம். இதனையே இன்றைய அறிவியல் உலகம் பொருள், ஆற்றல் எனக் கூறுகிறது. இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாமல் இணைந்தே செயல்படும் எனக் கூறுகிறது. பழந்தமிழர் இதை இறைவனும் இறை யாற்றலும் எனக் கூறினர். திருமாலும் அவரது மார்பில் இலக்குமியும் இணைந்து "திருவாழ் மார்பன்' எனத் தொழப்படுகிறார்.

சைவ சமயம் இத்தத்துவத்தை சிவம்- சக்தி எனக் கூறும். சிவத்தினின்றும் சக்தியையும் சக்தியினின்றும் சிவத்தையும் பிரிக்க முடியாது. சிவம் தனித்திருக்கும்போது சிவனென்றும், செயல்படும்போது சக்தியெனவும் வழங்கப் படுமென்பர். இவ்வாறே மகேஸ்வரனின் ஆற்றல் மகேஸ்வரி எனவும், பிரம்மாவின் சக்தி பிரம்மி எனவும், நரசிம்மனின் சக்தி நரசிம்ஹி எனவும் பெயரிடப்பட்டனர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய "பிரஹத் சம்ஹிதா' எனும் நூல், தாய்த் தெய்வங்களையும், அந்த தெய்வங்களுக்குரிய ஆண்பால் தெய்வங்களின் உருவ அமைப்பையும், பெற்றிருக்க வேண்டிய ஆயுதங்களையும் குறிக்கிறது. கி.பி. 9, 10-ஆம் நூற்றாண்டில் தோன்றிய "உத்பலா' என்ற அறிஞர், தமது "பிரஹத் சம்ஹிதா' விளக்க வுரை நூலில், "மகேஸ்வரி, பிராம்மி, வைஷ்ணவி முதலிய தாய்த் தெய்வங்களைக் குறிப்பிட்டு விட்டு, இறுதியாக, நரசிம்ஹி, வராகி, வைநாயகி ஆகிய பெண் தெய்வங்களைக் குறிப்பிட்டு விளக்குகிறார்.

விநாயகருக்கு விநாயகி என்பது பெண்பால். வைநாயகி, விக்னேசுவரி, கணேசினி, கணேஸ்வரி, கஜானனா, ஐங்கிணி என்ற பெயர்களும் உண்டு. இத்தெய்வம் இந்து, பௌத்த, சமண சமயத்தவரால் ஒரு காலத்தில் சிறப்பாக வழிபடப்பட்டது. இந்து சமயத்தில் சக்தி கணபதி என்ற பெயராலும் இத்தாய்த் தெய்வம் வழிபடப்பட்டது. காணாபத்யமும் தாந்திரீக வழிபாடும் ஓங்கியிருந்த காலத்தில் விநாயகி வழிபாடும் சிறப்புற்று விளங்கியதாக இத்தெய்வத்தைப் பற்றி ஆராய்ந்த பி.என். சர்மா குறிப்பிடுகிறார்.

சமண சமயத்தினர் தாங்கள் வழிபடும் யோகினிகளில் ஒன்றாக விநாயகியைக் கருதினர். சமணரின் பழஞ்சுவடி ஒன்று, மகாயோகி, சித்தயோகி, பிரிடாக்ஷி முதலிய யோகினிகளில் ஒன்றாக கணேசுவரியைக் கருதுகிறது. "சைனபிரபா சூரி' என்ற புகழ் பெற்ற பேராசிரியரால் கி.பி. 1306-ல் எழுதப் பட்ட "விதிப்பிரபா' எனும் நூலில் இத்தெய் வம் விநாயகி அல்லது வைநாயகி எனக் குறிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தில் யானைத் தலையுடன் விளங்கும் இத்தாய்த் தெய்வம், "கணபதி ஹ்ருதயா' என்று குறிக்கப்பட்டுள்ளது. அமிர்தானந்தா என்ற பௌத்த மத அறிஞர், "தர்ம கோச சமக்கிரகா' என்ற நூலில் இத்தேவியைக் கீழ்க்கண்டவாறு குறிக்கிறார்:

"கணபதி ஹிருதயா, ஏகமுகா, துவிபுஜா, வரதா

அபயா நிரித்யாசனா'.

அதாவது கணபதி ஹ்ருதயாவிற்கு ஒரே முகம், இரண்டு புஜங்கள், வரத- அபய முத்திரைகள், நடன நிலை என்பதாகும்.

இத்தெய்வத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்த பி.என். சர்மாவும், பேராசிரியர் எஸ்.கே. இராமச்சந்திர ராவும் விநாயகியைப் பற்றி விரிவான புராணங்களோ சிற்பக் குறிப்பு களோ இல்லை என்பர். வடமொழியில் ஸ்கந்த புராணத்தில் காசிக் காண்டத்தில் யோகினி களின் பட்டியலில் விநாயகி, கஜானனா எனும் பெயர்கள் காணப் படுகின்றன. அறுபத்தி நான்கு யோகினிகளின் பட்டிலில் விநாயகியும் காணப்படுகிறாள். யோகினி என்பவர்கள், அன்னை பார்வதி அசுரர்களை எதிர்த்துப் போரிடக் காளியாகச் சென்றபோது, அன்னையைச் சூழ்ந்து நின்று காளிக்கு உதவி யாக அசுரர்களை எதிர்த் தவர்கள். இந்த யோகினி கள் தாந்திரீக வழி பாட்டோடு சம்பந்தப் பட்டவர்கள் என்கிறார் ஜெ.என். பானர்ஜி.

கி.பி. 16-ஆம் நூற் றாண்டில் கேரளத்தில் தோன்றிய ஸ்ரீகுமாரர் என்பவரால் எழுதப் பட்ட "சிற்ப ரத்தினா' என்ற சிற்ப நூல் சக்தி கணபதியைப் பின்வருமாறு குறிக்கிறது:

"சக்தி கணபதிக்கு யானைத் தலை, பருத்த வயிறு, செந்தூர வண்ணம், நன்கு அமைந்த பிருஷ்டகம், மார்புகள், இளமைத் துடிப்புடைய பெண்ணுருவம்.'

"இடப்புறம் திரும்பிய யானைத் தலை, இரு கைகள், வலக்கையில் பெரிய தாமரை மொட்டு, தொங்கிய இடக்கை, கச்சுடன் விளங்கும் ஸ்தனங்கள், இடுப்பிற்குக்கீழ் புலியின் கால்பாகம், நிமிர்ந்து சுருண்ட வால்' என்னும் அமைப்புடைய இத்திருவுருவை கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக எ.வி. ஜெயச்சந்திரன் குறிக்கிறார்.

விநாயகியின் திருவுருவச் சிலைகள் வடநாட்டில் அதிகம் கிடைத்துள்ளன. அவை கி.பி. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 16, 17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக உள்ளன. ராஜஸ்தானில், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கிடைத்த விநாயகி சிற்பத்தை கி.மு. முதல் நூற்றாண்டு முதல், கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்ததாக ஆய்வாளர்கள் கொள்வர்.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் விநாயகியின் திருவுருவச் சிலைகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் ஒரு தூணில் விநாயகி யின் சிற்பமுள்ளது. இது கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் உள்ளது. தலையில் வேலைப் பாடுடன் கூடிய அழ கிய மகுடம் விளங்கு கிறது. மேற்கைகளில் அங்குச- பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய- வரத ஹஸ்தங் களாக விளங்குகின் றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம். கழுத்தணியும் பூணூ லும் அழகு செய்கின் றன. கால்களில் சிலம் புகள். அழகாகக் கட்டப்பட்ட ஆடை யும் மேகலையும் அழகூட்டுகின்றன. இடப்புறம் திரும்பி பாதத்தைத் தொடுமளவு துதிக்கை நீண்டு விளங்குகிறது.

குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிற்பம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், சுவாமி சந்நிதியின் நுழைவாயிலில் வடபுறமுள்ள தூணில் காணப்படுகிறது. இது நின்ற கோலம். தலையில் மகுடம்; சற்றே வலப்பக்கம் சாய்ந்து காணப்படுகிறது.

இதனைப் போன்ற மற்றொரு உருவத்தை சிதம்பரத்திலும் காணலாம். நின்ற கோலம்தான். வலக்கையில் பூங்கொத்து. இடக்கை தூக்கிய நிலை. கழுத்திற்குக் கீழ் கச்சையற்ற இரு நகில்கள். இடுப்பிற்குக்கீழ் புலியின் இடுப்பும் இரு கால்களும் உள்ளன. தூக்கிய வால். இத்தகைய யானைத் தலை, பெண் மார்பு- கை, புலியின் கால்பாகம் உடைய சிற்பங்களை சிற்ப நூலார் வியாக்ரபாத விநாயகி என்பார்கள்.

இவற்றைத் தவிர, திருச்செந்தூர், பவானி, திருக்குறுங்குடி ஆகிய இடங்களிலும், திருநெல்வேலித் தேரிலும் விநாயகியின் சிற்பங்களைக் காணலாம்.

ஆன்மீகச்சிந்தனையில் அடியேன் கணேசன் பாண்டிச்சேரி 

No comments:

Post a Comment