சேவிப்போர் வேண்டுவதைஎல்லாம் அருளும் ஈச்சங்காடு லக்ஷ்மி நரசிம்மர்


எஸ்.பி. சேகர்


                       ரு காலத்தில் தளவாய் கிராமத்தில் அண்ணன்- தம்பிகளான இருவர் வாழ்ந்து வந்தனர். இருவருமே ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் இருந்தும்கூட, பெரியவர் சைவத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார். அவர் மரக்காய்கறிகளையே உண்ணுவது வழக்கம். எந்த உயிரினங்களுக்கும் கெடுதல் செய்யக்கூடாது; அவற்றைக் கொன்று உண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து வந்தார். ஆனால் அவரது உடன் பிறந்த தம்பியோ இவரது கொள்கைக்கு நேர் எதிராக இருந்தார். இவர் காட்டுக்குச் சென்று மிருகங்களையும் பறவைகளையும் வேட்டை யாடி, அதன் மாமிசங்களையே தினசரி விரும்பி உண்ணுவது வழக்கம். சைவத்தைப் பின்பற்றி வாழ்ந்து வந்த அண்ணன் தன் தம்பியிடம், ""உயிரினங்களைக் கொன்று தின்பது பாவச்செயல். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்ய வேண்டும்'' என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தம்பி கேட்பதாக இல்லை. இதனால் மனம் வெறுத்துப் போன பெரியவர் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தார்.

தளவாய் கிராமத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மிகப் பெரிய ஈச்சங்காடு இருந்தது. அங்கு செடிகளும் புதர்களும் மண்டிக் கிடந்தன. அங்கு குடி யேற முடிவு செய்த பெரியவர் ஈச்சங்காட் டைத் திருத்தி, அங்கே ஒரு குடிசை போட்டு தனியாக வாழ ஆரம்பித்தார். நாளடைவில் இவரைப் பார்த்துப் பலர் ஈச்சங்காட்டை நோக்கி வர ஆரம்பித்தனர். இதனால் ஈச்சங் காடு ஒரு கிராமமாக மாறியது.

அப்படிப்பட்ட ஊரில் அப்போது கோவில், சாமி என்று எதுவுமே இல்லை. ஒரு நாள் வயோதிகர் ஒருவர் யாசகம் கேட்டபடி ஊருக்குள் நுழைந்தார். பல வீட்டுப் பெண் களும் யாசகம் போட வெளியே வந்தனர். ஆனால் அந்த வயோதிகர் யாரிடமும் பிச்சை வாங்கவில்லை. ""என்ன பெரியவரே! யாரிட மும் பிச்சை வாங்காமல் பசியோடு இருக்கீங்க? ஏதாவது ஒரு வீட்டில் வாங்கி சாப்பிட்டுப் பசியாறலாமே!'' என்றனர். அதற்கு அந்த முதியவர், ""மக்களாகிய நம்மையும் உயிரினங் களையும் காக்கும் கடவுளே உங்கள் ஊரில் இல்லை. முதலில் இறைவனை வேண்டிய பிறகல்லவா உணவு உண்ண வேண்டும்? கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. அப்படிப்பட்ட இறைவன் இல்லாத இந்த ஊரில் நான் எப்படி சாப்பிட முடியும்?' என்றார்.

ஊர் மக்கள் திகைத்து நின்றனர். உடனே அதே முதியவரிடம், ""அய்யா, நீங்கள் சொல்லிய பிறகுதான் எங்களுக்கு இறைவனின் அருமை புரிந்தது. அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்!'' என்று கூறி அவரை வணங்கினர். 

அதற்கு அந்த முதியவர் ஊர் மக்களில் முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு கொங்கணக்காட்டுக்குச் சென்றார். அங்கு அவர் வணங்கி வழிபட்டு வந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருவுருவச் சிலை இருந்தது. அதை எடுத்து வந்து ஈச்சங்காட்டில் முறைப்படி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். ""அந்த முதியவர்தான் கொங்கணச் சித்தர். சித்தர்களில் மிக முக்கியமான கொங்கணச் சித்தர் நிர்மாணித்த கோவில்தான் ஈச்சங்காடு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம்'' என்கிறார்கள் ஊர் முக்கியஸ்தர்களான பெருமாள், சதாசிவம் ஆகியோர்.

கொங்கணச் சித்தர் வாழ்ந்த பகுதி கொங்கணக்காடு என்று அழைக்கப்படுகிறது. இது வல்லம் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கே கொங்கணச் சித்தரின் சமாதியுள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்!

""நடுநாட்டுப் பகுதியில் பரிக்கல், பூவரசங் குப்பம், சிங்கிரிகுடி ஆகிய மூன்று ஊர்களில் லட்சுமி நரசிம்மருக்கு என்று தனித் தனிக் கோவில்கள் உள்ளன. அதே நடுநாட்டுப் பகுதியில்தான் ஈச்சங்காடு தலத்தில் நான்காவது கோவிலாக லட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார் என்பது பலருக்கும் இதுவரை தெரியாத செய்தி! இதை பக்தர்களுக்குப் பரவச் செய்யுங்கள்'' என்கிறார் கோவில் பட்டாச்சாரியார் சந்தானம்.

""ஒவ்வொரு மாதமும் வரும் சுவாதி யன்று பல ஊர்களிலும் இருந்து பக்தர் கள் வந்து இறைவனை வழிபடுகிறார் கள். மூலவராக லட்சுமி நரசிம்மர் கம்பீரமான தோற்றத்தில் அருளாசி வழங்குகிறார். சித்திரை, வைகாசி மாதங்களில் பெருமாளின் நட்சத்திர மான சுவாதி என்று வருகிறதோ, அன்று முதல் பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும். தேர்த் திருவிழா மிகப் பிரமாதமாக நடந்து வருகிறது. பெருமாளிடம் வேண்டுவது எல்லாமே நடக்கிறது. 

உதாரணமாக இவ்வூருக்கு வடக்கே அருணா சர்க்கரை ஆலையில் செட்டி யார் இனத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் பணி செய்தார். அப்போது இங்கு வந்து அடிக்கடி பெருமாளை வழிபாடு செய்துவிட்டுப் போவது வழக்கம். இன்றைக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் அயல்நாடுகளில் பணிபுரிந்து வளமாக வும் நலமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். அவர் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் ஈச்சங்காட்டிற்கு வருகை தந்து லட்சுமி நரசிம்மரை சேவித்துச் செல்கிறார். பல லட்சம் செலவில் புதிதாக முன்மண்டபத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். மூலவர் லட்சுமி நரசிம்மர் சேர்ந்தே இருப்பது மிக முக்கியமான விசேஷம். இங்கு வைகுண்ட ஏகாதசி உட்பட பெருமாளுக்கு ஏற்ற எல்லா சிறப்பான நாட்களிலும் விசேஷ பூஜைகள் உண்டு. வரும் ஆண்டு பெருமாளின் தேர் பவனி புதிய தேரில் வரச்செய்யும் பணிகள் நடந்து வருகின்றன'' என்கிறார் கோவில் பட்டாச்சாரியார் சந்தானம்.

""இரணியனை வதம் செய்து பிரகலாதனுக்கு அருள்புரிந்தவர் பெருமாள். நமோ நாராயணா என்று யாரெல்லாம் நாராயண மந்திரத்தை ஜெபிக்கிறார்களோ அவர்களைக் கைவிட மாட்டார். அதர்மத்தையும் நான் என்னும் அகம்பாவத்தையும் அழித்தார் பெருமாள். அதன் விளைவே நரசிம்ம அவதாரம். கோபம் தணிந்து தம்பதி சமேதராய் இங்கே காட்சி அளிக்கிறார் லட்சுமி நரசிம்மர். இந்த காட்சி அபூர்வமானது! அப்படிப்பட்ட இறைவனை மாதம் தவறாமல் ஒவ்வொரு சுவாதியன்றும் குடும்பத்தினரோடு வந்து வழிபட்டுச் செல்கிறோம். குடும்பத்தில் நிம்மதி, தொழில் அபி விருத்தி, பிள்ளைகளின் படிப்பு உட்பட நோய் நொடியின்றி வாழ்கிறோம்'' என்கிறார் திட்டக்குடியைச் சேர்ந்த ஓம் சக்தி அச்சக உரிமையாளர் ராஜகுரு- விஜயகுமாரி தம்பதியினர் மற்றும் காமராஜ்- பார்வதி தம்பதியினர். 

ஒவ்வொரு சுவாதியன்றும் திட்டக் குடி, பெண்ணாடம் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து லட்சுமி நரசிம்மரைத் தரிசித்து வருகின்றனர். நலம் தரும் நரசிம்மரை நீங்களும் ஒருமுறை தரிசியுங்கள்.

சென்னை- திருச்சி ரயில் மார்க்கத்தில் உள்ள ஈச்சங்காடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இத்தலம். பாசஞ்சர் ரயில் அனைத்தும் இங்கு நின்று செல்லும். கடலூர் மாவட்டம் பெண்ணா டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆட்டோ, மினி பஸ் வசதி உண்டு.
ஆன்மீக சிந்தனையில் அடியேன்  கணேசன் பாண்டிச்சேரி 
https://www.facebook.com/aalayamarivom

No comments:

Post a Comment