நெல்லையப்பர் ஆலயம் - திருநெல்வேலி

நெல்லையப்பர் ஆலயம் - திருநெல்வேலி

ஆச்சரியமான பல சிற்பங்களை உள்ளடக்கிய ஆலயம். வெளியிலிருந்து 
பார்த்தபோது சிறிய கோயிலாயிருக்குமென எண்ணியது எவ்வளவு பெரிய 
தவறு என  நுழைந்ததுமே உணரவைத்தது. 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆலயம்.

கோயில் அமைப்பு:

850 அடி நீளம், 756 அடி அகலம் கோயிலின் எல்லை. அம்மன் கோயில், சுவாமி 
கோயில் என சமமான பிரிவைக் கொண்டது. தெற்குப் பிரகாரத்தின் நீளம் 387, 
அகலம் 42 அடி. கொடி வாகனங்கள், தோரணங்கள் வைக்கப்படும் அறைகள் 
உள்ளன. முன்னால் உள்ள தூண்களில் பிள்ளையன் காலம் வரை அரசாண்ட 
நாயக்க மன்னர்களின் சிலைகள் உள்ளன. மதுரை புதுமண்டபச் சிற்பங்கள் போலுள்ளன.

மேற்குப் பிரகாரத்தின் நீளம் 295, அகலம் 40 அடி. நடுவில் மேலக்கோபுரம் இருக்கிறது. 
சுதையில் உருவாக்கப்பட்ட பிள்ளையார் சிலையும், வெள்ளிக்கோரத மண்டபமும் 
குறிப்பிடத்தக்கவை. வடக்குப்பிரகாரத்தின் நீளம் 387, அகலம் 42 அடி. நின்றசீர் 
நெடுமாறன் கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆறுகாலத் தீர்த்தகுண்டம் 
உள்ளது. ஈசானத்திக்கில் யானைக்கூடம் காணப்படுகிறது.

கிழக்குப் பிரகாரத்தின் நீளம் 295, அகலம் 40 அடி. இதன் வடக்குத் திசையில் 
78 வருணத்தூண்களுடன் கூடிய சோமவார மண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல்பக்கம்
 வன்னியடிச்சாத்தனார், வயிரவர் சன்னிதிகள்,  யாகசாலை உள்ளன. ரிஷப 
மண்டபத்திற்கு வடக்கே நவக்கிரக மண்டபம் உள்ளது. சிவன் சன்னிதிக்கு 
முன்னதாக பிள்ளையார், முருகன் சிலைகள் உள்ளது. 


கோயிலின் பெருமை:

அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் முதலில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும்,
 பின்னர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாறனாலும் கட்டப்பட்டது. 
சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் 
இவற்றின் அமைப்பு பழங்காலத் தமிழர் சிற்பக்கலைச் சின்னமாகும்.

சீபலி மண்டபப் பிரகாரத்தில் உள்ள ஆறுமுக நயினார் விக்கிரகம் ஒரே 
கல்லில் மயில் வாகனத்தோடும், தேவியர்களோடும் விளங்குவது தமிழரின் 
சிற்பக்கலைக்கு சிறந்த சான்று.

காந்திமதி அம்மன் கோயில்:

ஆலயத்தின் முகப்பில் அம்மன் அம்பலம் ஒன்றுள்ளது. இது திரிபுரம் சிவராம 
காசியாபிள்ளையால் கட்டப்பட்டது. கோபுரம் கி.பி 1626 ல் எழுப்பப்பட்டது. 
சுவாமி கோயில் கோபுரம் எழுப்பப்பட்டு இருபது ஆண்டுகள் கழித்து இந்தக் 
கோபுரம் அமைக்கப்பட்டது. உள்ளே நுழைந்ததும் ஊஞ்சல் மண்டபம் உள்ளது.


கல்வெட்டுகள்:

மிகப் பழமையான கல்வெட்டு கி.பி 950 ல் இருந்த வீரபாண்டியன் சாசனங்கள் ஐந்து. 
இவை வட்ட எழுத்தில் எழுதப்பட்டவை. கல்வெட்டுகள் பாண்டியர்கள் சோழர்களை
 வென்றதாகச் சொல்கிறது.


ஆலயத்தின் சிறப்பைப் இடுகையின் நீளத்தைக் கருதி நிறுத்துகிறேன். நெல்லைச் 
சிற்பச் சிறப்புகள் குறித்து மற்றொரு இடுகை விரைவில்!

No comments:

Post a Comment