அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில் ....Vairavan patti

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்:வளரொளிநாதர்(வைரவன்)
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:வடிவுடையம்பாள்
 தல விருட்சம்:ஏர், அளிஞ்சி
 தீர்த்தம்:வைரவர் தீர்த்தம்
 ஆகமம்/பூஜை:
 பழமை:500 வருடங்களுக்குள்
 புராண பெயர்:வடுகநாதபுரம்
 ஊர்:வைரவன்பட்டி
 மாவட்டம்:சிவகங்கை
 மாநிலம்:தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
   
 - 
   
 திருவிழா:
   
 சம்பகசூர சஷ்டி, பிள்ளையார் நோன்பு. 
   
 தல சிறப்பு:
   
 இது ஒரு பைரவர் தலமாகும், நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று. 
   
திறக்கும் நேரம்:
   
 காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
 அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி - 630 215 சிவகங்கை மாவட்டம். 
   
போன்:
   
 +91-4577- 264 237 
   
 பொது தகவல்:
   
 
தலவிநாயகர்: வளரொளி விநாயகர். ராஜகோபுரம்: ஐந்து நிலை


 
   
 
பிரார்த்தனை
   
 எதிரி பயம், கிரக தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். 
   
நேர்த்திக்கடன்:
   
 பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 
   
 தலபெருமை:
   
 
இங்கு கருவறை கோஷ்டத்தில் ஸ்ரீராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி ராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை.பைரவர் சிறப்பு: அம்பாள் சன்னதிக்கு முன் பைரவர் தனிச்சன்னதியில் வலப்புறம் திரும்பிய நாய்வாகனத்துடன் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். இவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளது. இதில் நீராடி, சுவாமியை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பாவம் தீரும், நோய், எதிரிபயம் நீங்கும் என்பது நம்பிக்கை.தோஷம் நீக்கும் பல்லி: அம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை வணங்கினால் அவை தீரும். இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக கட்டப்பட்டுள்ளது.தெட்சிணாமூர்த்தி ஏழிசைத்தூண் மண்டபத்தில் அமைந்துள்ளதும், சண்டிகேஸ்வரர் சன்னதி, ஒரே பாறையில் செய்யப்பட்ட குடைவரைக்கோயில் போன்ற அமைப்பில் உள்ளதும், குதிரையில் போருக்கு செல்லும் வீரன் ஒருவனது நிலையை தத்ரூபமாக செதுக்கியிருப்பதும் சிறப்பு. நந்தி தனி மண்டபத்தில் அமைந்துள்ளது.


 
   
  தல வரலாறு:
   
 சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற அகந்தையுடன் இருந்தார்.ஒருமுறை பார்வதிதேவி, தனது கணவர் என நினைத்து அவருக்குரிய மரியாதைகளை, பிரம்மனுக்கு செய்தார். பிரம்மனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார். பின்பு, அவர் பிரம்மன் என உணர்ந்த பார்வதி, சிவனிடம் பிரம்மனின் செயல் குறித்து கூறினாள். எனவே, சிவன், தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளிஎறிந்தார்.இவரே, இத்தலத்தில் வைரவர் என்ற பெயரில் அருளுகிறார்.


 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக ஏழிசைத்தூணுடன் அமைந்துள்ளது. 

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில்

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்:சரஸ்வதி
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:-
 தல விருட்சம்:-
 தீர்த்தம்:-
 ஆகமம்/பூஜை:-
 பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:-
 ஊர்:கூத்தனூர்
 மாவட்டம்:திருவாரூர்
 மாநிலம்:தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
   
 - 
   
 திருவிழா:
   
 புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாரதா நவராத்திரி 12 நாட்களுக்கு பின் 10 நாள் ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்குரிய பவுர்ணமி மூல நட்சத்திரத்தில் மாதம் தோறும் சிறப்பு பூஜைகளும், ஆண்டு தோறும் தமிழ் வருடப்பிறப்பிலிருந்து 45 நாட்களுக்கு லட்சார்ச்சனையும் நடக்கிறது. 
   
 தல சிறப்பு:
   
 சரஸ்வதி இங்கு கோயில் கொண்டிருப்பதை அறிந்ததும், இன்று காணாமல் போன சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து "ருத்ர கங்கை' என பெயர் பெற்றது. இதே ஊரிலுள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அபிஷேக நீர் இத்தீர்த்தத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. தற்போது "அரிசிலாறு' என்ற பெயரில் ஓடுகிறது. பித்ரு தர்ப்பணத்திற்கு இந்நதி மிகச்சிறந்த நதியாகும். தற்போது இந்நதி பலநாட்கள் காய்ந்தே கிடக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் வருகிறது. 
   
திறக்கும் நேரம்:
   
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
 அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர்- 609 503, திருவாரூர் மாவட்டம். 
   
போன்:
   
 +91- 4366- 273 050, 238445, 99762 15220 
   
 பொது தகவல்:
   
 இவ்வூர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் தன் அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. எனவே அவரது பெயரால் "கூத்தனூர்' ஆனது. ஒட்டக்கூத்தர் தான் இக்கோயிலைக் கட்டினார் என்று தலபுராணம் சொல்கிறது. இவ்வூர் சரஸ்வதியை மகாகவி பாரதியார் பலமுறை வந்து வழிபட்டு சென்றுள்ளார். அதன் காரணமாகவே அவர் புகழ் பெற்ற கவிஞராக முடிந்தது என்கிறார்கள். இக்கோயில் ஒற்றைப் பிரகாரத்தைக் கொண்டது. ராஜகோபுரம் இருக்கிறது. பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்புரீஸ்வரர், பாலதண்டாயுதபாணி உள்ளனர். ஒட்டக்கூத்தருக்கு சிலை இருக்கிறது. சரஸ்வதியின் முன்னால் அன்ன வாகனம் உள்ளது. இதில் நர்த்தன விநாயகர் "சுயம்புமூர்த்தி'யாக இருக்கிறார்.

சரஸ்வதி சிலை அமைப்பு:
 மூலவர் சரஸ்வதி வெண்மை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள். ஜடாமுடியும், கருணைபுரியும் இருவிழிகளும், "ஞானச்சஸ்' என்ற மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். இக்கோயிலின் அருகில் புகழ் பெற்ற மாப்பிள்ளை சுவாமி' கோயில் இருக்கிறது. இந்த தலத்து சிவனை வழிபட்டால், திருமணத்தடையுள்ள ஆண், பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. மூலஸ்தானத்தில் கல்யாணப்பந்தலே இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
   
 
பிரார்த்தனை
   
 கல்விக்கடவுளான சரஸ்வதியை முறைப்படி மனதார வணங்குபவருக்கு தேனும் பாலும் திராட்சையும் போன்ற இனிய சொற்கள் சித்திக்கப்பெறும். அத்துடன் காவிய நாயகனாகவும் திகழ்வார். 
   
நேர்த்திக்கடன்:
   
 அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
   
 தலபெருமை:
   
 இத்தலம் "ஞான பீடம்' என்றும் "தெட்சிண திரிவேணி சங்கமம்' என்றும் புகழ்பெற்றது. இவ்வூர் சிவன் கோயிலில் துர்க்கையும், பெருமாள் கோயிலில் மகாலட்சுமியும், தனி கோயிலில் சரஸ்வதியும் அருள்பாலிக்கின்றனர். ஒரே ஊரில் முப்பெரும் தேவியரையும் தரிசிக்க முடியும் என்பதும் வித்தியாசமான விஷயம்.  
   
  தல வரலாறு:
   
 பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, "இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான் பெருமையடைகிறது," என்றாள். பிரம்மாவோ, தான் படைக்கும் தொழிலைச் செய்வதால் தான் பெருமையடைகிறது என்றும், தனது துணைவி என்பதாலேயே சரஸ்வதி பெருமையடைகிறாள் என்றும் சொன்னார். இருவருக்கும் இதுகுறித்து வாதம் ஏற்பட்டது. இது பெரும் பிரச்னையாகி பிரம்மனும், சரஸ்வதியும் ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். இதனால் இருவரும் பூலோகத்தில் சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்னும் அந்தண தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். இவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் இவர்களுக்கேற்ற வரன் தேடினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது.

சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். தம்பதிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டால், இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டவே இப்படி ஒரு நாடகத்தை உலகத்தின் முன்னால் அவர்கள் நடத்திக்காட்டினர். பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன்தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்கு," என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக இக்கோயிலில் இவள் அருள்பாலிக்கிறாள்.

தமிழகத்தில் சரஸ்வதிக்கென மிகப்பெரிய தனிக்கோயில் கூத்தனூர் மட்டுமே. பிரம்மாவுக்கு அதிகமாக கோயில்கள்
அமையாததால் அவரது மனைவியான சரஸ்வதிக்கும் இந்தியாவில் அதிக கோயில்கள் அமையாதது இயற்கையே. கூத்தனூர் சரஸ்வதி கோயிலிலும் பிரம்மாவுக்கு சிலை இல்லை. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: சரஸ்வதி இங்கு கோயில் கொண்டிருப்பதை அறிந்ததும், இன்று காணாமல் போன சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து "ருத்ர கங்கை' என பெயர் பெற்றது. இதே ஊரிலுள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அபிஷேக நீர் இத்தீர்த்தத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. தற்போது "அரிசிலாறு' என்ற பெயரில் ஓடுகிறது. பித்ரு தர்ப்பணத்திற்கு இந்நதி மிகச்சிறந்த நதியாகும். தற்போது இந்நதி பலநாட்கள் காய்ந்தே கிடக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் வருகிறது.