சுருளிமலை சுருளி வேலப்பர் திருக்கோவில்

சுருளிமலை சுருளி வேலப்பர் திருக்கோவில்
சுருளி அருவி கோவில் 

தேனி மாவட்டம், கம்பம் சுருளி மலையில் ஒரு குகையின் மீது அமைந்துள்ள முருகபெருமான் திருக்கோவில்.இதன் அருகில் சுரபி நதி ஓடுகின்றது. இங்குள்ள அதிசயம் என்னவென்றால், இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது. மேலும் இந்த நீர் பட்ட இலை, தழைகள் தொடர்ந்து 40 நாட்கள் நீரில் நனைந்த பின்னர்,பாறையாக மாறுகிறது.
எவ்வளவு நாட்களும் நீர் இங்குள்ள பாறைகள் மீது விழுந்து கொண்டிருந்தாலும் பாசம் பிடிக்காது, வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது அதிசயம் ஆகும். இங்குள்ள நீர் வீழ்ச்சி இசையோடு இணைந்து சுருதி கொடுத்ததால், சுருதி தீர்த்தம் அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, சுருளி தீர்த்தம் ஆனது. இங்குள்ள முருகபெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.
மஹாவிஷ்ணுவின் மகளான வள்ளியை மலைஅரசனான நம்பிராஜன் வளர்த்து, முருகபெருமானுக்கு மணம் முடித்து வைத்தார். திருமணத்திற்கு பின்னர், முருகனுக்கு தனக்கு சொந்தமான இந்த மலைப்பகுதியை திருமண சீராக அளித்தார். எனவே இந்த தலத்திற்கு வந்து அருளினார்.
ஒருசமயம், சனி பகவான், தனது நியமனப்படி,தேவர்களை ஆட்கொள்ளவேண்டி வந்தது. தேவர்கள் அனைவரும் முருகனை சரணடைந்து, வழிபட, சனியின் பிடி அகன்றது.
சிவபெருமானிடம் இலங்கையை ஆண்ட ராவணேஸ்வரன் தனது தவ வலிமையினால் அண்ட சராசரங்களையும் ஆளும் வரம் பெற்றான். அதன் பின்னர் தேவர்களையும் ரிஷிகளையும் சித்தர்களையும் வதைத்தான். அனைவரும் இங்குள்ள கைலாசநாதர் குகையில் அருள்புரியும் மஹாவிஷ்ணுவிடம் சரணடைந்து காத்து அருள வேண்டினர். இதற்குள் ராவணன் தனது படையுடன் இங்கு வந்து கூச்சலிட மஹாவிஷ்ணு பஞ்ச பூதமாய் உருவெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் பெரிய உருவெடுத்து கோப நிலை காட்ட, இதைக்கண்டு நடுங்கி தன் படைகளுடன் திரும்பி ஓடினான். இத்தகைய பெருமை வாய்ந்த கைலாசநாதர் குகையின் மேற்பகுதியில் சுருளிவேலப்பன் அருள் பாலிக்கிறார்.
முருகன், சுருளிவேலப்பன் சன்னதியில், சிவன், விஷ்ணு, விநாயகர் அனைவரும் காட்சி தருவது சிறப்பான அம்சமாகும். இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசித்து வருவதாக ஐதீகம். ஆதலால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி சிலைகள் உள்ளன. ஆடி அமாவாசை, தை , புரட்டாசி, மஹாளய அமாவாசை தினங்களில், இங்கு நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விசேஷ பூஜைகள் செய்கின்றனர்.
குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு சுருளி வேலப்பரே மகனாக வந்து இறுதிச்சடங்குகள் செய்து முடித்தாராம். எனவே ஆண் வாரிசுகள் இல்லதவர்களும் இறுதி வேளையின் போது இவரை தங்கள் மகனாக பாவித்து வழிபட மன அமைதியும் வளமும் கிடைக்கும்.
இங்கு பெருமாள் சன்னதியில் சிவபெருமானும் இருப்பது ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. விபூதி, குங்கும பிரசாதமும் தருகின்றனர். அத்துடன் சடாரி ஆசீர்வாதமும் செய்கின்றனர். துளசி தீர்த்தமும் வழங்கப்படுகிறது. இது உச்சிக்கால பூஜையில் மட்டும் கொடுக்கப்படுகிறது.
இங்கு பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும் சிவபெருமானுக்கு பரிவார மூர்த்தியாக தெட்ஷிணாமூர்த்தியும் (சின்முத்திரையுடன்) இருக்கின்றனர். சிவபெருமா னாருக்கு விசேஷ அபிஷேகங்கள் உண்டு. பால்குடம் எடுத்து முடி காணிக்கை செலுத்தி, தீர்த்த நீராடி, வழிபட, சகல பாவங்களும் நீங்கும். நல் வாழ்வு கிட்டும். தீராத வியாதி தீரும் என்பதும் நம்பிக்கை ஆகும். இங்கு அன்னதானம் செய்தால், நற்கதியும் மோட்ஷமும் கிட்டும் என்பதால், அன்னதானம் பிரதானமாய் நடைபெறுகிறது.
சிவபெருமானின் திருமணத்தின்போது அனைவரும் இமயமலைக்கு சென்றுவிட்டதால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்ததை சமன் செய்ய அகத்திய முனிவரை தென்பொதிகைக்கு அனுப்பினார். பின்னர் அகத்திய முனிவருக்கு தன் திருமணக்கோலத்தைக்காட்ட, இங்குள்ள குகையில் அருளினார். எனவேதான் இந்த குகை கைலாய குகை என்று அழைக்கப்பட்டது. இந்த தலத்தில் தனித்தனிக் குகைகள், தீர்த்த குளங்களுடன் உள்ளன. விபூதிக்குகை, கன்னிமார் குகை, சர்ப்பக்குகை, கிருஷ்ணன் குகை, பாட்டையர் குகை என பல குகைகள் உள்ளன.
இந்த மலை மீது கன்னிமார்கள் நடனமாடிய தடயங்கள் உள்ளன என்றும்
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறி, மலைக்கோவில்களை “குன்று தோறாடல்” என்று பெயரிடுகிறார். சுருளி வேலப்பர் சுயம்புவாக தோன்றி, குடவரை சன்னதியில் அருள் பாலிக்கிறார்.அவர் அருகில் விநாயகர்,மகாலிங்கம், சந்தான கிருஷ்ணன், வீரபாகு, ராம பிரான், லட்சுமணன் ஆகியோர் உள்ளனர். இம்மலையில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக கூறுகின்றனர்.
குகைகள் மிகவும் சிறிய அளவில் உள்ளன. இதனுள் இருவர் மட்டுமே அமர இடம் இருக்கின்றது. அதனுள் செல்வது யோகாசன பயிற்சி செய்வது போல் இருக்கும். தீர்த்தமும் பாறையின் மீது இருக்கும் துகள்களையே விபூதி பிரசாதமாக தருகின்றனர்.
முக்கிய விழாக்களாக ஆடி பதினெட்டாம்பெருக்கு, தைப்பூசம், ஆடி , தை அமாவாசை, பங்குனி உத்திரம், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, சித்திரை திருவிழா, கந்த சஷ்டி ஆகியவை கொண்டாடப்படுகிறது.
நமது இந்து சமயத்தில் கோவிலுக்கு செல்வது என்பது கலாசாரத்தை வளர்ப்பதற்கும், ஒருவருக்கொருவர் அன்புடனும் கனிவுடனும் உறவை வளர்த்துக்கொள்வதற்குமே ஏற்பட்ட சம்பிரதாயமாகும். இதனால் ஒழுக்கம் மேம்படுகிறது. நாம் குளித்து உடலை சுத்தம் செய்தபின்பே கோவிலுக்குள் செல்கிறோம். மற்ற சமயங்களில் கோவிலுக்குள் செல்லும்பொழுது, கை கால் அலம்பிய பின்பே செல்கிறோம். ஏதாவது சுலோகத்தை உச்சரித்தபடியே செல்வதால், மற்ற சிந்தனைகள் வருவதில்லை. மனம் ஒருமைப்படுகிறது. கோவிலை வலம் வருவதால் நமக்கு நடைப்பயிற்சி கிடைக்கிறது. எனவே கோவில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நல்ல நிறைவையும் தருகிறது.
இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பம் ,கம்பராய பெருமாள் கோவில் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது.
இந்த கோவிலுக்கு செல்ல மதுரை வந்து தேனிக்கு பஸ் மூலம் வந்த பின்பு கம்பம் அல்லது உத்தமபாளையம் செல்லவேண்டும்.இந்த இரண்டு ஊர்களில் இருந்தும் சுருளிதீர்த்தம் செல்லும் பஸ் மூலம் சுருளிப்பட்டி வந்து இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தால்தான் இந்த தலத்தை அடைய முடியும். நல்ல பாதை உண்டு என்றாலும் இரண்டு புறமும் காட்டில் உள்ள செடிகளும் புதருமாகத்தான் இருக்கும். ஆனால் நல்ல சுகமான தென்றலையும் மூலிகை மணத்தையும் அனுபவிக்கலாம். மழைக்காலத்திலும் மற்றும் பருவ காலத்திலும் சுருளி அருவியில் சுகமாய் நீராடலாம். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் திறந்து இருக்கும்.
சைவம் வைணவம் சமரசமாகத் தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்த நல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் சுருளி வேலா போற்றி!
அருள்மிகு சுருளி வேலப்பர் திருக்கோவில், சுருளிமலை,கம்பம் – 625 516. தேனி மாவட்டம்


அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்
மூலவர் : வீரஆஞ்சநேயர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : அணைப்பட்டி
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா: 
அனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை ஆகியவை முக்கிய திருவிழா. அமாவாசை காலங்களிலும் சனி மற்றும் புதன் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகம்.
தல சிறப்பு:
பெயருக்கேற்றாற்போலவே இந்த ஆஞ்சநேயர் நின்ற திருகோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார். அதேசமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில், ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போலவும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உதவும் கருணையுடன் பார்ப்பது போலவும் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.
முகவரி:
அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் அணைப்பட்டி திண்டுக்கல்.
பொது தகவல்: 
துவாபரயுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வன வாசம் இருந்தனர். தற்போது வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள சித்தர் மலையில் பாஞ்சாலியுடன் வந்து தங்கினர். அவர்களின் தாகத்திற்காக வாயுபுத்திரனான பீமன் தண்ணீர் தேடி இப்பகுதிக்கு வந்தான். அடர்ந்த காட்டின் நடுவே தண்ணீர் ஓடும் சத்தம். தண்ணீரை தேடிவந்த பீமனின் கண்களில் தான் சுயம்புமூர்த்தியான ஆஞ்சநேயர் தென்பட்டார். தருமனின் அனுமதியுடன் வீரனான பீமனே ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்ததால் இவர் வீர ஆஞ்சநேயர் ஆனார்.
பிரார்த்தனை 
வீரம், நல்ல புத்தி, கலங்காத மனம், புத்தி சாதுர்யம், நல்ல படிப்பு, உடல் பலம், செய்யும் செயல்களில் வெற்றி ஆகியவற்றை தருவார். பணி மாற்றம் விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நல்ல பலன் உண்டு என பலன் அடைந்தவர்கள் கூறுகின்றனர்.
நேர்த்திக்கடன்: 
அனுமன் ஜெயந்தியன்று முழு விரதம் இருக்க இயலாதவர்கள் பழம் மட்டும் சாட்பிட்டு ஸ்ரீராம ஜெயம் எழுதலாம். ஆஞ்சநேயர் பாடல்கள் பாடலாம். ஆஞ்சநேயர் கோயில் சென்று வழிபட்டு வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றி வழிபடலாம்.
தலபெருமை: 
வாயு மைந்தனான ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போதே சூரிய பகவானை பழம் என்று நினைத்து அதைப்பறிக்க வானில் தாண்டிக்குதித்தவர். ராமனின் அடிமையாக திகழ்ந்த இவர் "ஸ்ரீராமஜெயம்' எழுதுபவர்களை பல இன்னல்களிலிருந்து காக்கிறார். ராமாயணமோ அல்லது ராமனின் பெருமைகளோ கூறும் இடங்களில் எல்லாம் அனுமன் இருப்பார். அந்த அளவுக்கு ராமர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்.
வீர ஆஞ்சநேயர் :பெயருக் கேற்றார்போலவே இந்த ஆஞ்சநேயர் நின்ற திருகோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார். அதேசமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில், ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போலவும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உதவும் கருணையுடன் பார்ப்பது போலவும் அமைந்துள்ளது.
ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியம் என்பதால் இங்கு நவக்கிரக பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர், நாகர், சப்த கன்னிகள், கருப்பணசாமி தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
தல வரலாறு: 
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையநாயக்கனூர் ஜமீன்தாரான காமயசாமியின் கனவில் வீர ஆஞ்சநேயர் தோன்றி, வேகவதி ஆற்றின் தென்கரையில் (வைகை ஆற்றின் புராணப்பெயர்) தாழம்பூ புதருக்குள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாககவும், ஆலயம் அமைத்து வழிபடும்படியும் கூறினார். ஆஞ்சநேயரின் கட்டளைப்படி புதரை சுத்தம் செய்து பார்த்த போது சிறிய பாறை தென்பட்டது. அதை தோண்டி எடுக்க முயன்றும் முடியவில்லை. அதுவே வீர ஆஞ்சநேயராக சுயம்புவாக மாறியது. பின்னர் அந்த இடத்தில் கோயில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: பெயருக்கேற்றாற்போலவே இந்த ஆஞ்சநேயர் நின்ற திருகோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார். அதேசமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில், ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போலவும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உதவும் கருணையுடன் பார்ப்பது போலவும் அமைந்துள்ளது

அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டம்.


காலை 6.40 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் மதனகோபாலசுவாமி
தாயார் பாமா, ருக்மணி
தல விருட்சம் வாழை
ஆகமம் வைகானசம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
வரலாறு
ஒரு முறை சிவன், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின், சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் இலிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார். சிவன், தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். இதனால் சிவனின் உடலில் வெப்பம் அதிகமாகி, அக்னி ஜுவாலையாக மாறி இந்த உலகை பாதிக்கிறது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைக் கூறி இந்த உலகைக் காக்கும் படி வேண்டுகின்றனர். சிவனின் தியானத்தை கலைத்தால் மட்டுமே அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து, உலகம் காக்கப்படும் என்பதை அறிந்தார் விஷ்ணு. உடனே தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறார். இந்த இசை என்னும் இன்ப வெள்ளம் சிவனின் செவிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இசைக்கு மயங்கிய சிவன் கண் விழிக்கிறார். தியானம் கலைகிறது. உலகம் காக்கப்படுகிறது. சிவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் “மகாவிஷ்ணு, தாங்கள் எப்போதும் மதன கோபாலன் என்ற திருநாமத்துடன் என் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து என்னை மகிழ்விக்க வேண்டும்” என்றார். மகாவிஷ்ணுவும் சிவனின் விருப்படியே, மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையிலும் நன்மை தருவார் என்ற சிவாலயத்திற்கு அருகில், மதன கோபால சுவாமி என்ற கோயிலில் வீற்றிருந்து புல்லாங்குழல் இசைத்து சிவனையும் மகிழ்வித்து நம்மையும் காத்து அருள்புரிகிறார்.
ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன்பு, பெரியாழ்வாருடன் பல்லக்கில் வந்து இங்கு எழுந்தருளி மதனகோபாலரைத் தரிசனம் செய்துள்ளார்கள் என்றும், பின் ஆண்டாள் அரங்கப் பெருமானின் திருமேனியில் ஐக்கியமானார் என்றும் வரலாறு கூறுகிறது.
கோயிலில் நுழைந்தவுடன் இடதுபக்கம் அரசமரத்தடியில் முழுமுதற்கடவுளாக விநாயகர் அமர்ந்திருக்கிறார். மூலவர் மதனகோபால சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து, இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூபக் கண்ணனாகப் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர். மதுரவல்லி தாயார் தனிசன்னதியிலும், ஆண்டாள் தனி சன்னதியிலும் இருந்து அருள் பாலிக்கின்றனர்.
நவநீதகிருஷ்ணன், சேனை முதல்வர், கருடாழ்வார், நம்மாழ்வார், உடையார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரை இத்தலத்தில் நாம் தரிசிக்கலாம். கருவறையை கடக்கும் வழியில் இராமர் தனிசன்னதியில் காட்சி தருகிறார்.
மேலும் சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஹரி ஹர ஸர்ப்ப ராஜா, பஞ்ச முக ஆஞ்சநேயர் என ஒவ்வொருவரும் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கின்றனர். குழலூதும் கண்ணன், இராமானுஜர் சன்னதியும் உண்டு.
திருவிழா:
இத்தக்கோயிலில் மாதம் தோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி பாவை நோன்பு சிறப்பானவை.
கோரிக்கைகள்:
இசையில் நாட்டம் உடையவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வதால் இசை மேதை ஆகலாம் என்றும், இத்திருத்தலத்தில் அறுபதாம் கல்யாணம் செய்பவர்களின் சந்ததி சிறப்பு பெறும் என்றும் பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
இங்குள்ள நாக தேவி, ஹரி ஹர ஸர்ப்ப ராஜா என அழைக்கப்படுகிறார். இங்கு வெள்ளி தோறும் இராகு கால பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.
நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜை செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்

திருவெம்பாவை

திருவெம்பாவை

ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை பாடல்கள்:


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய் !!
(1)

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போது எப்போதுஇப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீ சீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன், சிவலோகன், தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்புஆர் யாம் ஆர்ஏ லோர் எம்பாவாய் !!
(2)

முத்துஅன்ன வெள்நகையாய் முன்வந்து எதிர்எழுந்துஎன்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துஉன் கடைதிறவாய்
பத்துஉடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குஉடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கு ஏலோர் எம்பாவாய் !!
(3)

ஒள்நித் தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள்நெக்கு நின்றுஉருக யாம்மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய் !!
(4)

மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்க ளேபேசும்
பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவுஅரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏழக் குழலி பரிசு ஏலோர் எம்பாவாய் !!
(5)

மானே நீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே எழுப்பவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடுஏலோர் எம்பாவாய் !!
(6)

அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏலோர் எம்பாவாய் !!
(7)

கோழிசிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழ்இல் பரஞ்சோதி கேழ்இல் பரங்கருணை
கேழ்இல் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடலோர் எம்பாவாய் !!
(8)

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன் அடியாற் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய் !!
(9)

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழம் தொண்டர் உளன்
கோதில் குலத்து அரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ஏதுஅவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசுஏலோர் எம்பாவாய் !!
(10)

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர்என்னக்
கையால் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழிஅடியோம் உயர்ந்தோம்காண் ஆர் அழல்போல்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகைஎல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய்எமை ஏலோர் எம்பாவாய் !!
(11)

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன்நற் றில்லைச் சிற் றம்பலத்தே தீஆடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டு ஆர்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேல்ஓர் எம்பாவாய் !!
(12)

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்து
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் போங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !!
(13)

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதிதிறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய் !!
(14)

ஓர்ஒருகால் எம்பெருமான் என்று என்றேம் நம்பெருமான்
சீர்ஒருகால் வாய்ஓவாள் சித்தம் களிகூர
நீர்ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பார்ஒருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார்உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர்உருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !!
(15)

முன்இக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிவேல்
பொன்அம் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவுஇலா எம்கோமான் அன்பர்க்கும்
முன்னி அவள் நமக்கும் முன்சுரக்கும் இன்அருளே
என்னப் பொழிவாய் மழை ஏலோர் எம்பாவாய் !!
(16)

செங்கண் அவன்பால் திசைமுகன் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதா
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !!
(17)

அண்ணா மலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்
கண்ணார்இரவி கதிர்வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் !!
(18)

உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்குஅப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க
எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க
இங்குஇப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏலோர் எம்பாவாய் !!
(19)

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல்லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடுஏலோர் எம்பாவாய் !!
(20)

*******

ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமான் திருப்பெருந்துறை தலத்தில் பாடி அருளிய திருப்பள்ளி எழுச்சி:

போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்று இதழ்க் கமலக்கண் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுஉயர் கொடியுடையாய் எமை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !!
(1)

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலர மற்றண்ணல் அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவை யோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலை கடலே பள்ளி எழுந்தருளாயே !!
(2)

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்போடு நமக்குத்
தேவ நற் செறிகழல் தாள்இணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !!
(3)

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !!
(4)

பூதங்கள் தோறும் நின் றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம் உனைக் கண்அறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய் எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்துஎம்மை ஆண்டு அருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே !!
(5)

பப்பற வீட்டி ருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்துறுத் தார்அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கண் மலரும் தண்வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டு அருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே !!
(6)

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்து அருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய் திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறு அது கேட்போம்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே !!
(7)

முந்திய முதல்நடு இறுதியும் ஆணாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்
பந்தனை விரலியும் நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருபெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவண்டு ஆண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே !!
(8)

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப் பொருளே உனதொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச் செய்தானே
வண் திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும் படியார்
எண்ணகத் தாய் உலகுக்குயிரானாய்
எம் பெரு மான் பள்ளி எழுந்தருளாயே !!
(9)

புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள் நாம்
போக்குகின் றோம்அவ மே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய் திருமாலாம்
அவன் விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே !!
(10)

அதிசய ஆலயம் அறிவோம்.: கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம்

அதிசய ஆலயம் அறிவோம்.: கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம்Ganesan Pondicherry

கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம்

கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு
என்பது வள்ளுவர் வாக்கு. இப்படிப்பட்ட கல்வியின் சிறப்பு நாம் அனைவரும் அறிந்ததே. அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடையும் போது செல்வங்கள் எனப்படும் நவநிதிகளும் கிடைத்தன. இந்த நவநிதிகளில் அனைத்து செல்வங்களும் இருந்தன. கல்விச் செல்வம் மட்டும் இல்லை. ஸ்ரீ ஹயக்ரீவரால் சரஸ்வதிக்கு இந்த கல்விச் செல்வம் அளிக்கப்பட்டதாக புராதன நூல்களில் கூறப் பட்டுள்ளது.

நவராத்திரி விழா வரலாறு:
சுபாகு என்பவர் ஆதி பராசக்தி அன்னையின் தீவிர பக்தராக விளங்கினார். சுபாகுவின் மகள் சசிகலையும் அப்படியே. சுபாகுவின் முறை மாமன் சுதர்சனன் என்பவரும் பராசக்தயின் பக்தராகவே விளங்கினார். ஆகவே சுதர்சனனுக்கு தன் மகள் சசிகலையை மணம் முடித்து வைத்தார் சுபாகு. இதனைக் கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை பராசக்தியே நேரில் தோன்றி வதம் செய்தார்.

பிறகு பராசக்தி அன்னை சுதர்சனனிடம், அயோத்தி சென்று, அங்கு நீதியுடன் அரசாளவும், தினமும் நாள் தவறாமல் தனக்கு பூஜை செய்யும் படியும் கட்டளை இட்டாள். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி விழாவின் போதும், அஷ்டமி , நவமி, சதுர்த்தி தினங்களில் தனக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் படியும் அன்னை கேட்டுக் கொண்டாள். அவ்வாறே அன்னையின் ஆணைப்படி, ஆகம முறைப்படி அனைத்துவிதமான பூஜைகளையும் அன்னைக்கு செய்து வழிபட்டார் சுதர்சனன். அம்பிகையின் பெருமைகளை ஊர் ஊராகச் சென்று பரவச் செய்தனர். இப்படி சுதர்சனனாலும், சுபாகுவினாலும் செய்விக்கப்பட்டதுதான் நவராத்திரி விழா.

நவராத்திரி ஒன்பது நாட்களிலும் முறையே மூன்று நாட்களுக்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என வழிபடுவது நன்மையை அளிக்கும். ஸ்ரீ ராமரும், ஸ்ரீ கிருஷ்ணரும் நவராத்திரி வழிபாடு செய்துதான் தங்களது கஷ்டங்களில் இருந்து விடுபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய மகிமையைக் கொண்டது நவராத்திரி விழா. கலைமகளான சரஸ்வதியை வழிபடும் தினமான சரஸ்வதி பூஜையன்று மாலை கொண்டாடப்படும் விழாவே ஆயுத பூஜை.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற புனிதத் தத்துவத்தை உணர்த்தும் விழாவே இந்த ஆயுத பூஜை. இந்த ஆயுத பூஜை நம் நாட்டில் மத வேறுபாடின்றி எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் செய்யும் தொழிலுக்கு உதவக் கூடிய ஆயுதங்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவே இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இன்றைய திருக்கோயில் பதிவில் கூத்தனூரில் அமைந்துள்ள அருள்மிகு மஹா சரஸ்வதி அம்மன் ஆலய தரிசனம் செய்வோம்.

திருக்கோயில் அமைவிடம்:இந்த மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள கூத்தனூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 km தொலைவில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து சுமார் 20 km தொலைவில் அமைந்துள்ளது.

திருக்கோயில் அமைப்பு:
தமிழகத்தில் சரஸ்வதிக்கென உள்ள ஒரே கோயில் இந்த கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம்தான். இக்கோயிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை. சரஸ்வதி தேவி குடியிருக்கும் கருவறைக்கு மேலே ஐந்து கலசங்களுடன் ஒரு கோபுரம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சரஸ்வதி தேவி வெண் தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். வெண்பட்டு உடுத்தியிருக்கிறார். வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும், வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார் சரஸ்வதி தேவி. கையில் வீணையுடன் கிழக்கு திசையில் காட்சி தருகிறார். இக்கோயிலில் துர்க்கையும், மகாலட்சுமியும், பெருமாளும் வீற்றிருக்கின்றனர். ஆனாலும் சரஸ்வதிக்கேன்றே உள்ள தனிக் கோயிலாகவே இக்கோயில் அழைக்கப்படுகிறது.

கோயில் பிரஹாரத்தில் பிரம்மா, ஒட்டக்கூத்தர், நர்த்தன விநாயகர் சிலைகள் உள்ளன. அன்னைக்கு எதிரே பலிபீடத்தின் முன்னே அன்னையின் வாகனமான அன்னம் அன்னையைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.

திருத்தல வரலாறு:
குலோத்துங்க சோழ மன்னனின் அவைப் புலவராக இருந்தவர் 
ஒட்டக்கூத்தர். இராமாயண காவியத்தில் ஏழாவது காண்டமாகிய உத்திரகாண்டத்தையும், குலோத்துங்க சோழனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட தக்கயாக பரணி என்ற நூலையும் படைத்த பெரும் புலவர் ஓட்டக்கூத்தர். இவரது கவிபாடும் ஆற்றலைக் கண்ட குலோத்துங்க சோழன், ஒரு ஊரையே பரிசாகக் கொடுத்தார். அப்படி பரிசாக வழங்கப்பட்ட ஊர்தான் கூத்தனூர் என அழைக்கப்படுகிறது. இந்த கூத்தனூரில் குடிகொண்டுள்ள அன்னை சரஸ்வதி தேவியின் அதீத அன்பைப் பெற்ற புலவர் ஒட்டக்கூத்தர். ஒட்டாக்கூத்தர் பரணி நூல் பாட சரஸ்வதி தேவி உதவி புரிந்ததாக கூறப்படுகிறது.

உயிர்களைப் படைக்கும் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி தேவி. பிரம்ம லோகத்துக்கே தான்னால் தான் பெருமை என்று சரஸ்வதி, பிரம்மா என இருவருக்குள்ளும் சர்ச்சை ஏற்பட்டது. இதன் காரணமாக பூலோகத்தில், சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோமனை என்ற தம்பதிக்கு மகனாக பிரம்மா பிறந்தார். பகுகாந்தன் என்ற பெயர் சூட்டப் பெற்றார்.சிரத்தை என்ற பெயருடன் சாஸ்வதி தேவி பிறந்தார். இருவருக்கும் திருமண ஏற்பாட்டை புண்ணியகீர்த்தி செய்யும் வேளையில், சிரத்தைக்கும், பகுகாந்தனுக்கும் முன்ஜென்ம நினைவு வந்தது. இருவரும் சிவனை வழிபட்டனர்.

சிவனின் அருள்பெற்ற சரஸ்வதி, கங்கையுடன் இணைந்தாள். கங்காதேவியின் ஒரு அம்சமாக மாறினாள். சரஸ்வதி தேவியும், பிரம்மனும் ஒன்று சேர்ந்தனர். கூத்தனூர் ஆபத்சகாயேஸ்வரர், பரிமள நாயகியின் அபிஷேக நீராக மாறினாள் சரஸ்வதி. கூத்தனூரில் மஹா சரஸ்வதி அம்மனாகக் குடிகொண்டாள். இந்த திருக்கோயில் கூத்தனூர் ஹரிச்சொல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

இக்கோயில் விஷேசங்கள்:
இத்திருக்கோயிலில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜய தசமியன்று புருஷோத்தம பாரதிக்கு அன்னையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பிள்ளைகளை அன்றைய தினம் பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக உள்ளது. அன்றைய தினம் இக்கோயிலில் மழலைகளுக்கு முதன் முதலாக கல்வி போதிக்கும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

தமிழ் வருடப் பிறப்பிலிருந்து தொடங்கி நாற்பத்தைந்து நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். ஆடி, தை வெள்ளிகளில் சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரம் அன்னைக்கு செய்விப்பது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று மாலை அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்னையின் மூல நட்சத்திர நாளிலும், கும்பாபிஷேக தினமான ஆனி மாதம் மக நட்சத்திர நாளிலும் ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெறுகிறது. சரஸ்வதிக்குரிய தினமான புதன் கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் தேனும் பாலும் அபிஷேகம் செய்வித்தால் நல்வித்தை பெறலாம் என்பது நம்பிக்கை.

இங்குள்ள நர்த்தன கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியன்றும், விநாயகர் சதுர்த்தியின் போதும், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப் படுகின்றன. மூலைப் பிள்ளையாரிடம் தண்ணீரை நிரப்பி வைத்து வழிபட்டால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

பிரம்ம புரீஸ்வரருக்கு மகா சிவராத்திரியன்று சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகிறது.ஆலயம் அறிவோம் - வாழ்க்கை கோயில்கள்

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நவதிருப்பதிகளில் சுக்ரன் ஸ்தலமாக விளங்கும் தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்.

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தித்த தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்கேன் அன்னைமீர்காள்
வெள்ளச் சுகமன் வீற்றிருக்க வேதவொலியும் விழா வொலியும்
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே!!
நம்மாழ்வார்

திருக்கோயில் அமைவிடம்:
இந்த தென்திருப்பேரை திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு, (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)
தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
விமானம்: பத்ர விமானம்
கிரகம்: சுக்ரன் ஸ்தலம்

திருத்தல வரலாறு:
வைகுண்டத்தில் ஒருநாள் ஸ்ரீதேவி கவலையுடன் காணப்பட்டாள். தன் பதி திருமால் தன்னைவிட பூமாதேவியிடம் தான் மிகுந்த அன்புடனும், பிரியத்துடனும் இருப்பதாக எண்ணிக்கொண்டு மனம் வருந்தினாள். தன்னுடைய இந்த வருத்தத்தினை துர்வாச முனிவரிடம் போய் சொல்லி முறையிட்டாள். தன்னை விட பூமாதேவி அழகு என்பதனால் தான் இவ்வாறு திருமால் நடந்துகொள்வதாக ஸ்ரீதேவி தானாகவே நினைத்துக்கொண்டு, துர்வாசரிடம் தன்னையும் பூமாதேவி போல வடிவத்தில் மாற்றுமாறு கூறினாள்.

அதற்குப் பிறகு துர்வாசர் பூமாதேவியைக் காணச் சென்ற வேளையில், திருமாலுடன் இருந்த பூமாதேவி தன்னை சரியான விதத்தில் விருந்தோம்பல் புரியாமலும், மதிக்காமலும் அலட்சியம் செய்வதைக் கண்டு கோபமுற்று, பூமாதேவியிடம், நீ ஸ்ரீதேவியின் உருவத்தைப் பெறுவாய், என சாபமிட்டார். தான் செய்த தவறினை உணர்ந்த பூமாதேவி, முனிவரிடம் சாப விமோசனம் கேட்க, தாமிரபரணியின் கரையிலே அமைந்துள்ள தென்திருப்பேரை என்னும் தலத்திற்கு வந்து ஓம் நமோ நாராயணாயஎன்ற மந்திரத்தை மனதாரச் சொல்லிவர, பங்குனி பௌர்ணமி, முழு நிலா நாளன்று, ஆற்று நீரை அள்ளி எடுக்கும் போது இரண்டு மகர குண்டலங்கள், மீன் வடிவிலான காதில் அணியும் அணிகலன்கள், பூமாதேவிக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் திருமால் பூமாதேவி முன் தோன்ற, தனக்குக் கிடைத்த காதணிகளை திருமாலுக்குக் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு பூமாதேவி தன் அன்புக் கணவரிடம் கொடுக்க, திருமாலும் அதனை விருப்பமுடன் அணிந்து கொண்டார்.

அந்த நிமிடமே பூமாதேவி தன் சுய உருவத்தினை அடைந்தாள். இந்த திருத்தலத்திலே பூமாதேவி, லக்ஷ்மி தேவியின் உருவத்தில், வடிவத்தில் காட்சி கொடுப்பதால், இத்தலம்திருப்பேரை என பெயர் பெற்றது. இன்றும் இத்தல பெருமாள் மகரகுண்டலங்களுடன் காட்சி தருகிறார். அதனாலேயே, இத்தல இறைவன் மகரநெடுங்குழைக்காதன் என அழைக்கப்படுகிறார்.

வருணன் பாசம் பெற்ற வரலாறு:
ஒரு சமயம் வருணன் அசுரர்களுடன் போரிட்டு, தனது பாசம், நாகம் போன்ற ஆயுதங்களை இழந்தான். உடன், இந்த திருப்பேரை திருத்தலம் வந்து தவம் இயற்றி, தான் இழந்த ஆயுதங்களை திரும்பப் பெற்றான். இதன் காரணாமாகவே, தற்போதும், மழை வேண்டி இத்தல இறைவனை வேண்டினால், அந்த வேண்டுதல் பொய்க்காது.

விதர்ப்ப நாட்டில் பஞ்சம் நீங்கிய வரலாறு:
முன்னொரு காலத்தில் விதர்ப்ப நாட்டில் ஒரு மாமாங்கத்திற்கு மழையே பொழியாமல் வானம் பொய்த்துப்போனது. நாடெங்கும் வறட்சி மிகுதியால் பஞ்சம் தோன்றியது. அந்நாட்டு அரசன், தன் குருநாதரைச் சந்தித்து, நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரிடம் யோசனைக் கேட்டான். குருவும் "திருப்பேரைத் திருத்தலம் சென்று மகரநெடுங்குழைக்காதரை வழிபட்டு வந்தால்" உன் நாட்டு மக்கள் துன்பம் தீரும் எனக் கூறினார். அவ்வாறே அம்மன்னன் செய்ய, அந்நாட்டில் மழை பெய்து வளம் பெற்றது.

பிரம்மனுக்கும், ஈசான்ய ருத்தரருக்கும் முன்னிலையில் குழைக்காத நாச்சியார்,திருப்பேரை நாச்சியார் சகிதமாக, பரமபத திருக்கோலத்தில் இத்தல பெருமாள் காட்சி அளிக்கின்றார். பக்த கோடிகள் வேதம் ஓதும் அழகிய காட்சியையும், குழந்தைகள் திருக்கோயிலில் மகிழ்ச்சியாக ஓடி விளையாடும் காட்சியையும் காணும் நோக்கத்துடன், தன் தலைசிறந்த பக்தன், கருடாழ்வாரை நேராக இல்லாமல் சற்று ஒதுங்கி அமரச் சொன்ன காரணத்தால், இத்திருக்கோயிலில் கருடன் சன்னதி, திருமால் சன்னதிக்கு நேர் எதிரே இல்லாமல் இடது பக்கம் சற்றே நகர்ந்து அமைந்த கோலம், வேறு எந்த திருத்தலத்திலும் காணாத அமைப்பாகும்.
இத்திருக்கோயிலில் 10-ம் நூற்றாண்டின் மத்தியில் கொடிமரமும், மண்டபங்களும், திருத்தேரும் அமைக்கப்பட்டுள்ளதாக இங்கு கிடைக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகின்றது. அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்த சுந்தரபாண்டிய மன்னன், தனக்கு பிள்ளை வரம் வேண்டி, தினப்படி திருமாலுக்கு பூஜை செய்ய, இவ்வூரைச் சேர்ந்த அந்தணர்கள் மட்டுமல்லாது, சோழ நாட்டில் இருந்து மேலும் 108அந்தணர்களை அழைத்து வர எண்ணினார். இவ்வூர் அந்தணர்கள், பெருமாளைத் தனக்குள் ஒருவராகவே எண்ணி நித்தியப்படி பூஜைகளையும் வெகு சிறப்பாகவும், பெரும் பக்தியுடனும் செய்து வந்தனர்.மன்னனின் எண்ணப்படி சோழ நாட்டில் இருந்து 108 அந்தணர்களை அழைத்து வரும் வேளையில், ஒருவர் மட்டும் காணாமல் போய்விட்டார். ஊருக்கு அனைத்து அந்தணர்களும் வந்து சேரும்போது மொத்தம் 107 நபர்களே இருந்தனர். பாண்டிய மன்னன் வந்து பார்க்கும்போது 108 அந்தணர்கள் இருந்தனர். திருமாலாகிய பெருமாளே 108-வதுஅந்தணராக வந்து சேர்ந்து கொண்டதாகவும், அதனாலேயே இத்தல இறைவன் தங்களுக்குள் ஒருவன் என இவ்வூர் மக்கள் கொண்டாடுகின்றனர்.கூடுபுனல் துறையும் குழைக்காதன் திருமாலையும் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது இவ்வூர் மக்களின் வழக்கில் உள்ள கூற்று. இத்தல இறைவனின் அழகை, பேரழகுடைய முகில் வண்ணன் என்றும், ஈடு இணையில்லாத அழகை உடையவன் என்றும் நம்மாழ்வார் தனது பாசுரத்தில் பாடியுள்ளார்.


அதைசாகி வையமுழுதாண்டாலும் இன்பக்கரைசார மாட்டார்கள் கண்டீர் முரைசாரும்தென் திருப்பேரைப் பதியான் சீர்கெட்டு நாவிலவன்தன்றிருப் பேரைப்பதியாதார்!!
108 திருப்பதி அந்தாதி

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.


திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள பெருமாள் ஆலயங்கள், நவதிருப்பதி ஸ்தலங்கலாகவும், அவற்றினை நவகிரகங்கள் உடன் தொடர்பு கொண்ட திருக்கோயில்களாகவும் வரிசைபடுத்தி நவதிருப்பதி என ஒன்பது பெருமாள் ஆலயங்களை வரிசைபடுத்தி ஆலய தரிசனம் செய்யலாம். இந்த நவதிருப்பதிகளின் வரிசையில், ஏற்கனவே நாம் சூரிய ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தையும், சந்திரன் ஸ்தலமான ஸ்ரீவரகுணமங்கை திருத்தலத்தையும், செவ்வாய் ஸ்தலமானதிருக்கோளூர் திருத்தலத்தையும், புதன் ஸ்தலமான திருப்புளியங்குடிதிருத்தலத்தையும் தரிசனம் செய்துள்ளோம். இப்போது, நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமான, ஆழ்வார் திருநகரி என்னும் திருத்தலத்தை தரிசிப்போம் வாருங்கள்.

நவ திருப்பதி ஆலயங்களை ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து, காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம் அனைத்து கோயில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.

திருக்கோயில் அமைவிடம்:
அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 kmதொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து35 km தொலைவிலும் அமைந்துள்ளது.

ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடியாடிப் பணிந்து பலபடிகளால் வழியேறிக் கண்டீர்
கூடிவானவரத்தே நின்ற திருக்குருகூரதனுள்
ஆடுபுட்கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே!!
ஸ்ரீ நம்மாழ்வார்

ஒன்றுந்தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றும் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றெத் தெய்வம் நாடுதிரே!!
ஸ்ரீ நம்மாழ்வார்

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி


திருத்தல வரலாறு:
இந்த ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல்ஆதிசேத்ரம்,குருகாசேத்ரம்திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள் உள்ளன. குருகு என்றால் சங்கு என்பது பொருள். அவ்வாறு ஆற்றில் மிதந்து வந்த சங்கு, இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருக்குருகூர் என்ற பெயர் வந்தது என்றும், பெரும் வெள்ளத்தால் உலகமே அழிந்து, மீண்டும் உருவானபோது முதலில் உண்டான இடம் என்பதால்ஆதிசேத்ரம் என்றும், நாம்மாழ்வார் கோயில் கொண்டு இருந்ததால் ஆழ்வார் திருநகரிஎன்றும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒரு சமயம் மகாவிஷ்ணுவின் அம்சமாக விளங்கும் வியாச முனிவரை அவரது பிள்ளையாகிய சுகமுனிவர், இந்த குருகாசேத்ரத்தின் மகிமையினைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிசைந்து வியாச முனிவரும் திருமாலுக்கு மிகவும் பிரியமான இந்த திருத்தலத்தின் மகிமையை கூறத் தொடங்கினார்.

குருகாசேத்திர மகிமை:
பரந்தாமனுக்கு பல அவதாரங்கள் எடுத்து தன் பக்தர்களிடம் திருவிளையாடல்கள் புரிவதே வேலை. அதுபோல் தன் பரம பக்தன் நான்முகனிடம் உயிர்களை படைக்கும் பவித்ரமான பணியினை பரந்தாமன் அளித்தாலும், பிரம்மனுக்கு அதனை செய்ய சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் திருமாலின் உதவியை நாடினான். அதன்படி விஷ்ணுபிரானை சந்தித்து தனக்குள்ள அச்சத்தைப் போக்கிக் கொண்ட பிறகு தன்படைப்புத் தொழிலில் அதிகாரம் செலுத்த விரும்பினான். அவ்வாறு திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தான். தனது கடும் தவத்தின் பலனாக நான்முகன் முன் விஷ்ணு தோன்றினார். பின்னர் பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவனது படைப்புத் தொழிலுக்கு எல்லாக் காலத்திலும் உறுதுணையாக இருப்பேன் என வாக்களித்தார். அதோடு உன் தவத்தின் வலிமையால் உன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரியும் வண்ணம் நான் இப்போது அவதரித்ததால், அதுவும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய இந்த ஸ்தலத்தில் முதன் முதலாக அவதரித்தத்தால், இந்த சேத்திரம் ஆதிசேத்திரம் என்ற பெயருடன் விளங்கும் என்றும் என் நாமம் ஆதிநாதன்எனவும் விளங்கட்டும் என பெருமாள் கூறி அருளினார். மேலும் நான்முகன் நாராயணனிடம், எனக்கு குருவாக இருந்து உபதேசித்ததனால் இச்சேத்திரம்குருகாசேத்திரம் என விளங்க வேண்டும் என கேட்க அப்படியே ஆகட்டும் என்றார் திருமால்.

அதன்பின் பிரம்மாவிடம் விஷ்ணு, நீ ஆதிசேத்திரம் சென்று ஆதிநாதனை வழிபட நீ நினைக்கும் காரியங்கள் கைகூடும் எனவும், யாரும் காணாத எனது திருமேனியை உனக்குக் காட்டியது மட்டுமல்லாமல், எல்லோரும் பார்க்கும் வண்ணம் குருகாசேத்திரத்தில் அவதரிக்கப் போகிறேன் என்றும், கலியுகத்திலே சடகோபர் என்னும் திருப்பெயருடன் யோகியாய் அவதரித்து வடமொழி வேதங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, அந்த வேதமறைகளைப் படிக்கும் மாந்தர் அனைவரும் முக்தியடையும் வண்ணம் சித்தம் செய்யப் போகிறேன் என்றும் கூறினார்.

யானையும் வேடனும் முக்தி அடைந்த வரலாறு:
முன்னொரு காலத்தில் புனித யாத்திரை செல்ல எண்ணிய மகான்கள் பலரும் ஆதிசேத்திரம் வந்து அத்தல தீர்த்தங்களில் நீராடி நாராயணனின் பெருமைகளை பேசித் தீர்த்து, அன்றைய வேலைகளை செய்து முடித்து பொழுதும் விடிந்தது. இத்தலத்திற்கு வந்து தங்கள் பொழுதைக் கழித்த முனிவர்களுக்கு அந்த பொழுது மிக இனிமையாகக் கழிந்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வாறு மனம் மகிழ்ந்திருந்த நேரத்தில், அத்திருத்தலம் வந்த ஒரு யானைக்கும் வேடனுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டு இருவரும் பலமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மாண்டனர். ஆனாலும் கூட தேவலோகத்தில் இருந்து இந்த யானையையும், வேடனையும் மேலோகம் அழைத்துச் செல்ல சுவர்க்கத்தில் இருந்து தூதுவர்கள் வந்திருந்தனர். அதே நேரத்தில் யானையும் வேடனும் சண்டையிட்டு செய்த பாவத்தின் பலனாக இருவரையும் நரகத்திற்கு அழைத்துச் செல்ல எமதூதர்களும் வந்திருந்தனர். எமதூதர்களால் விஷ்ணுதூதர்களை எதிர்க்க வழியில்லாமல் தங்களது கடமையைச் செய்யாமல் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். ஆறறிவு இருந்தும் பாவம் புரிந்த வேடனுக்கும், ஐந்தறிவு படைத்த யானைக்கும் இந்த சேத்திரத்தில் முக்தி கிடைத்த அரிய நிகழ்வைக் கண்ட முனிவர்கள் ஆச்சர்யத்துடன் இந்நிகழ்வை வசிஷ்ட முனிவரிடம் கூறினர். அவரும் இத்தல பெருமையினை மேலும் கூறலானார்.


தாந்தன் முக்தி பெற்ற வரலாறு:
பல காலங்களுக்கு முன்பு மந்தன் என்ற அந்தண சிறுவன் வேதம் கற்க ஆசைப்பட்டு வேத பாட சாலையில் சேர்ந்தான். ஆனால் அவன் ஆசைப்பட்ட விதத்தில் அவனால் வேதங்களை மனம் ஒன்றி படிக்க முடியவில்லை. இதனால் கோபமுற்ற அவனது குரு, மந்தனை சபித்து பாடசாலையில் இருந்து அனுப்பிவிட்டார். அதன்பிறகு அவன் திருக்கோயில்களில் வேலை செய்து தன் காலத்தைக் கழித்து பின் உயிரிழந்தான். அடுத்த பிறவியில் தாந்தன் என்ற பெயருடன் ஒழுக்க சீலனாக வாழ்ந்து வந்தான். ஆனால் அவனை யாரும் மதிக்காத சூழ்நிலையில், அவனை அனைவரும் ஒதுக்கிய சூழ்நிலையில்,குருகூர் தலம் வந்து ஆதிநாதனை வழிபட்டு அங்கேயே தனது வாழ்வை தொடர்ந்தான். இந்நிலையில் தாந்தனை ஒதுக்கியவர்களுக்கு திடீரென கண் பார்வை இல்லாமல் போனது. அவர்கள் அனைவரும் திருமாலைச் சரணடைந்தனர். நீங்கள் எல்லோரும் தாந்தனை ஒதுக்கிய காரணத்தினால் தான் உங்களுக்கு கண் தெரியாமல் போனது, நீங்கள் அனைவரும் தாந்தனிடம் மன்னிப்பு கேட்க உங்களுக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்கும் என திருமால் அசரீரியாய்க் கூறினார். அவ்வாறே நடந்தபின் திருமாலும் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் ஒன்றாய் தாந்தனுக்குக் காட்சிகொடுத்து தாந்தனை முக்தி அடையச் செய்தார். அதன் காரணமாக இத்தலம் தாந்தசேத்திரம் எனவும் பெயர் பெற்றது.

சங்கமுனிக்கு அருள் கிடைத்த வரலாறு:
பின்னொரு சமயம் தாந்தன் தங்கிய ஆலமரத்தின் கீழ் வேடன் ஒருவன் தங்கிய காரணத்தினாலேயே அவனது அடுத்த பிறவியில் சங்கன் என்னும் முனிவராக பிறந்து இறைவனடி சேர கடும் தவம் புரிந்தான். அவ்வாறு தவம் புரியும் வேளையில், சங்கு முனிவரை நாரத முனிவர் சந்தித்து, சங்கன் தவம் புரியும் காரணம் கேட்க, முக்தி அடையும் பொருட்டே தவமிருப்பதாக அவர் கூற, "நீ குருகூர் சென்று பெருமாளை வேண்ட முக்தி கிடைக்கும்" என நாரதர் கூறினார். அவ்வாறே சங்கனும், சங்காக மாறி குருகூர் சென்று திருமாலை வழிபட்டு முக்தி அடைந்தார். அந்த இடம் இன்றும்திருச்சங்கண்ணி துறை என அழைக்கப்படுகிறது.

பஞ்ச சேத்திரமாக விளங்கும் குருகாசேத்திரம்:
ஆதி சேத்திரம்:
பூலோகத்தில் உள்ள திருமால் ஆலயங்களில் மகாவிஷ்ணு முதன் முதலாக வாஸம் செய்த தலம் என்பதால் ஆதி சேத்திரம் எனவும், இத்த இறைவனுக்கு ஆதிநாதன் எனவும் பெயர் வந்தது.

வராக சேத்திரம்:
பெரும் வெள்ளத்தில் அழிய இருந்த பூமியை, திருமால் வராக அவதாரம் எடுத்து காப்பாற்றிய ஸ்தலம் என்பதாலும், பூமாதேவிக்கு ஞான உபதேசம் செய்வித்த ஞானபிரான் குடிகொண்ட ஸ்தலம் என்பதாலும், வராக சேத்திரம் என்ற பெயர் வந்தது. இந்த ஞானபிரான் சன்னதி திருக்கோயிலின் உள்ளே முதல் பிரகாரத்தில் அமைந்துள்ளது.

சேச சேத்திரம்:
ஆதிசேஷன் உறங்காப்புளியாக வாழும் ஸ்தலம் என்பதாலும், அதன் அருகிலேயே நம்மாழ்வார் பிறந்து வளர்ந்து குடிகொண்ட திருத்தலம் என்பதாலும் சேச சேத்திரம் என வழங்கப்படுகிறது.

தீர்த்த சேத்திரம்:
தாமிரபரணி ஆறும், அதில் உள்ள திருச்சங்காணித் துறையும் தீர்த்தங்களாக விளங்குவதால் தீர்த்த சேத்திரம் என அழைக்கப்படுகிறது.

தாந்த சேத்திரம்:
தாந்தன் என்னும் மானிடனை திருமாலின் அருளினால் தேவர்களும் வணங்கும் வண்ணம் உயர்த்திய ஊர் என்பதால் தாந்த சேத்திரம் என பெயர் வந்தது.

நம்மாழ்வார் வரலாறு:
பெருமாள் முன்பு, "கலியுகத்திலே வடமொழி வேதங்களை தமிழில் உருவாக்க சடகோபன்என்ற பெயரில் அவதரிப்பேன்" என்று கூறியதுபோல, பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரியர், உடையநங்கை தம்பதிகளுக்கு, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார். அவ்வாறு பிறந்த குழந்தை பாலுண்ணுதல், அழுதல் என எந்த இயற்கையான செயல்களையும் செய்யாமல் இருந்தது. வழக்கத்திற்கு மாறாக வளர்ந்த அக்குழந்தையை மாறன் என்றும் பாராங்குசன் என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர். தன் குழந்தையின் இந்த நிலை கண்டு கவலையுற்ற பெற்றோர், குழந்தையை திருக்குருகூர் கோயில் கொண்டு வந்து, ஆதிசேஷன் புளிய மரமாக உள்ள மரத்தில் தொட்டில் கட்டிப் போட்டனர்.


இந்நிலையில் சடகோபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்கோளூரில் பிறந்த மதுரகவி, திருமாலை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வயலில் மேய்ந்த பசு மாட்டினை மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிய வேகத்தில் கால் இடறி கீழே விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திய மதுரகவி, அப்பாவத்தைப் போக்க எண்ணி புனித நீராடும் பொருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு நேரத்தில், வானத்தில் பேரொளியைக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாதையிலேயே பல நாட்கள் நடந்து வந்து கொண்டே இருந்தார். அந்த ஒளியானது திருக்குருகூர் வந்ததும் மறைந்து போனது. ஜோதியாக வந்து தன்னை ஆட்கொண்டது திருக்குருகூர் புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை மதுரகவி கண்டுகொண்டார். அதன்படியே சடகோபரை அடைந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யப்பிரபந்தத்தை உபதேசித்தருளினார். மேலும் ரிக், யஜூர், அதர்வண வேதங்களின் சாரத்தை முறையே திருவிருத்தம்,திருவாசிரியம்பெரியதிருவந்தாதி போன்றவற்றையும் உபதேசித்தார். எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர்என்ற பெயரும் உண்டானது.


ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார். அந்த வகையில்பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.

நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். 31 ஆண்டு காலம் இந்த புளிய மரத்தடியில் 36 பெருமாளைப் பற்றி பாடியதால் இந்த மரத்தினைச் சுற்றி 36 திவ்ய தேசப் பெருமாளின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. நம்மாழ்வார், தனது 35-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரது பூத உடல் பள்ளிகொண்டுள்ள இடத்தில் திருக்கோயில் அமைத்து வைகாசித் திருவிழாக் கொண்டாடினார் மதுரகவி ஆழ்வார். வட மொழியில் நான்கு வேதங்கள் உள்ளது போல் தமிழில் நான்கு வேதங்களை உருவாக்கியுள்ளார் நம்மாழ்வார். இவர் இயற்றிய திருவாய்மொழிதிராவிட வேதம் என அழைக்கப்படுகிறது.

நாதமுனிகளின் தமிழ்த் தொண்டு:
மதுரகவி ஆழ்வாரின் காலத்திற்குப் பிறகு நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களும் எங்கு போனதென்று தெரியவில்லை. பிற்காலத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வீரநாராயணபுரம் என்று அழைக்கப்படும் காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் அவதரித்த நாதமுனிகள் என்ற வைணவ ஆச்சாரியாரின் பெரும் முயற்சியால் அனைத்து நாலாயிர திவ்வியபிரபந்த பாடல்களும் கிடைக்கப் பெற்றன. அவரது சீரிய தொண்டினால் நாடெங்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பரவின. நாதமுனிகளின் தமிழ் தொண்டு போற்றுதற்குரியது.

திருப்புளிய மர வரலாறு:
ஸ்ரீராமர் தனது அவதாரப் பயனை உலகத்திற்கு வழங்கி மனநிறைவு பெற்று, வைகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அயோத்தியில் ஸ்ரீராமரைக் காண எமதர்மராஜா வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என ராமர், இலக்குவனுக்கு ஆணையிட்டார். அந்த சமயத்தில், கோபத்திற்குப் பேர் போன துர்வாச முனிவர் அங்கு வர, அவரது கோபத்தைப் பற்றி நன்கு அறிந்த இலக்குவன், ராமரது ஆணையை மீறி முனிவரை உள்ளே விட்டான். அப்போது ராமன் முனிவரை நல்ல விதமாக உபசரித்து பேசி வழியனுப்பி வைத்தாலும், தனது பேச்சை மீறிய இலக்குவன் மீது கோபம் கொண்டார். எமதர்மராஜரும் சென்றபின், இலக்குவனைப் பார்த்து "நீ அசையாப் பொருளாக ஆவாயாக" என சாபமிட்டார்.


இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இலக்குவன் தன் சகோதரனிடம் மன்னிப்பு கோரினார். மனமிரங்கிய ராமர், நான் அளித்த சாபம் நடந்தே தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா தேவியை காட்டுக்கு அனுப்பிய காரணத்தால், உறங்காப் புளியாக, அசையாப் பொருளாக மாறப் போகும் உன் அருகிலேயே ஐம்புலன்களையும் வென்ற பிரம்மச்சாரியாக சடகோபன் என்ற பெயருடன் அவதரிக்கப் போகிறேன் எனக் கூறினார். வானுலகத்திற்கு கற்பக விருட்சம் போல் பூலோகத்திற்கு இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை. பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது. சுவாமி நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம், சுமார்5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால், இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த குருகூர் ஸ்தலம், கம்பர், ராமானுஜர் வழிபட்ட பெரும் சிறப்பு பெற்ற ஸ்தலங்களாகும். மணவாள மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும்.

திருக்கோயில் அமைப்பு:
திருக்கோயில் ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது. திருக்கோயிலின் முன்புறம் பந்தல் மண்டபம் என அழைக்கப்படும் கல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த கல் மண்டபத்தைத் தாண்டி, மாட வீதியைத் தாண்டிச் சென்றால் ராஜ கோபுரம் வருகிறது. கோயிலின் உள்ளே பலிபீடமும், அதனை அடுத்து கொடிமரமும் அமைந்துள்ளன. கருடர் சன்னதியைத் தாண்டிச் சென்றால் ஆதிநாதனின் மூலவர் சன்னதி அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. கருட பகவான் எல்லா கோயில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார். இத்திருக்கோயில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும், நாகரும், சங்கு சக்கரத்துடனும் காணப்படுகிறார்.


பின்னர் ஸ்ரீ ராமர் சன்னதி, சேனை முதலியார் சன்னதி, பொன்னீந்த பெருமாள் சன்னதியையும் காணலாம். உட்பிரகாரத்தில் வேணுகோபாலன் சன்னதியும், ஞானபிரான் சன்னதியும், ஞானபிரான் கருடனும், ஆதிநாயகி சன்னதியும், பன்னிரு ஆழ்வார் அறையும் அமைந்துள்ளன. இராப்பத்து மண்டபத்தினை அடுத்து உறங்காப்புளி என்றும் திருப்புளி என்றும் அழைக்கப்படும் இக்கோயில் தலவிருட்சம் அமைந்துள்ளது. இதன் பின்புறம் பரமபத வாசல் அமைந்துள்ளது.

கோயிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தனி கோயில் உள்ளது. அதனை அடுத்து நாதமுனி சன்னதி, யாகசாலை, பன்னிரெண்டு ஆழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, திருவேங்கடமுடையான் சன்னதிகள் அமைந்துள்ளன. ஆதிநாதர் சன்னதியின் வெளிபிரகாரத்தில் கண்ணாடி மண்டபம், கம்பர் அறை அமைந்துள்ளன. கோயில் மதிலுக்கு வெளியே ஸ்ரீ பட்சிராஜர் சன்னதியும், ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியும், அனுமன் சன்னதியும் அமைந்துள்ளன.

சிற்பக்கலை:
இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும்கல் நாதஸ்வரமும்கல் படிமங்களும்இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது.


இத்திருக்கோயிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. இத்திருக்கோயில் சிற்பம், இசை, கட்டிடக்கலையில் மட்டுமல்ல ஓவியத்திலும் சிறந்து விளங்குகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் தனிக் கோயிலைச் சுற்றி உள்ள பிரகாரச் சுவர்களில் 108 திவ்யதேசப் பெருமாள்களின் உருவங்கள் ஓவியங்களாய்த் தீட்டப் பட்டுள்ளன. பல் வேறு வரலாற்றுக் கதைகளும் ஓவியங்களாய்த் வரையப்பட்டுள்ளன.

கொண்டாடப்படும் உற்சவங்கள்:
ஆனி மாதம் வசந்த உற்சவம், ஆடி மாதம் திரு ஆடிஸ்வாதி, ஆவணி மாதம்திருப்பவுத்திர உற்சவமும்உறியடி உற்சவமும், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் உற்சவமும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும்பெருமாள்ஆழ்வார்ஸ்ரீ வைகுண்டம் செல்லுதல் திருவிழாவும்,சித்திரைத் திருவிழாவும்சித்திராப் பௌர்ணமி திருவிழாவும்வைகாசிப் பெருவிழாவும்கருட சேவையும்மாசி உற்சவமும்பங்குனி உற்சவமும்வைகுண்ட ஏகாதசி விழாவும் என வருடம் முழுவதும் திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

எதிர்காலத் தலைமுறையினருக்கு திருக்கோயில்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் சமுதாய நலனுக்கு எந்த விதத்தில் கோயில்கள் நலம் பயக்கின்றன என்பன பற்றி எடுத்துரைக்க வேண்டியது நம் எல்லோரது கடமையாகும்.