ஆசியாவின் பிரமாண்ட விநாயகர்!
கணபதியே சரணம்!
கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது ஸ்ரீமுந்தி விநாயகர் ஆலயம். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.
இந்த ஆலயம், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
எதுவாக இருப்பினும், என்ன இன்னல் வந்திடினும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து வைப்பாராம் இவர். எனவே, இவருக்கு ஸ்ரீமுந்தி விநாயகர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர். அனைத்துக் கடவுளருக்கும் முதன்மையானவர் என்பதாலும் இந்தத் திருநாமம் இவருக்கு!
'முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும், 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190 டன் எடை கொண்டவராகத் திகழ்கிறார். இன்னொரு சிறப்பு... இந்தச் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன்கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகக் கடவுள். அவரின் கிரீடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு!
வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை'' என்கிறார் கோயிலின் கார்த்திகேய குருக்கள்.
'பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.
'சித்திரை முதல் நாள், சுமார் 3 டன் எடை கொண்ட பலவகை பழங்களால், விநாயகருக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்வதும் பக்தர்களுக்கு பழங்கள் விநியோகிப்பதும் சிறப்புற நடைபெறும். அதேபோல் விநாயக சதுர்த்தி நாளில், அதிகாலையிலேயே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுடன், மூன்று டன் எடை கொண்ட பல மலர்களால் ஆன மாலையை அணிவிக்கப் பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார்.'' எனத் தெரிவிக்கிறார் குருக்கள்.
விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிள்ளையாரைத் தரிசித்துச் செல்வார்கள். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமுந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!
- அ.சியாமளா கௌரி
படங்கள்: மு.குகன்
-Ganesan Pondicherry -