திருநெல்வேலி - நெல்லையப்பர் ஆலயம்

திருநெல்வேலி - நெல்லையப்பர் ஆலயம்
****************************************************************

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஆச்சரியமான பல சிற்பங்களை உள்ளடக்கிய ஆலயம். வெளியிலிருந்து பார்க்கும் போது சிறிய கோயிலாயிருக்குமென எண்ணினால் அது எவ்வளவு பெரிய தவறு என உள்ளே நுழைந்ததுமே உணரவைக்கும். 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆலயம். தமிழகத்துக்கே உரித்தான கட்டிடக்கலை அம்சத்துடன் பல சிறப்புகள் வாய்ந்தது இத்திருக்கோவில். இங்குள்ள இசைத்தூண்கள் இத்திருக்கோவிலுக்கான தனி அடையாளம்.

தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயர் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும். சிவபெருமானுக்கும், காந்திமதி தாயருக்கும் திருமணம் நடந்த போது, கன்னி தானம் செய்ய திருமால் திருநெல்வேலிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இத்திருக்கோவிலைச் சுற்றியுள்ள ஊர்களிலேயே நவதிருப்பதி என்றழைக்கப்படும் ஒன்பது தளங்கள் உள்ளன. 

கோயிலின் மூலக்கதை 


முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். 

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது

ஊர்ப்பெயர்க் காரணம் 


முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.

குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்துவிடப் போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்

மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் அசந்தார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார். திருநெல்வேலி என்ற பெயர் வருவதற்கும் இச்சம்பவமே காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

கோயில் அமைப்பு

*ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

* கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

* இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

* மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியில் இருந்து அப்படியே வெளியேறவும வழி உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இது போல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.

சீபலி மண்டபப் பிரகாரத்தில் உள்ள ஆறுமுக நயினார் விக்கிரகம் ஒரே கல்லில் மயில் வாகனத்தோடும், தேவியர்களோடும் விளங்குவது தமிழரின் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று.

சிறப்புக்கள் 
* சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. 

* சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று. 

*திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க தலமாக விளங்குகிறது § அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது., 

*சொக்கநாபிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது. 

* 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம் அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் முதலில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும், பின்னர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாறனாலும் கட்டப்பட்டது. சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் இவற்றின் அமைப்பு பழங்காலத் தமிழர் சிற்பக்கலைச் சின்னமாகும். சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் வீடாக இத்திருக்கோவில் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவிலுக்கு அருகில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 

கல்வெட்டுகள்: மிகப் பழமையான கல்வெட்டு கி.பி 950 ல் இருந்த வீரபாண்டியன் சாசனங்கள் ஐந்து. இவை வட்ட எழுத்தில் எழுதப்பட்டவை. கல்வெட்டுகள் பாண்டியர்கள் சோழர்களை வென்றதாகச் சொல்கிறது.

ஆன்மீக சிந்தனையில் அடியேன் 
-கணேசன் பாண்டிச்சேரி-

அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர்

அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் வரகூர்
<><><><><><><><><><><><><><><><><><><><>

ஆசை ஆசையாய் காதலித்து கை பிடித்த கணவனை சில பெண்கள் மாயா சதி வலையில் விழவைத்து கணவன் மனைவிகளை பிரித்துவிடுவர் ,தம்பதிகளை பிரிக்க எத்தகைய சதி செய்தாலும் அவர்களின் செயல்கள் யாவற்றையும் சக்தி வாய்ந்த இடமுண்டு 

தம்பதிகள் இணைபிரியாமல் ஒன்றாய் வாழ்வதற்கும் நன்றாய் வாழ்வதற்கும்
அந்த வாஸ்து சக்தி நிறைந்த இடம் ஸ்ரீ வரகூர் வெங்கடேசபெருமாள் கோவில்
இங்கு பெருமாள் யாராலும் பிரிக்கமுடியாதபடி ஆதரவாக பிராட்டியாரை அணைத்தபடி உள்ளார் பிராட்டியும் தன்னை எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாதபடி அன்பொழுக தழுவியுள்ளார் 


இத்தலத்துக்கு பெண்கள் வந்து ஒன்பது கஜசேலையை பிராட்டிக்கு சாற்றி 108 மஞ்சள் தானமாக அளித்தால் எந்த தீய சக்தியும் கணவன் மனைவியை பிரிக்க முடியாது 

இன்று வரகூர் என்று அறியப்படும் இந்த ஊரின் பழைய பெயர் பூபதிராஜபுரம் . குடமுருட்டியாறு காவிரியின் கிளை ஆறு. குடமுருட்டி ஆற்று கரையில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது .ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்ற மகான் கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற மகா காவியத்தை வரகூரில் தான் படைத்தார். 

ஆந்திரத்தை சேர்ந்த நாராயண தீர்த்தர் ஒரு நதியை கடக்கும் போது ஏற்பட்ட திடீர் வெளள் பெருக்கால் தெற்கு நோக்கி பயணம் செய்கிறார். குடமுருட்டி ஆற்றை கடக்கும் பொது கடும் வயிற்று வலியால் .அவதிபடுகிறார். அன்று கனவில் தோன்றிய கடவுள் ஒரு வெள்ளை வரஹத்தை (பன்றி ) பின் பற்றி செல்ல கட்டளையிடுகிறார்.அந்த வராகம் பூபதிராஜபுரத்தில் உள்ள பெருமாள் கோவில் உட்புறம் சென்று மறைந்து விடுகிறது.

அன்று முதல் ஊர் பெயர் வராஹபுரி என்று மாறி பின்பு மறுகி வரகூர் என்று இன்று அறியபடுகிறது என்பது இந்த ஊரின் தல வரலாறு .தன பிணி நீங்கியதை உணர்ந்த நாராயணர் வரகூரில் தங்கி மகாபாரதத்தில் உள்ள சாரத்தை உள்ளடக்கி கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற காவியத்தை வடமொழியில் படைக்கிறார். நாராயணர் வரகூரில் தங்கி தான் இயற்றிய பாடல்களை பாடிய பொழுது திரைக்கு பின் பெருமாள் நடனமாடியதாகவும் ,சலங்கை சத்தம் கேட்டதாகவும் சொல்லபடுகிறது . 

இன்னொரு சிறப்பு அனுமார் தாளம் போட்டதாவகவும் சொல்லபடுகிறது. அதனால் வரகூர் ஆஞ்சநேயருக்கு தாளம் தட்டி ஆஞ்சநேயர் என்று பெயர்.இந்த கோவிலில் கிருஷ்ணா ஜெயந்தி பெரிய திருவிழாவாக கொண்டாடபடுகி.றது வரகூர் கோவிலின் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தம் . வரகூர் பெருமாளின் பெயர் லக்ஷ்மிநாராயணர் .லக்ஷ்மி பெருமாளின் இடது தொடையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். குழந்தை வரம் வேண்டுவோர் பெருமாள் காலடியில் வைத்து வேண்டிய கொலுசை அணிவது இங்கு வாடிக்கை. 

இன்னொரு சிறப்பு பெருமாள் கோவிலின் மிக அருகிலேயே சிவன் கோவிலும் உள்ளது . பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவிலில் ஆண்கள் மேல் சட்டையை கழட்டி விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும் 

அருள்மிகு வெங்கடேசப் பெருமாள்

திருக்கோயில்நடுக்காவேரி வரகூர் 613 101, தஞ்சை மாவட்டம்+91 4362 280856 94436 74911 94428 52145


தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி கல்லணை சாலையில் நடுக்காவேரியைத் தாண்டியவுடன் 
கருப்பூருக்கு அடுத்து உள்ள தலம். பூதலூர் ரயில் நிலையத்திலிருக்து 7 
கி.மீ. இருப்பினும் சாலை வழி வசதிகள் குறைவாக உள்ளதால் பூதலூரிலிருந்து 
வருவதைக் காட்டிலும் தஞ்சையிலிருந்து வரலாம். தஞ்சையிலிருந்து 25 கி.மீ. 
திருவாற்றையிலிருந்து 15 கி.மீ. செந்தலைக்குத் தெற்கே உள்ளது. தஞ்சை பஸ் 
நிலையத்திலிருந்து கண்டியூர், நடுக்காவேரி, இந்தலூர், இளங்காடு, பூண்டி 
மாதா கோவில் செல்லும் பேருந்துகள் வரகூர் கிளைப்பாதை வழியாக செல்கின்றன. 
காலை 4 மணி முதல் இரவு 1 மணி வரை பேருந்துகள் உண்டு.ஸ்ரீ
லட்சுமி நாராயணர் ஸ்ரீ மகாலட்சுமித் தாயார் வீற்றிருந்த கோலம் கிழக்கு 
திருமுகம் ஸ்ரீ வெங்கடேசர் பூமிதேவி, ஸ்ரீதேவித் தாயார்
பிரதி வருடம் காயத்ரி ஜபம் தொடங்கி ஆவணி மாதத்தில் 10 நாட்கள் உறியடி 
உற்சவம் வழுக்குமரப் போட்டியிடன் நடைபெற்று கோகுலாஷ்டமியுடன் இணைத்து 
விமரிசையாக நடைபெறுகிறது. ருக்மணி கல்யாணமும் ஹனுமத் ஜெயந்தியுடன் நிறைவு 
பெறுகிறது.

திறக்கும் நேரம்: 6.00 முதல் 12.15,மாலை 5.00 முதல் 08.15 வரை
.

ஆன்மீகச்சிந்தனையில் அடியேன் கணேசன் பாண்டிச்சேரி

ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோயில்


இன்றைய இந்தியாவின் தமிழகத்தில், விருத்தகாசி என்றழைக்கப்படும் விருத்தாசலத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் தெற்கு திசையில் அமைந்திருப்பதே ஸ்ரீமுஷ்ணம் என்னும் திருத்தலம். ஆதி வராஹ பெருமாள் திவ்யமான பன்றி ரூபத்தில் தோன்றியதால், இவ்விடம் வராஹ க்ஷேத்திரம் என்று போற்றப்படுகிறது. சைதன்ய மஹாபிரபுவின் தென்னிந்திய பயணத்தின்போது, இவ்விடம் விருத்தகோலா என்று அறியப்பட்டது; வராஹ பெருமாள் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்வ்யக்த க்ஷேத்திரம் என்றும் இவ்விடம் புகழப்படுகிறது. இத்திருக்கோயிலின் வரலாற்றை அறிவதற்கு முன் வராஹ அவதாரத்தின் பின்னணியைச் சற்றேனும் தெரிந்துகொள்வது அவசியம்.
வராஹ அவதாரம்
பன்னெடுங் காலத்திற்கு முந்தைய யுகம் ஒன்றில், ஒருநாள் மாலை வேளையில் மரீச்சியின் புதல்வரான கஷ்யப முனிவர், பகவான் விஷ்ணுவை வழிபட்டுக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் தக்ஷனின் மகளான திதி தன் கணவரான கஷ்யபரை அணுகி தன் காம இச்சைகளை உடனடியாகத் தணிக்கும்படி மன்றாடினாள். திதியின் வற்புறுத்தலினால், அந்த அமங்களகரமான மாலை வேளையில் கஷ்யப முனிவரும் திதியும் ஒன்று கூடினர்; இருப்பினும், தவறான நேரத்தில் ஒன்று கூடியதை நினைத்து திதி வருத்தப்பட்டு அழுதாள். அப்போது கஷ்யப முனிவர், உனக்குப் பிறக்க இருக்கும் இரு புதல்வர்கள் உலகையே அச்சுறுத்தும் அசுரர்களாக இருந்தாலும், உன் பேரன்களில் ஒருவன் (பிரகலாதன்) சிறந்த ஹரி பக்தனாகத் திகழ்வான்," என கூறி திதியைத் தேற்றினார்.
திதி தன் இரு அசுர குழந்தைகளான ஹிரண்யாக்ஷனையும் ஹிரண்யகசிபுவையும் தன் கருவில் 100 வருடம் சுமந்தாள். இந்த இரு அசுர குழந்தைகளும் பூமியில் பிறப்பதற்கு காரணமாக வைகுண்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நடைபெற்றது.
நான்கு குமாரர்களின் சாபம்
ஸனக, ஸனந்தன, ஸநாதன, ஸனத்குமார என்னும் நான்கு குமாரர்களும் ஒருநாள் நாராயணரை தரிசிப்பதற்காக வைகுண்டம் சென்றனர். அப்போது வாயிற் பாதுகாவலர்களான ஜெயன், விஜயன் ஆகிய இருவரும் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபம் அடைந்த நான்கு குமாரர்கள் ஜெயன், விஜயனை பௌதிக உலகில் பிறக்கும்படி சபித்தனர். இச்செய்தியை அறிந்த நாராயணர் வைகுண்டத்தின் நுழைவாயிலுக்கு விரைந்தார். ஜெயன், விஜயனின் எஜமானர் என்கிற முறையில் தன் சேவகர்களின் தவறுக்காக நாராயணர் நான்கு குமாரர்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டார். அதன் பின், ஜெயன், விஜயனிடம், பௌதிக உலகில் மூன்று பிறவிகளுக்கு எனது எதிரியாக பிறக்க விருப்பப்படுகிறீர்களா, ஏழு பிறவிகளுக்கு எனது நண்பராக இருக்க விருப்பப்படுகிறீர்களா?" எனக் கேட்டார்.
வைகுண்டத்தில் இருக்கும் நாராயணரை ஏழு பிறவிகளுக்கு பிரிந்திருப்பதை விட மூன்று பிறவியில் எதிரியாக செயல்பட்டு விரைவாக வைகுண்டத்திற்கே வந்து விடும் நோக்கத்தில், அவர்கள் இருவரும் அசுரர்களாகச் செயல்பட முன் வந்தனர். அப்போது, நான்கு குமாரர்களின் சாபம் தன்னால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் தன்னுடைய விருப்பமும் அதுவே என்றும் நாராயணர் தெரிவித்தார். பகவான் நாராயணரின் திட்டத்தைத் தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்த நான்கு குமாரர்கள், நுழைவாயிலில் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதும் பகவானின் விருப்பமே என உணர்ந்தனர்.
மூன்று பிறவி அசுரர்கள்
வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களான ஜெயன், விஜயன் முதற் பிறவியில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்றும், இரண்டாவது பிறவியில் இராவணன், கும்பகர்ணன் என்றும், மூன்றாவது பிறவியில் சிசுபாலன், தண்டவக்ரன் என்றும் பிறப்பெடுத்தனர். வைகுண்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே பக்தர்கள் என்பதால், நாராயணரால் அங்கே யாரிடமும் சண்டையிட முடியாது. அதே சமயம், யாரிடமாவது சண்டையிட வேண்டும் எனும் பகவான் நாராயணரின் விருப்பம், அவர் பௌதிக உலகில் அவதரிக்கும்போது நிறைவேறுகிறது.
அதாவது, தன்னிடம் கடுமையாக சண்டையிடுவதற்குத் தகுதி வாய்ந்த நபர்களை பகவான் நாராயணரே தேர்ந்தெடுக்கிறார். இருப்பினும், ஜெயன், விஜயன் ஆகிய இருவரும் பௌதிக உலகில் மூன்று பிறவிகளுக்கு அசுரர்களாக செயல்பட்ட நிகழ்ச்சி, பிரம்மாவின் நாளில் ஒருமுறை மட்டுமே நடைபெற்ற நிகழ்ச்சியாகும். அதாவது, பகவான் பௌதிக உலகில் அவதரிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஜெயன், விஜயன் தோன்றுவதில்லை. பகவானுடன் போரிடும் அளவிற்கு தகுதி வாய்ந்த அசுரர்கள் அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிரிகளாகச் செயல்படுகின்றனர்.
ஹிரண்யாக்ஷன் பிரம்மாவிடம் வரம் பெறுதல்
ஜெயன், விஜயன் ஆகிய இருவரும் தங்களது முதல் பிறவியில், கஷ்யபரின் இரு மகன்களாகப் பிறந்தனர். கஷ்யபர் அவர்களுக்கு ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என பெயரிட்டார். இந்த இரு அசுர சகோதரர்களும் பௌதிக உலகில் பிறந்தபோது, இயற்கையின் சீற்றங்களான பூகம்பம், பலத்த காற்று, அசுப கிரகங்கள் பலம் பெறுதல், சூரிய சந்திர கிரகணங்கள் மாறி மாறி தோன்றுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன. நரி ஊளையிடுதல், பயத்தில் மாடுகள் உறைந்து போகுதல் போன்ற அபசகுனங்களும் தென்பட்டன.
ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு ஆகிய இருவரும் கடுந்தவம் மேற்கொண்டு, ஏறக்குறைய சாகா வரத்தைப் போன்ற ஒரு வரத்தை பிம்மாவிடம் பெற்று, கர்வத்தினால் மூவுலகையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தனர். ஹிரண்யாக்ஷனின் வருகையைக் கண்ட இந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் தங்கள் லோகத்தை கைவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு சென்று ஒளிந்து கொண்டனர். இந்திர லோகமும் காலியாக இருப்பதை கண்ட ஹிரண்யாக்ஷன் தேவர்கள் சண்டை போடாமலேயே தோற்றுவிட்டதை ஒப்புக் கொண்டுவிட்டனர் என எண்ணி பெருமிதம் கொண்டான். சுவர்க்க லோகத்தை விட்டு ஹிரண்யாக்ஷன் சமுத்திரத்தினுள் சென்றபோது, அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் பயத்தில் நீரை விட்டு வெளியே சென்றன.
பின் வருண தேவரின் தலைநகரான விபாவரிக்கு சென்ற ஹிரண்யாக்ஷன் வருண தேவரைத் தன்னுடன் சண்டையிடும்படி கேட்டுக் கொண்டான். ஹிரண்யாக்ஷனின் கர்வத்தைக் கண்ட வருண தேவர், தனக்கு வயதாகி விட்டதென்றும், விஷ்ணுவே சண்டையிடுவதற்குத் தகுதியான நபர் என்றும் அவனிடம் தெரிவித்தார். பகவான் விஷ்ணுவின் இருப்பிடத்தை நாரதரின் மூலமாக அறிந்து கொண்ட ஹிரண்யாக்ஷன் அவரைத் தேடி புறப்பட்டான்.
பூமியை மீட்ட வராஹர்
ஹிரண்யாக்ஷன் பூலோகத்தை கர்போதக கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனைக் கண்ட தேவர்கள் அச்சமடைந்து பிரம்மாவை நாடினர். பிரம்மா பூலோகத்தை எவ்வாறு மீட்க முடியும் என தியானித்தபோது அவருடைய வலது நாசியில் இருந்து கட்டை விரல் அளவிலான பன்றி ரூபம் வெளிப்பட்டது. அந்த திவ்யமான பன்றி அவதாரம் தன் உருவத்தின் அளவை அதிகரித்து கொண்டே செல்வதைப் பார்த்த தேவர்கள் அதிசயித்தனர். பகவான் விஷ்ணுவே பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என உணர்ந்த தேவர்கள் அச்சத்தைக் கைவிட்டு உறுமிக் கொண்டிருந்த வராஹரைப் பார்த்து துதி பாடினர்.
இயல்பாக பன்றிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக இருப்பதால், கர்போதக கடலுக்குள் இருக்கும் பூமியை மீட்கும் பொருட்டு, வராஹர் நுகர்ந்து கொண்டே நீருக்கடியில் சென்றார். பூலோகத்தையே தன் சிறு கோரைப்பற்களால் தாங்குமளவிற்கு வராஹரின் உடல் பெரிதாக இருந்தது. ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எவ்வித சிறு பாதிப்பும் ஏற்படாமல் மிகவும் சாதுர்யமாக வராஹர் அதனைத் தன் கோரைப்பற்களால் சுமந்து நீருக்கு வெளியில் எடுத்து வந்து தன் அசிந்திய சக்தியினால் மிதக்க வைத்தார்.
கடுமையான யுத்தம்
கடலுக்குள் மூழ்கடித்த பூமியை ஒரு பன்றி சுமந்து கொண்டு நீருக்கு வெளியே வருவதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் பாம்பைப் போல சீறினான். தன் கையில் இருந்த கதையினால் வராஹரைத் தாக்க ஹிரண்யாக்ஷன் முயன்றான். அப்போது வராஹருக்கும் ஹிரண்யாக்ஷனுக்கும் கடுமையான போர் மூண்டது. சில சமயம் ஹிரண்யாக்ஷனின் கை ஓங்குவதைக் கண்ட தேவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர். ஒரு கட்டத்தில் வராஹரின் கையில் இருந்த கதையை கீழே தள்ளிய ஹிரண்யாக்ஷன் வராஹரை நிராயுதபாணியாக ஆக்கிவிட்டான்.
அதனால் கடுங்கோபம் அடைந்த வராஹர் உடனடியாக சுதர்சன சக்கரத்தை வரவழைத்தார். அதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் உடனடியாக ஆகாயத்திற்கு பறந்த வண்ணம் கதையினால் வராஹரைத் தாக்க முன் வந்தான். கதை, சூலம் ஆகிய ஆயுதங்கள் மட்டுமின்றி அவர்கள் இருவரும் கைகளாலும் சண்டையிட்டனர். யோகேஷ்வர வராஹரிடம் ஹிரண்யாக்ஷன் பல மாயாஜால வித்தைகளை அரங்கேற்றினான். சுதர்சன சக்கரத்தை ஏவிய வராஹ பகவான் அனைத்து மாயாஜாலங்களையும் நொடிப் பொழுதில் அழித்தார். தன் மாயாஜால வேலைகள் பலிக்கவில்லை என்பதை உணர்ந்த ஹிரண்யாக்ஷன் தனது பலமான இரு கைகளால் பகவானைத் தழுவி நசுக்க முன் வந்தான். வராஹ பகவான் அவனது காதில் பலமாக அறைவிட்டபோது, ஹிரண்யாக்ஷன் விழி பிதுங்கி, கை உடைந்து, வேரோடு பெயர்த்தெடுத்த மரத்தை போன்று கீழே விழுந்தான்.
பிரம்மாவும் இதர தேவர்களும் அங்கு விரைந்து பூமழை பொழிந்தனர். ஹிரண்யாக்ஷனின் உயிர் பிரியாத நிலையில் பகவான் வராஹரின் திருப்பாதம் அவனது நெஞ்சில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட பிரம்மா, யாருக்கு இம்மாதிரியான அதிர்ஷ்டமான மரணம் கிட்டும் என எண்ணி வியந்தார். யோகிகளும் ஞானிகளும் பகவானின் திருப்பாதங்களைத் தியானித்து ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த அசுரனுக்கோ பகவான் வராஹரின் திருப்பாதங்கள் உடலில் தொட்ட வண்ணம் உடலை நீக்கும் பாக்கியம் கிட்டியது.
கோயிலின் அமைப்பு
ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஷ்ரமம் ஆகிய க்ஷேத்திரங்களுடன் இணைந்து, ஸ்ரீமுஷ்ணம் எட்டு முக்கிய சுயம்பு க்ஷேத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
பூவராஹ சுவாமி திருக்கோயிலின் முகப்பானது கம்பீரமான எழில்மிகு ராஜகோபுரத்தின் அமைப்பைக் கொண்டுள்ளது. கோயிலில் இருக்கும் மூல விக்ரஹத்தை தரிசிக்கும் முன் ஸ்ரீநிவாஸ பெருமாளையும் அவரது திருவடிகளையும் தரிசித்து செல்ல வேண்டும். கோயிலின் தென் கிழக்கு திசையில் அரச மரமும் நித்ய புஷ்கரணியும் அமைந்துள்ளது.
இக்கோயிலில் முதன்மையான விக்ரஹத்திற்கு மேல் பாவன விமானம் அமையப் பெற்றுள்ளது. வராஹ பெருமாள் ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வெடுத்த போது அவர் உடல் வியர்வையே நித்ய புஷ்கரிணி என்னும் புனித தீர்த்தமாக மாறிவிட்டது. ஹிரண்யாக்ஷனை வதம் செய்த பின்னர், பகவான் வராஹரின் கண்களில் இருந்து விழுந்த ஒரு துளி ஆனந்தக் கண்ணீரானது அரச மரமாக உருவெடுத்தது. இக்கோயிலில் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம், வேணு தீர்த்தம், மிருத்யுஞ்சய தீர்த்தம் என பல தீர்த்தங்கள் விசேஷமாக காணப்படுகின்றன.
பூவராஹ சுவாமி
பூவராஹ சுவாமி முதன்மையான விக்ரஹமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தன் இடுப்பில் இருக்கும் சங்கு, சக்கரத்தைத் தன் இரு கைகளால் மறைத்த வண்ணம், உடல் மேற்கு திசையை நோக்கியும், முகம் தெற்கு திசையை நோக்கியும் அமையப்பெற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு யக்ஞ வராஹர் உற்சவ மூர்த்தியாகவும், தாயார் அம்புஜ வல்லியாகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
கடலில் இருந்து பூமியை வெளியே கொண்டு வந்து தேவர்களின் துயரைத் துடைத்து மீண்டும் வைகுண்டத்திற்கு திரும்பிச் செல்ல வராஹர் எண்ணியதாகவும், பூதேவி தன்னுடன் தங்கியிருக்கும்படி பகவானை வேண்டிக் கொண்டதாகவும் நாரத புராணம் கூறுகின்றது. பூதேவியுடன் கூடி வசிப்பதால் வராஹப் பெருமாளுக்கு பூவராஹன் என்று பெயர். நான்கு தலை கொண்ட பிரம்மா இங்கு தினந்தோறும் பூவராஹ சுவாமியை தரிசிக்கிறார் என்பது கோயில் ஐதிகம். தினந்தோறும் இக்கோயிலில் கஜேந்திர மோஷம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் புராணத்தைப் பாராயணம் செய்கின்றனர்.
நித்ய புஷ்கரிணியில் ஸ்நானம் செய்த பின்னர் அரச மரத்தின் கீழ் அல்லது புறக்கரையில் இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் சன்னதி அருகே ஹரி நாமத்தை உச்சரிப்பது விசேஷமானதாகும். இக்கோயிலில் வருடத்தில் இரண்டு பிரம்மோற்சவங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். பகவான் திவ்யமான பன்றி ரூபத்தில் வீற்றிருப்பதால் பெருமாளுக்குக் கோரைக் கிழங்கு இங்கு விசேஷமாக நைவேத்யம் செய்யப்படுகிறது. ஹிரண்யாக்ஷனின் புதல்வியான ஜில்லிகா என்பவள் விஷ்ணு பக்தி கொண்டவள் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹாபிரபுவின் தென்னிந்திய பயணம்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சுமார் 500 வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய பயணத்தை மேற்கொண்டபோது, தற்போதைய தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், கும்பகோணம்,ஶஸ்ரீரங்கம், மதுரை, இராமேஸ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவட்டாறு ஆகிய க்ஷேத்திரங்களின் வழியாக பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சைதன்ய மஹாபிரபு தரிசித்த கோயில்கள் மட்டுமின்றி, அவர் சில நொடித்துளிகள் லீலைகளை அரங்கேற்றிய இடங்களைக்கூட கௌடீய வைஷ்ணவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும் என ஸ்ரீல பக்திவினோத தாகூர் வலியுறுத்துகின்றார். இந்த புனித க்ஷேத்திரத்திற்கு செல்பவர்கள், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தினை உச்சரிப்பதால், அவர்களின் யாத்திரை முழுமைப் பெறும்.

அத்திரி மகரிஷி மலை

அத்திரி மகரிஷி மலை

 அத்திரி மகரிஷி மலை பயணம் செல்ல தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி
 சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக்கு இரண்டு 
கிலோமீட்டர் முன்பு வரை செல்கிறது. அங்கிருந்து நடந்து செல்லவேண்டும்
, அல்லது ஆழ்வார்குறிச்சியிலிருந்து ஆட்டோவசதி உள்ளது. ஆட்டோவில் 
சென்றால் நபர் ஒன்றுக்கு 25 ரூபாய் பெற்றுக்கொண்டு
 5 அல்லது 6 பேரை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். 
ஆட்டோவைபேசினால் 150 ரூபாய் 
அல்லது 200 ரூபாய் என பலிக்கும் அளவுக்கு பெற்றுக்கொண்டு 
கடனாநதி அணைக்கட்டு வரை கொண்டுசெல்கிறார்கள். இதை 
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி கவணித்து கட்டணத்தை முறைப்படித்தினால்
 நன்றாக இருக்கும். மேலும் பத்தர்கள் திரும்பி வருவதற்க்கு, போகும் 
பொழுதே ஆட்டோ டிரைவர் போன் நம்பரை வாங்கிவைத்துக்கொண்டால் 
நாம் மலை இறங்க ஆரம்பிக்கும் பொழுது போன்செய்து அழைத்தால் 
ஆட்டோ நமக்காக அணையில் வந்து காத்திருக்கிறார்கள். மலைமேல் 
விசேசநாட்களில் மட்டுமே மதியம் அன்னதான உணவு கிடைக்கும், 
காலை உணவை ஆழ்வார் குறிச்சியில் முடித்துக்கொள்ளவேண்டும், 
அல்லது பார்சல் வாங்கி கொண்டு அணைக்கட்டில் அல்லது மலைக்குள்
 சாப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் மலைக்குள் பிளாஸ்டிக்பைகள் 
அனுமதி கண்டிப்பாக இல்லை எனவே தகுந்தாற்ப்போல் 
செய்துகொள்ளவேண்டும். அணைகட்டில் வாகனத்திலிருந்து 
இறங்கியவுடன் பார்த்தால் பெரிய புலியின் படத்தை போட்டு
 புலிகளின் சரணாலயம் 
என்றும் நம்மை விழிப்புடன் பயணம் செல்ல அறிவுறுத்துகிறார்கள். 
மேலும் பயணத்தின் தொடக்கத்திலேயே வனத்துறையினர் நம்மை 
சோதனை செய்த பின்பே பயணத்திற்க்கு ஒரு நோட்டில் கையெழுத்தை
 பெற்றுக்கொண்டு அனுமதிக்கிறார்கள். 
 கடனா நதி அணை
 கடனா நதி நீர்த்தேக்கப்பகுதியில் தண்ணீர் குறைவாக ஊள்ளதால் 
மக்கள் அதை குறுக்கு பாதையாக பயண்படுத்துகிறார்கள்.
    மலைக்குள் நடந்து 
செல்லும் குறுகலான பாதை  கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை
 நடப்பதற்க்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது 
மட்டுமே ஒரு பதினைந்து நிமிட ஏற்றமுள்ள பாதை உள்ளது. அந்த 
ஏற்றமும் பாறைகள் இல்லாத மண்பாதையாகவே உள்ளது, எனவே
 மழை காலங்களில் வழுக்கும்படியாக உள்ளது. அதன் அருகில் 
பெரியபாறை ஒன்றில் குகை ஒன்று உள்ளது. அதனுள் சித்தர்கள் 
தவமிருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் அந்த குகையுள் 
தீபமேற்றி வழிபடுகிறார்கள்.                                                                                                                             
 வன துர்க்கை                                                                                                                                       
        கோவில்   முன்புறமுள்ள  மைதானம்  பக்தர்கள் தங்குவதற்க்கு 
மிகவும் வசதியாக உள்ளது. அதன் மைய பகுதியில் உள்ள விளக்கு தூண்.                                                                                                                                                               
             கருவறையின் முன் மண்டபம்,  அதன் வாசல் நிலை
 போல்  இருபுறமும்  புளியமரங்கள் வளர்ந்தோங்கி நிற்கின்றன                                                                                                                                                   
அருள்மிகு அனுசுயாதேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் 
கருவறையில் லிங்கவடிவில் காட்சியளிக்கின்றனர். இங்கு அனுசூயாதேவி
 அம்மன் அட்டமாசித்திகளை குறிக்கும்படியாக எட்டுபட்டையான லிங்க 
வடிவில் உள்ளார்.அதன் முன்பக்க பட்டையில் திரிசூலமும் 
செதுக்கப்பட்டுள்ளது.  இந்த லிங்க அமைப்பு வேறெங்கிலும் இல்லை.
 இதை தரிசிக்க சுவாமிகள் அலங்காரத்தில் இல்லாதபோது மட்டுமே 
முடியும்.அனுசுயா தேவியும், அத்திரி மகரிஷியும் அருள் பாலிக்கிற 
கோயில், யாரிவர்கள்? புராணத்திற்குள் நுழைவுதற்கு முன், 
ஒரு செய்தி அவர்கள் தமிழகத்து ரிஷிகள். நமது ''சுசீந்திரம்'' 
அத்திரி மகரிஷியின் பூர்வீகம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள் 
இது பற்றி கருத்து தெரிவிக்கவும்


     அருள்மிகு கங்காதேவி சிறிய கிணற்றினுள் அமைக்கப்பட்டுள்ளார்
. கிணற்று அடிபகுதியிலிருந்து நீரூற்று புனித தீர்த்தமாக உற்பத்தியாகி
 வருகிறது, இந்த தீர்த்தத்தில் குளிப்பதாலும், குடிப்பதாலும் உடலிலுள்ள
 வியாதிகள் நீங்கி குணமடைகிறார்கள்.

அகத்திய முனியும், அத்திரி முனியும்
   அத்திரி மகரிஷி தியானபீடம்,                                                                                                                                                                                                                                                                              
அத்திரி மகரிஷி, அனுசுயாதேவி புராணம்.                                                                                                                                                                                                        
ஒரு சமயம் 

முப்பெரும்தேவியரான சரஸ்வதி, பராசக்தி, லட்சுமி 
மூவருக்கும் கற்பில் சிறந்தவர் யாறென கேள்வி எழுந்தது. 
சந்தேகத்தை தீர்க்க நாரதமுனியிடம் வினாவினார்கள், அதற்கு
 நாரதர் அனுஷயா தேவியை காட்டினார் அதனால் தேவியர்
 மூவருக்கும் தங்களை கூறாது அனுசுயாதேவியை கூறியதால். அனுசுயா 
தேவி மேல் பொறாமையும், கோபமும் கொண்டனர், அதை 
சோதிக்க தங்கள் நாயகர்களை, அனுஷ்யா தேவி வசித்து வந்த 
குடிசைக்கு அனுப்பி வைத்தார்கள். மனைவி சொல்லைத் தட்டாத 
மூவரும் துறவி வேடம்பூண்டு கதவைத் தட்டினர். அந்த வேளை, 
அத்திரி மகரிஷி நீராடச் சென்றிருந்தார். அனுஷ்யா தேவி, 
வந்தவர்களை வரவேற்றார். வந்தவர்கள் பசி என்றனர். 
பசிப்பிணி தீர்த்தலை கடமையாகக் கொண்டிருந்த ரிஷி 
பத்தினி உணவு படைக்கத் தயாரானார். சாப்பிடும் முன்பு, 
மூவரும் ஒரு நிபந்தனை என்றனர். ‘என்ன?’ என்றார் 
அனுசுயாதேவி, ஏற்ப்பாயா? ஏற்றபின் மீறக்கூடாது 
என்று அடுத்தடுத்துக் கேட்டனர். ‘சரி’ என்றார் ரிஷி தேவி.  
நிர்வாண நிலையில் உணவு படையுங்கள்’ என்றனர். தன் தவ 
வலிமையால் வந்தவர் யாரெனவும், வந்த நோக்கமும் 
உணர்ந்த அந்தத் தாய், கணநேரத்தில் சரியெனச் சொன்னார். ஒரு 
கணம் கணவனை வணங்கினார். பின்பு கணவரின் பாதங்களை 
கழுவிய நீரை எடுத்து அவர்கள் மீது தெளித்தார் அடுத்த நொடியே 
துறவிகள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாய் மாறிப்போயினர். 
பிறகென்ன,நிர்வாணமாய் அமுது படைத்தார் அந்த உத்தமப் 
பெண்மணி.  மூவரும் குழந்தைகள் ஆனதால் பிரபஞ்ச இயக்கமே 
ஸ்தம்பித்தது. தேவியர் மூவரும் தத்தம் சக்தியை 
இழந்தனர். நாரதரைக் கெஞ்சி, அனுஷ்யா தேவி காலடி வந்து வணங்கி 
நின்றனர். தங்கள் கணவரை மீட்க வழி கேட்டனர். அழுது 
புரண்டனர். அந்த வேளையில்  அத்திரி மகரிஷியும் வந்து சேர்ந்தார். 
மீண்டும் குழந்தைகள் சிவ, விஷ்ணு , பிரம்மாவாகினர். இந்தப்
புராணக் கதையின் பின் கதையும் உண்டு. மூன்று 
குழந்தைகளின் ஒருமித்த வடிவே, அத்திரி மகரிஷி, அனுஷ்யா 
தம்பதியினரின் மகனான தத்தாத்ரேயர் எனும் யுகப் புருஷர்  ஆவார்

ஆன்மீக சிந்தனையில் அடியேன் கணேசன் பாண்டிச்சேரி 

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், ( மாங்காடுகாஞ்சிபுரம் மாவட் டம்)

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், ( மாங்காடுகாஞ்சிபுரம் மாவட் டம்).அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது. ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது. மாங்காடு கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. இந்த ஈஸ்வரன், நவக்கிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாகும். காஞ்சிபுரத்தைப் போல, மாங்காட்டில் காமாட்சிக்கே முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோயிலில் அம்பாள் இல்லை. அம்பாளின் பாதம் மட்டுமே இருக்கிறது. வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருக்கிறார். விவசாயிகள் இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை. கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, சாமரத்துடன் நின்ற கோலத்தில் உள்ளார். பிரார்த்தனை இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் (அதாவது ஒரு மண்டலம் ) வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது. அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர். ஆண்களுக்கும் இது பொருந்தும். புத்திர பாக்கியம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே குழந்தைக்குதொட்டில் கட்ட அன்னை அருள்புரிவாள்.பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும். பல்லாயிரக்கணக்கோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர். உத்தியோக உயர்வு , உடல் சார்ந்த குறைகள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். நேர்த்திக்கடன்: அம்மனுக்கு (ஸ்ரீஅர்த்தமேருஸ்ரீசக்கிரம்)புடவை சாத்துதல், பால் அபிசேகம்,அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். தலபெருமை: ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரம் ஆதிசங்கரர் : இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், "அஷ்டகந்தம்' என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ சக்ரத்திற்கே முக்கிய பிராதானம்.மூலிகைகளால் ஆனதால் அபிசேகம் கிடையாது.குங்கும அர்ச்சனை விசேசமானது.இந்த அர்த்தமேரு ராஜ யந்திரமாகும்.இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது.இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள். அன்னையின் தவக்கோலம் : ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும் வலது காலை இடது காலின் தொடைக்கு மேற்புறமாயும் இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், அழகிய கண்களை மூடிய நிலையிலும் அம்பாள் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடு திருத்தலத்தில் கடும் தவம் புரிந்தார்.இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரியும் அற்புத காட்சி உற்சவ சிற்பமாக உள்ளது கறிப்பித்தக்கது. நான்கு அம்பாள் தரிசனம் : மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள். இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மூலஸ்தானத்திலுள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பம்சம். "ஒத்தக்கால்ல நின்னு சாதிச்சுட்டான்'னு சொல்வது ஏன்? : குழந்தைகள் அடம்பிடித்து எதையாவது வாங்கி விட்டாலும் சரி.., அவர்களே தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று விட்டாலும் சரி..."ஒற்றைக்காலில் நின்று சாதித்து விட்டான்' என்று சொல்வது வழக்கம். இந்த பேச்சு வழக்கு காமாட்சியம்மனை மையப்படுத்தியே வந்தது. அம்பாளை, சிவன் பூலோகத்திற்கு அனுப்பியபோது அவள் இங்கு தவமிருந்தாள். ஆனால், சிவனது தரிசனம் கிடைக்கவில்லை. எனவே, தீயின் மத்தியில் நின்று பார்த்தாள். அதற்கும் அவர் மசியவில்லை. பின்னர் ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று தவம் செய்ய ஆரம்பித்து, அவரது தரிசனம் பெற்றாள். இறைவனை கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என சிலர் விதண்டாவாதம் பேசுவர். இறைதரிசனம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஈசனின் மனைவியே அவரைப் பார்க்க ஒற்றைக்காலில் நிற்க வேண்டி இருக்கிறது என்றால், சாதாரண மானிடர்களான நமக்கு எவ்வளவோ பக்குவம் வேண்டும்! பக்தனுக்கே முதலிடம்... : திருமால், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தபோது, சுக்ராச்சாரியார் தடுத்தார். அதைக்கேட்காத மகாபலி, திருமாலிடம் கமண்டல நீரை ஊற்றி தாரை வார்த்துக்கொடுக்க முயன்றார். அப்போது, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, கமண்டல நீர் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றார். திருமால் ஒரு தர்ப்பைப்புல்லால் குத்தினார். எனவே, ஒரு கண் பார்வையிழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள். அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். இவ்வாறு, அம்பிகையை விட தன்னை வேண்டிய பக்தனுக்கே அருளினார் சிவன். கணையாழியுடன் பெருமாள்: சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார். அப்போது மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார். இவரை, "சீர் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள். நிறைமணி தரிசனம்: பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது. ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர். புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தபஸ் மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. முத்தேவியருடன் தங்கத்தேர்: தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி மூவரும் உலா வருகின்றனர். சப்தமாதர்களில் ஒருத்தியான பிராஹ்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள். தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர். மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது. இதற்கு இடதுபுறம் தபஸ் காமாட்சி சன்னதி உள்ளது. தல வரலாறு: கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள். இத்தலத்தில் தவமிருந்து வழிபட, தகுந்த காலத்தில் காட்சி தந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி இங்கு வந்த அம்பாள் பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவமிருந்தாள். காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு கிடைக்கவே அங்கு சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு "ஆதி காமாட்சி தலம்' எனப்படுகிறது. அம்பாள் அந்தஸ்தில் ஸ்ரீசக்ரம் பொதுவாக மூலஸ்தானத்தில் அம்பிகைதான் பிரதான தெய்வமாக (மூலவர்) வணங்கப்படுவாள். ஆனால், இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாக கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இவளுக்கே அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இங்கு தவம் புரிந்த அம்பாள், சிவனின் உத்தரவிற்கு பின்பு காஞ்சிபுரம் சென்றாள். அப்போது தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் சுற்றுப் பிரதேசங்களும் தீயின் வெம்மையால் வறண்டன. இந்நிலையில் தேசாந்திரம் செல்லும் போது ஆதி சங்கரர் மாங்காட்டின் நிலையறிந்து அஷ்டகந்தம் எனப்படும் 8 மூலிகைகளால் ஆன ஸ்ரீ அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்கிறார்.இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என வரலாறு கூறுகிறது. சித்திரைத் திருவிழா -10 நாட்கள் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர். இத்திருவிழா தவிர தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் தீபாவளி, பொங்கல் நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித்திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விசேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்களில் இக்கோயில் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிப்பது சிறப்பு.-Ganesan Pondicherry-

முறியாத வியாதிகளையும் முறித்து போடும் நெல்லையப்பர் உறையும் மூங்கில்




ஆன்மீக சிந்தனையில் அடியேன்  கணேசன் பாண்டிச்சேரி

                          மானுட தேகம் பஞ்சபூதங்களால் பிசைந்து கட்டப்பட்ட ஓர் கட்டிடம் என்பதை நாம் ஒரு போதும் மறத்தல் ஆகாது. பஞ்சபூதங்களில் ஒன்றான நீர் எனும் பூதமே, நமது இயக்கத்தின் மூலப் பொருளாய் அமைந்துள்ளது. ஒருவர் தேகத்தில் நீரின் இயக்கம் குறையும் பொழுது தான் வறட்சி நோய்கள் வர ஆரம்பிக்கிறது. ஆக, நீரின்றி அமையாது உடம்பும்கூட!

தவ வலிமையால் சிவனை உணர்ந்த சித்தர் கள், தாங்கள் மெய்ம்மறந்த நிலையில் மெய்யைப் பற்றிய உண்மைகளை மானுட மேன்மைக்காகச் சுவடிகளில் தொகுத்தளித்துள்ளார்கள். அவர் கள் நீரைப் பற்றிக் குறிப்பிடும்போது ஆற்றுநீர், குளத்துநீர், தாமரைக்குளத்துநீர், வைகையாற்று நீர், காவிரி நீர், கங்கை நீர், தாமிரபரணியாற்று நீர் என்று வகைப்படுத்திக் காட்டுகிறார்கள்.

நீரின் பொதுக்குணம் ஒன்றாக இருப்பினும், அது தவழ்ந்து பாயும் இடத்திற்கு ஏற்ப அதன் குணம் மாறுபடும் என்று சித்தர்கள் குறிப் பிடுகின்றனர். தாமிரபரணி நதிநீர் பற்றிய சித்தர்களின் பாடலை சற்று கவனியுங்கள்.

"தாம்மிரபர ணிபுனலாற் சர்வசுரம் பித்துவிழித்

தூம்பிரமுட் காய்ச்சல், சுவாசநோய்- தேம்பிமிகக்

கக்குகய மென்புருக்கி கைகா லெரிவுடனே

மிக்குறுதா கங்களும் விள்போம்.'

அதாவது தாமிரபரணியாற்று நீரைப் பருகி னால் பலவிதமான சுரநோய்கள், பித்ததோஷம், கண்புகைச்சல், உள்சுரம், சுவாச நோய், சயம், எலும்புருக்கி, கைகால் எரிச்சல், அதிதாகம் ஆகியவை விலகும் என்பதே இப்பாடலின் கருத்தாம்.

இவ்வளவு மருத்துவ குணங்களைத் தன்னுள் அடக்கி தவழ்ந்து பாயும் தாமிரபரணியின் வடகரையில் அமர்ந்துதான் நெல்லையப்பர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அவரு டைய தீட்சண்யம், அருள் பார்வை அத்தனையும் தாமிரபரணிக்கே தாரை வார்க்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தாமிரபரணியாற்றின் வடகரையில் எழுந்தருளியிருக்கும் நெல்லையப்பர், வேணுவனநாதர், காந்தியம்மை, வடிவுடைமங்கை ஆலயத்தை ஒரு முறை தரிசித்து, ஐயனின் அருட் பயனை உணருங்கள். அப்படியே அங்கு தல விருட்ஷமாய் வளர்ந்திருக்கும் மூங்கில் மரத்தினை வலம் வந்து, நோய் நீங்கி நூறாண்டு வாழ வேண்டிக்கொள்ளுங்கள். மூங்கிலை சாட்சாத் அந்த நெல்லையப்பராகவே காணுங்கள். உயிரெ னும் நாதத்தை புல்லாங்குழலின் சப்தமாய் எழுப் பும் சக்தி மூங்கிலுக்கே உரித்தாகும். அத்தகைய மூங்கிலைச் சரணடைந்து, உடல் நலமடைய வேண்டிய மருந்துகளை அறிவோம்.

பொதிகை வனத்தில் செறிந்து காணப்படும் மூங்கில் காடுகளில் மழையாய் பொழிந்து, பெருகி, தாமிரபரணியாய் தரணியாளும் நதியின் மறைபொருளே மூங்கிலென்றால் மிகையில்லை. வாருங்கள், மூங்கில் அறிவோம்.

வாயுக்கோளாறுகள் நீங்க...

மூங்கில் மரத்தின் இலைகளைக் கசாயமிட்டு சாப்பிட, வாயுக் கோளாறுகள், வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவை குணமாகும். மேலும் ரத்தத்தைத் தூய்மை செய்யும். வயிற்றுப்பூச்சிகள் ஒழியும். மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாயின்போது உண்டாகும். வயிற்றுவலிக்கு மூங்கில் கசாயம் ஒரு மாமருந் தாய் செயல்படுகின்றது.

ரத்தவாந்தி குணமடைய...

மூங்கிலின் துளிர் இலைகளை 10 கிராம் அளவில் எடுத்து, அதை நசித்துச் சாறெடுத்துச் சாப்பிட, வாந்தி மற்றும் ரத்த வாந்தி உடனே நிற்கும். மேலும் உடம்பில் பிற நோய்களின் வெளிப்பாடாய்க் காட்டும் வீக்கம் மூங்கில் துளிர் இலைச்சாறால் குணமடையும்.

மூட்டுவலி குணமடைய...

மூங்கில் இலைச் சாற்றை மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி குணமாகும். மேலும் மூங்கில் இலைக் கசாயத்தைச் சாப்பிட்டு வந்தாலும் மூட்டுவலி, இடுப்புவலி, நரம்பு வலி போன்ற குறைபாடுகள் தீரும்.

புண்கள் ஆற...

மூங்கிலின் இளமுளைகளை நசுக்கிப் பிழிந்து சாறெடுத்து, அதை அழுகல் புண்களுக்குப் பூசி, பின்னர் அந்தக் சக்கையை புண்களுக்கு வைத்துக் கட்ட புண்ணில் உள்ள கிருமிகள் மடியும். புண்களும் வெகு சீக்கிரம் ஆறும்.

வெள்ளைப்படுதல் குணமடைய...

மூங்கில் இளங்குருத்துகளை ஒரு பங்குக்கு இருபது பங்கு நீர் சேர்த்து கசாயமிட்டு அருந்தி வந்தால், முறையற்ற மாதவிடாய் சீராகும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் அதிசயமாய் குணமாகும். காய்ச்சல் கண்டிருக்கும் போது மூங்கில் குடிநீர் சாப்பிட, விஷக்காய்ச்சலும் விரைவில் குணமாகும்.

வெண்புள்ளி நோய் மறைய...

நமது சருமப் பகுதியில் மெலனோசைட் என்ற நிறமிகள் செறிந்து காணப்படுகின்றன. இவை மெலனின் என்ற நிறமிகளாகச் செயல்பட்டு, நமது சருமத்தை ஒரே நிறத்தில் பராமரித்து வரு கின்றன. நமது சருமத்தில் மெலனின் நிறமிகள் குறையும்போதுதான், சிறுபுள்ளிகள்போல் ஆரம்பித்து, உடம்பெல்லாம் வெள்ளை பரவு வதுபோல் பரவுதலே வெண்புள்ளி நோயாகும். வெண்புள்ளி நோய் ஒரு தொற்றுநோயோ அல்லது உயிர்க்கொல்லி நோயோ அல்ல. நமது உடம்பின் இயல்பான நிறத் தைக் கெடுக்கும் நோய்; அவ்வளவு தான்.

மற்றவர் பார்வைக்கு நாம் வித்தியாசமாய் படும்பொழுது நமக்குள்ளே ஒரு குற்ற உணர்வு தோன்றி நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். இந்த வெண்புள்ளி நோயை சித்தர்கள் அருளிய மருந்து களாலேயே முற்றிலும் குணப்படுத்த இயலும். சித்தர்களின் ஆசியுடன் சொல்லப்படும் இம்மருந்தினை பத்திரமாய்க் குறிப்பெடுத்து, மிகப்பக்குவமாய் மருந்து செய்து சாப்பிட்டு வர வெண்புள்ளி நோய் முற்றிலுமாய் மறையும். இதோ அந்த மருந்து!

முதலில் அரை கிலோ மூங்கில் இலைகளை மூன்று லிட்டர் நீர் சேர்த்துக் கசாயமிடவும். பாதியாகச் சுண்டச் செய்து, அதில் அரை கிலோ வெந்தயத்தை ஊறப்போடவும். இரவில் வெந்தயத் தைத் துணியில் கட்டி வைத்து மறுநாள் பார்த் தால், வெந்தயம் ஓரளவு முளைப்பு கண்டிருக் கும். அந்த வெந்தயத்தின் எடைக்கு பாதி அளவு கீழாநெல்லி, கரிசாலை, சீந்தில், துத்தி ஆகிய வற்றைச் சேர்த்து விழுதாய் அரைக்கவும். பின்னர் மூன்று லிட்டர் பசும்பாலை கொதிக்க வைத்து, அதில் அரைத்த விழுதுகளைக் கொட்டி பதமுறக் காய்ச்சி வடிகட்டவும். வடிகட்டிய சாற்றுக்கு சம அளவு திரிபலா சூரணம் சேர்த்துப் பிசைந்து, அதனுடன் இருபங்கு தேன் சேர்த்து லேகியம் போல் செய்யவும். இந்த லேகியத்தை காலை- மாலை உணவுக்கு முன்பாக தொடர்ந்து ஆறு மாதங்களாவது சாப்பிட்டு வரவேண்டும். இதனால் வெண்புள்ளி நோய் படிப்படியாய் மறைய ஆரம்பிக்கும்.

குடற்புண் மறைய...

மூங்கில் கணுக்களில் விசேஷமாய் உற்பத்தி யாகும் ஒரு வகை உப்பு மூங்கில் உப்பாகும். மூங்கில் உப்பு பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மூங்கில் உப்பை தக்க முறையில் மருந்தாகப் பாவித்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண் மற்றும் பித்த நோய்கள், உஷ்ணநோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

சித்த மருத்துவர்கள் குடற்புண்ணை ஆற்று வதற்கு மூங்கில் உப்பு கலந்த மருந்துகளையே முறையாகத் தருவர். மேலும் இதய நோய்களுக்கும் மிக்க பலன் தரக்கூடியது.

மலச்சிக்கலை முழுமையாய்ப் போக்குகிறது. காயங்களை ஆற்றுகிறது. உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. கல்லீரல் சார்ந்த குறைபாடுகளையும் களைகிறது. மூங்கில் உப்பை அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை தனித்துச் சாப்பிடலாம். அல்லது 100 கிராம் திரிபலா சூரணத்துடன் பத்து கிராம் மூங்கில் உப்பைக் கலந்து, தினசரி இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வர, மேற் கண்ட பிணிகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும்.

படை, சொறி, சிரங்கு மறைய...

மூங்கில் வேரைத் தூள் செய்து பசும்பாலில் குழைத்து, படை, சொறி, சிரங்குகளில் பூசிவர, அவை வெகு சீக்கிரத்தில் மறையும்.

உடலுக்கு வன்மை தரும் மூங்கிலரிசி

மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, யானையின் தோள்களை யொத்த அபார திடம் உண்டாகும். உடம்பு வஜ்ஜி ரம்போல் இறுகும். கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும். உடம்பை இரும்பாக்கும் உன்னதத்தைத் தன்னகத்தே கொண்டு நோய் தீர்க்கும். மூங்கிலரிசியை முறையாய் சாப்பிட்டு வளமுற வாழ வேண்டும் என்பதே சித்தர்களின் ஆசையாகும். சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பை பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும்.

மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிட லாம். கீழே வகைப்படுத்தும் பக்குவமுறையை அக்கறையாய் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும்.

(ஆன்மீக சிந்தனையில் அடியேன்  கணேசன் பாண்டிச்சேரி)

சேவிப்போர் வேண்டுவதைஎல்லாம் அருளும் ஈச்சங்காடு லக்ஷ்மி நரசிம்மர்


எஸ்.பி. சேகர்


                       ஒரு காலத்தில் தளவாய் கிராமத்தில் அண்ணன்- தம்பிகளான இருவர் வாழ்ந்து வந்தனர். இருவருமே ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் இருந்தும்கூட, பெரியவர் சைவத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார். அவர் மரக்காய்கறிகளையே உண்ணுவது வழக்கம். எந்த உயிரினங்களுக்கும் கெடுதல் செய்யக்கூடாது; அவற்றைக் கொன்று உண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து வந்தார். ஆனால் அவரது உடன் பிறந்த தம்பியோ இவரது கொள்கைக்கு நேர் எதிராக இருந்தார். இவர் காட்டுக்குச் சென்று மிருகங்களையும் பறவைகளையும் வேட்டை யாடி, அதன் மாமிசங்களையே தினசரி விரும்பி உண்ணுவது வழக்கம். சைவத்தைப் பின்பற்றி வாழ்ந்து வந்த அண்ணன் தன் தம்பியிடம், ""உயிரினங்களைக் கொன்று தின்பது பாவச்செயல். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்ய வேண்டும்'' என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தம்பி கேட்பதாக இல்லை. இதனால் மனம் வெறுத்துப் போன பெரியவர் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தார்.

தளவாய் கிராமத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மிகப் பெரிய ஈச்சங்காடு இருந்தது. அங்கு செடிகளும் புதர்களும் மண்டிக் கிடந்தன. அங்கு குடி யேற முடிவு செய்த பெரியவர் ஈச்சங்காட் டைத் திருத்தி, அங்கே ஒரு குடிசை போட்டு தனியாக வாழ ஆரம்பித்தார். நாளடைவில் இவரைப் பார்த்துப் பலர் ஈச்சங்காட்டை நோக்கி வர ஆரம்பித்தனர். இதனால் ஈச்சங் காடு ஒரு கிராமமாக மாறியது.

அப்படிப்பட்ட ஊரில் அப்போது கோவில், சாமி என்று எதுவுமே இல்லை. ஒரு நாள் வயோதிகர் ஒருவர் யாசகம் கேட்டபடி ஊருக்குள் நுழைந்தார். பல வீட்டுப் பெண் களும் யாசகம் போட வெளியே வந்தனர். ஆனால் அந்த வயோதிகர் யாரிடமும் பிச்சை வாங்கவில்லை. ""என்ன பெரியவரே! யாரிட மும் பிச்சை வாங்காமல் பசியோடு இருக்கீங்க? ஏதாவது ஒரு வீட்டில் வாங்கி சாப்பிட்டுப் பசியாறலாமே!'' என்றனர். அதற்கு அந்த முதியவர், ""மக்களாகிய நம்மையும் உயிரினங் களையும் காக்கும் கடவுளே உங்கள் ஊரில் இல்லை. முதலில் இறைவனை வேண்டிய பிறகல்லவா உணவு உண்ண வேண்டும்? கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. அப்படிப்பட்ட இறைவன் இல்லாத இந்த ஊரில் நான் எப்படி சாப்பிட முடியும்?' என்றார்.

ஊர் மக்கள் திகைத்து நின்றனர். உடனே அதே முதியவரிடம், ""அய்யா, நீங்கள் சொல்லிய பிறகுதான் எங்களுக்கு இறைவனின் அருமை புரிந்தது. அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்!'' என்று கூறி அவரை வணங்கினர். 

அதற்கு அந்த முதியவர் ஊர் மக்களில் முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு கொங்கணக்காட்டுக்குச் சென்றார். அங்கு அவர் வணங்கி வழிபட்டு வந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருவுருவச் சிலை இருந்தது. அதை எடுத்து வந்து ஈச்சங்காட்டில் முறைப்படி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். ""அந்த முதியவர்தான் கொங்கணச் சித்தர். சித்தர்களில் மிக முக்கியமான கொங்கணச் சித்தர் நிர்மாணித்த கோவில்தான் ஈச்சங்காடு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம்'' என்கிறார்கள் ஊர் முக்கியஸ்தர்களான பெருமாள், சதாசிவம் ஆகியோர்.

கொங்கணச் சித்தர் வாழ்ந்த பகுதி கொங்கணக்காடு என்று அழைக்கப்படுகிறது. இது வல்லம் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கே கொங்கணச் சித்தரின் சமாதியுள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்!

""நடுநாட்டுப் பகுதியில் பரிக்கல், பூவரசங் குப்பம், சிங்கிரிகுடி ஆகிய மூன்று ஊர்களில் லட்சுமி நரசிம்மருக்கு என்று தனித் தனிக் கோவில்கள் உள்ளன. அதே நடுநாட்டுப் பகுதியில்தான் ஈச்சங்காடு தலத்தில் நான்காவது கோவிலாக லட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார் என்பது பலருக்கும் இதுவரை தெரியாத செய்தி! இதை பக்தர்களுக்குப் பரவச் செய்யுங்கள்'' என்கிறார் கோவில் பட்டாச்சாரியார் சந்தானம்.

""ஒவ்வொரு மாதமும் வரும் சுவாதி யன்று பல ஊர்களிலும் இருந்து பக்தர் கள் வந்து இறைவனை வழிபடுகிறார் கள். மூலவராக லட்சுமி நரசிம்மர் கம்பீரமான தோற்றத்தில் அருளாசி வழங்குகிறார். சித்திரை, வைகாசி மாதங்களில் பெருமாளின் நட்சத்திர மான சுவாதி என்று வருகிறதோ, அன்று முதல் பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும். தேர்த் திருவிழா மிகப் பிரமாதமாக நடந்து வருகிறது. பெருமாளிடம் வேண்டுவது எல்லாமே நடக்கிறது. 

உதாரணமாக இவ்வூருக்கு வடக்கே அருணா சர்க்கரை ஆலையில் செட்டி யார் இனத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் பணி செய்தார். அப்போது இங்கு வந்து அடிக்கடி பெருமாளை வழிபாடு செய்துவிட்டுப் போவது வழக்கம். இன்றைக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் அயல்நாடுகளில் பணிபுரிந்து வளமாக வும் நலமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். அவர் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் ஈச்சங்காட்டிற்கு வருகை தந்து லட்சுமி நரசிம்மரை சேவித்துச் செல்கிறார். பல லட்சம் செலவில் புதிதாக முன்மண்டபத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். மூலவர் லட்சுமி நரசிம்மர் சேர்ந்தே இருப்பது மிக முக்கியமான விசேஷம். இங்கு வைகுண்ட ஏகாதசி உட்பட பெருமாளுக்கு ஏற்ற எல்லா சிறப்பான நாட்களிலும் விசேஷ பூஜைகள் உண்டு. வரும் ஆண்டு பெருமாளின் தேர் பவனி புதிய தேரில் வரச்செய்யும் பணிகள் நடந்து வருகின்றன'' என்கிறார் கோவில் பட்டாச்சாரியார் சந்தானம்.

""இரணியனை வதம் செய்து பிரகலாதனுக்கு அருள்புரிந்தவர் பெருமாள். நமோ நாராயணா என்று யாரெல்லாம் நாராயண மந்திரத்தை ஜெபிக்கிறார்களோ அவர்களைக் கைவிட மாட்டார். அதர்மத்தையும் நான் என்னும் அகம்பாவத்தையும் அழித்தார் பெருமாள். அதன் விளைவே நரசிம்ம அவதாரம். கோபம் தணிந்து தம்பதி சமேதராய் இங்கே காட்சி அளிக்கிறார் லட்சுமி நரசிம்மர். இந்த காட்சி அபூர்வமானது! அப்படிப்பட்ட இறைவனை மாதம் தவறாமல் ஒவ்வொரு சுவாதியன்றும் குடும்பத்தினரோடு வந்து வழிபட்டுச் செல்கிறோம். குடும்பத்தில் நிம்மதி, தொழில் அபி விருத்தி, பிள்ளைகளின் படிப்பு உட்பட நோய் நொடியின்றி வாழ்கிறோம்'' என்கிறார் திட்டக்குடியைச் சேர்ந்த ஓம் சக்தி அச்சக உரிமையாளர் ராஜகுரு- விஜயகுமாரி தம்பதியினர் மற்றும் காமராஜ்- பார்வதி தம்பதியினர். 

ஒவ்வொரு சுவாதியன்றும் திட்டக் குடி, பெண்ணாடம் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து லட்சுமி நரசிம்மரைத் தரிசித்து வருகின்றனர். நலம் தரும் நரசிம்மரை நீங்களும் ஒருமுறை தரிசியுங்கள்.

சென்னை- திருச்சி ரயில் மார்க்கத்தில் உள்ள ஈச்சங்காடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இத்தலம். பாசஞ்சர் ரயில் அனைத்தும் இங்கு நின்று செல்லும். கடலூர் மாவட்டம் பெண்ணா டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆட்டோ, மினி பஸ் வசதி உண்டு.
ஆன்மீக சிந்தனையில் அடியேன்  கணேசன் பாண்டிச்சேரி 
https://www.facebook.com/aalayamarivom