அக்னி பகவான் பூஜித்த வன்னிகுடி முழையூர் திருத்தலம்!

“ஆலயங்கள்” 

அக்னி பகவான் பூஜித்த வன்னிகுடி முழையூர் திருத்தலம்!


திருப்பனந்தாள் – பந்தநல்லூர் பேருந்து தடத்தில் பந்த நல்லூருக்கு கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘வன்னிகுடி முழையூர்’ என்ற இந்த தலம். பாவம் செய்வதில் மானிடர்கள் மட்டுமல்ல, தேவர்களும் விதிவிலக்கல்ல.

அக்னி தேவன் மேற்கொண்ட பல செயல் வினைகளால், பாவ வினைகள் அவனைச் சூழ்ந்தது. அப்படி அக்னி தேவன் செய்த பாவம் தான் என்ன? என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?. அந்தப் பாவ வினைகளை பட்டியலிடலாம்.

சிவனடியாரான சிபி சக்கரவர்த்தியின் மன உறுதியை சோதிக்க வேண்டி, அக்னி தேவன் புறா வடிவம் பெற்றும், இந்திரன் பருந்து வடிவம் பெற்றும் சென்றனர். அவர்கள் இருவரும் சிபி சக்கரவர்த்தியை துன்புறுத்தி சோதித்தனர். இந்த பாவவினை புறா வடிவம் பெற்ற அக்னி பகவானைப் பற்றியது.
தாருகா வன முனிவர்கள் சிவனுக்கு எதிராக மேற்கொண்ட வேள்வியில், அனலாசுரனாக அக்னி தேவன் பங்கேற்றதால் பாவவினை அவனைச் சூழ்ந்தது.

வாயு பகவானுடன் அக்னி ஆணவத்துடன் மேற்கொண்ட தர்க்கத்தினால், வாயு பகவானால் அக்னி அணையப் பெறுவதற்கான சாபம் பெற்றான். சிவபெருமானை புறக்கணித்து தட்சன் செய்த தட்ச யாகத்தில், அக்னி தேவன் பங்கேற்ற பாவவினையும் அவனை சூழ்ந்து கொண்டது.

இப்படி பல வகையிலும் வினைகளால் பீடிக்கப் பெற்ற அக்னி தேவன் அவற்றிலிருந்து விமோசனம் பெற பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாட்டை மேற்கொண்டான். இப்படி சிவபெருமானை பூஜித்த திருத்தலங்கள் அக்னீஸ்வரம் என அழைக்கப்படுகின்றன. அக்னீஸ்வரம் என அழைக்கப்படும் தலங்கள் மொத்தம் ஏழு.

அவை திருப்புகலூர், கஞ்சனூர், வன்னயூர், கொள்ளிக்காடு, கோட்டூர், காட்டுப்பள்ளி என்ற ஆறு தலங்களுடன், ஏழாவது தலமாக ‘வன்னிக்குடி முழையூர்’ அமைந்துள்ளது. ஏழாவது தலமான வன்னிக்குடி முழையூரில் தீர்த்தம் உண்டாக்கி, அங்கேயே தங்கியிருந்து, சிவபெருமானையும் அம்பாளையும் வேண்டி தவம் செய்தான் அக்னி பகவான்.

அதனால் அவன் பெற்ற சாபம் நீங்கியது என்று தல வரலாறு தெரிவிக்கிறது. ‘வன்னிகுடி முழையூர்’ என்ற இத்தலத்தில் அமைந்துள்ளது தான் கைலாச நாதர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் கைலாச நாதர். இறைவியின் பெயர் சவுந்திர நாயகி. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ராஜகோபுரம் இல்லை.

உள்ளே நுழைந்ததும் சிறப்பு மண்டபம் விசாலமாக உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் இறைவியின் சன்னிதி வலது புறம் உள்ளது. அன்னை தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன், புன்னகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு. எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் கைலாச நாதர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

சதுர வடிவிலான ஆவுடையாருடன் இறைவனின் திருமேனி அருள் பாலிப்பது இங்கு சிறப்பு அம்சமாகும். அக்னியின் மூவகை வடிவங்களில் ஒன்றான நாற்கோண வடிவிலான ஆகவநீய அமைப்பினை இது ஒட்டியிருப்பதாக பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஆலயதில் சிவன் சன்னிதியின் வலதுபுறம் துவாரக விநாயகரும், கருவறையின் தென்புறம் கோஷ்ட விநாயகரும், தென் மேற்கு நிருதி மூலையில் தல விநாயகரும் அருள்பாலிக்கின்றனர்.

இறைவனின் தென்புற தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். மேற்கு பிரகாரத்தில் நான்கு திருக்கரங்களுடன் வஜ்ரவேல் தாங்கி வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் முருகன் காட்சி தருகிறார். அக்னி தேவன் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் தோன்றியவன். அதனாலேயே இன்றும் அந்நாளில் தீப வடிவில் நாம் அக்னி பகவானை வழிபட்டு வருகின்றோம்.

அக்னி பகவானுக்குரிய கார்த்திகை நடசத்திரமே முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம். எனவே மாத கார்த்திகை நாட்களில் விரதமிருந்து இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைப்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள். பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கஜலட்சுமி சன்னிதியும், வடக்குப் பிரகாரத்தில் தென்திசை நோக்கி சண்டீசர் சன்னிதியும் உள்ளன.

ஆலயத்தின் தல விருட்சம் பன்னீர் மரம். பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில் தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. அக்னி பகவானின் பாவங்களை போக்கிய இந்த தலத்து இறைவனை வணங்கினால், நமது பாவங்களும் விலகிப் போவது உறுதி.

நன்றி: வீ .திலக் படையாட்சி

ஆன்மீகச்சிந்தனையில் அடியேன் கணேசன் பாண்டிச்சேரி

No comments:

Post a Comment