புன்னகை பூத்த தட்சிணாமூர்த்தி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருமண்டங்குடி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய திருபுவனேஸ்வரர் திருக்கோயில் இது தெய்வீகத்துடன் தமிழர்தம் தீரத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டிடும் வகையில் வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. தந்தைக்கு உபதேசித்த தகப்பன் சுவாமி அமைந்திருக்கும் சுவாமிமலையில் இருந்து மேற்கில் ஏழு கிலோ மீட்டரில் இத்தலம் அமைந்திருக்கிறது. இத்தலத்தின் அருகாமையில் புள்ளபூதங்குடி, திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களும் அமைந்திருக்கின்றன.

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் மூன்றாம் ராஜராஜசோழனின் காலத்தைச் சேர்ந்த ஆலயம் இது. இங்குள்ள கல்வெட்டுக்களில் இந்த ஆலயத்திலுள்ள சிவனுக்கு திருபுவன வீரேஸ்வரமுடையார் என்று பெயர் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இது பன்னிரு ஆழ்வார்களில் மிக முக்கியமானவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த திருத்தலமுமாகும்.
இங்கு ஞானப்பள்ளி தட்சிணாமூர்த்தியும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருக்கின்றனர். தெற்கு கோஷ்டத்தில் அமைந்திருக்கும் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி புன்னகை பூத்த முகத்துடன், இடதுபாதம் மலர்த்தி மேல் நோக்கிய நிலையில் வீற்றிருக்கிறார். இது வேறெங்கும் காணப்படாத சிறப்பாகும். இவரை வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

ஜப மாலையுடன் பிரம்ம சண்டேஸ்வரர்
சரியாகப் பேச முடியாதவர்கள் இவரை வழிபட்டால் சரளமான பேச்சுக்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள் என்று இத்தலம் குறித்து நம்பிக்கை நிலவுகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள சண்டிகேசுவரர் நான்கு திருக்கரங்களூடன் கையில் செப மாலை கொண்டு பிரம்ம சண்டேஸ்வரராக அமைந்துள்ளார்.
இக்கோயிலிலில் அமைக்கப்பட்டுள்ள கோமுகம் வேறெந்த ஆலயத்திலும் இல்லாத காட்சிகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. வனப்பகுதியில் நடக்கும் வீரமிக்க நிகழ்ச்சிகளை விவரிக்கும்வண்ணம் சிற்பங்கள் அமைந்துள்ளன. யாழி ஒன்று யானையை துரத்திச் செல்கிறது. அந்த யானையோ ஒரு குதிரையை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அக்குதிரைமீது வீரன் ஒருவன் அமர்ந்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். இக்காட்சிகளை வேட்டையாட வந்த ஒருவர் மரத்தின் மேல் அமர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இவற்றிற்கிடையே தீரமிக்க ஒரு பெண், காட்டுப் பன்றி ஒன்றை நீண்ட வாளால் கழுத்துப் பகுதியில் குத்தி வீழ்த்தும் காட்சி மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. நளின உடல்கொண்ட பெண்களின் நாட்டிய அடவுகளை வெளிப்படுத்தும் சிற்பங்களும் இக்கோமுகத்தில் உள்ளன.
சுவாமிமலை, திருமணஞ்சேரி, கஞ்சனூர், சூரியனார்கோயில், திருநாகேஸ்வரம் என்று கும்பகோணம் சுற்றுவட்ட திருக்கோயில்களுக்கு செல்வோர் திருமண்டங்குடி கோயிலுக்கும் சென்று வரலாம்.

No comments:

Post a Comment