சிவபெருமானுக்கு 16 முகங்கள் உள்ள திருக்கோவில்,

சிவபெருமானுக்கு 16
முகங்கள் உள்ள திருக்கோவில்,
பிரதோசத்தன்று தரிசனம்
செய்யப்பட வேண்டிய கோவில்!

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஆத்தூர் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில், இயற்கை எழில் கொஞ்சும் பொன்பரப்பி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். தமிழர்களின் கட்டடக் கலைக்கும், புராதனச் சிறப்புக்கும் சான்றாக விளங்கும் இந்த சிவாலயம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மகத ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிற்றரசனான வானகோவராயன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது.

புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநர்களை கொண்டும், நுணுக்கமான வேலைப்பாடுகளுடனும் இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில், இவ்வூரில் செல்வம் கொழித்து பொன்னும் பொருளும் அளவற்றுப் புழங்கியதால் இவ்வூருக்கு `பொன் பரப்பி’ என்று பெயர் சூட்டி அழைத்திருக்கிறார்கள்.

பக்திக்குச் சான்று

சிற்றரசனான வானகோவராயனை, சேர, சோழ, பாண்டியர் மூவரும் தங்களுக்குக் கப்பம் கட்ட நிர்பந்தித்து வந்தனர். ஆனால் வானகோவராயன் அதற்கு உடன்படவில்லை. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத வானகோவராயனின் மீது ஆத்திரமடைந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களின் படையோடு மகதம் நோக்கி வந்தனர். இதை அறிந்த வானகோவராயன், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சொர்ண புரீஸ்வரரை வணங்கிவிட்டு வீரத்துடன் போருக்குக் கிளம்பினான்.

ஈசனின் பூரண அருளைப் பெற்று
போர் முரசு கொட்டி வந்த வானகோவ ராயனைப் பார்த்த மாத்திரத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களது அரச முடிகளை கழற்றி வைத்துவிட்டு போர் நடவடிக்கையை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர். இதனாலேயே அந்த இடம் மும்முடி என்றழைக்கப்பட்ட தோடு, சொர்ண புரீஸ்வரரின் அருளுக்கும் வானகோவராயனின் பக்திக்கும் சான்றாகவும் இருந்து வருவதாக வரலாறு கூறுகிறது.

கல்வெட்டுச் சிறப்பு

இக்கோயிலைப் பற்றிய வரலாற்றை,
ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் திருக்கோயில் சுற்றுச்
சுவர்களில் உள்ள கல்வெட்டுக்களில் காணலாம்.

காசி போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று ஆயிரம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்குவதன் மூலம் பெறும் பலன்களை, இக்கோயிலுக்குச் செய்யும் ஏதேனும் சிறிய அளவிலான திருப் பணியின் மூலமும், ஈசனின் தரிசனத்தின் மூலமும் பெறலாம் என்பது போன்ற தகவல்களும், சிவதரிசன வழிமுறைகளும், வழிபாட்டு பலாபலன்களும் தெளிவாக இக்கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

ஷோடசலிங்கத்தின் சிறப்பு

இங்கு அருளாட்சி செய்யும் சொர்ணபுரீஸ்வரர் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கிறார்.நவபாஷாணத்துக்கு நிகரான, காந்தத் தன்மையும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஷோடசலிங்கம் பல சிவாலயங்களில் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டு மின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக் கபட்டுள்ளதால், உலகையேகட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

நிறம் மாறும் அபிஷேகப் பால்

பெரும்பாலான சிவாலயங்களில்
உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், அவரின் திருமுகம் ஏதேனும் ஒரு பக்கத்தில் சாய்ந்திருப்பது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ண புரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பிரதான நிலைப்படியில் இருந்து சிவ தரிசனம் செய்வதற்கு வசதியான அமைப்பில் இருப்பது சிறப்பாகும். இந்த நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால் உள்ளிட்டஅபிஷேக பொருட்கள் நீல நிறமாக மாறி வழிந்தோடுவது குறிப்பிடத்தக்கது.

சிற்பங்களின் எளிமை

இக்கோயில்களில் உள்ள சிற்பங்களின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், தெய்வ உருவங்கள் ஒவ்வொன்றும் வெறும் ருத்ராட்ச மாலையுடன் காட்சி அளிப்பதே. ஏனெனில், காகபுஜண்ட ருக்கு சிவபெருமான் எளிமையாக தரிசனம் தந்ததை உணர்த்துவதற்காக மற்ற தெய்வங்களும், ஆடம்பரங்கள் எதுவுமின்றி மிக எளிமையாக காட்சியளிப்பதாக ஐதீகம்.

அதுபோலவே, வெளிப்பிராகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் ஆசனம் இட்டு அமர்ந்திருக்கும் முருகப்பெருமான், சுமார் 8 அடி உயரத்துடன் மிக பிரமாண்டமாக காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பம்சம். இது தவிர சண்டிகேஸ்வரர், கன்னிமூல விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகிய தெய்வ மூர்த்திகளும் சிற்ப அழகுடன் காட்சி தருகிறார்கள்.

தேன் அபிஷேக மகிமை

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலங்கள் மற்றும் திங்கட்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து தேனபிஷேகம் செய்து வழிபட உகந்த நாட்களாகும்.

நீண்ட காலமாக திருமணமாகாதவர் கள், இந்தக் கோயிலுக்கு வந்து ஈசனுக்கு தேனபி ஷேகம் செய்து வழிபடுவதுடன், தொடர்ந்து 16 பிரதோஷ தினங்களில் வந்திருந்து ஈசனைத் தரிசித்து வேண்டிக் கொண்டால் திருமணத் தடை நீங்கும். மேலும் ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திர தோஷம் முதலான தோஷங்கள் கொண்டவர்களும், பிள்ளை பாக்கியம் இல் லாதவர்களும், தீராத மனக்கவலை கொண்ட வர்களும் சொர்ணபுரீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்து, பிரதோஷ காலங்களில் தொடர்ந்து வழிபட்டால் பிரச்னைகள் யாவும் அடியோடு நீங்கும் என்பது நம்பிக்கை.

தோஷம் உள்ளவர்கள், ஸ்வாமிக்கு தேன் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தரப்பட்ட தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.

இந்தத் தலத்தில் சிவபெருமான் முனிவருக்கு காட்சியளித்தது பிரதோஷ வேளை என்பதால், இந்த ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு விமரிசை

யாக நடைபெறுகிறது. பிரதோஷ நாட்கள் மட்டுமின்றி பௌர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் திங்கட் கிழமைகளில் வரும் சோமவார பூஜை, தமிழ் வருடப்பிறப்பு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை, கார்த்திகை தீபம் போன்றவையும் இங்கு வெகு விசேஷமாக நடைபெறுகின்றன.

காகபுஜண்டர் வழிபாடு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகபுஜண்ட சித்தர் சிவ தரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டிருந்தார்.அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அவருக்கு இங்கே காட்சி தந்தாராம். அதனாலேயே காக புஜண்டர் இங்கே சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், தற்போது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே ஈசானத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோயில் ஈசானத்தில் அமைந்துள்ள சித்தரின் ஜீவ சமாதியை 16 முறை வலம் வந்து, 2 முதல் 16 தேங்காய் வரை உடைத்து வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவ தோஷங்கள், தீராத மனக் கவலைகள் நீங்கி சிவ புண்ணியம் பெறலாம் என்பது நம்பிக்கை.

அவர் அருளிய நாடிச் சுவடியில் இக்கோயிலின் கருவறை மிக உக்கிரமானதாக இருக்கும் என்றும், அதனால் கருவறையில் ஏற்றப்படும் தீபம், எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் இறைவனின் கருவறையில் அமைந்துள்ள தீபம் துடிப்போடுதான் எரிந்து கொண்டிருக்கிறது.

திருச்சிற்றம்பலம்.
சிவாய நம.

புன்னகை பூத்த தட்சிணாமூர்த்தி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருமண்டங்குடி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய திருபுவனேஸ்வரர் திருக்கோயில் இது தெய்வீகத்துடன் தமிழர்தம் தீரத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டிடும் வகையில் வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. தந்தைக்கு உபதேசித்த தகப்பன் சுவாமி அமைந்திருக்கும் சுவாமிமலையில் இருந்து மேற்கில் ஏழு கிலோ மீட்டரில் இத்தலம் அமைந்திருக்கிறது. இத்தலத்தின் அருகாமையில் புள்ளபூதங்குடி, திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களும் அமைந்திருக்கின்றன.

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் மூன்றாம் ராஜராஜசோழனின் காலத்தைச் சேர்ந்த ஆலயம் இது. இங்குள்ள கல்வெட்டுக்களில் இந்த ஆலயத்திலுள்ள சிவனுக்கு திருபுவன வீரேஸ்வரமுடையார் என்று பெயர் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இது பன்னிரு ஆழ்வார்களில் மிக முக்கியமானவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த திருத்தலமுமாகும்.
இங்கு ஞானப்பள்ளி தட்சிணாமூர்த்தியும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருக்கின்றனர். தெற்கு கோஷ்டத்தில் அமைந்திருக்கும் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி புன்னகை பூத்த முகத்துடன், இடதுபாதம் மலர்த்தி மேல் நோக்கிய நிலையில் வீற்றிருக்கிறார். இது வேறெங்கும் காணப்படாத சிறப்பாகும். இவரை வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

ஜப மாலையுடன் பிரம்ம சண்டேஸ்வரர்
சரியாகப் பேச முடியாதவர்கள் இவரை வழிபட்டால் சரளமான பேச்சுக்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள் என்று இத்தலம் குறித்து நம்பிக்கை நிலவுகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள சண்டிகேசுவரர் நான்கு திருக்கரங்களூடன் கையில் செப மாலை கொண்டு பிரம்ம சண்டேஸ்வரராக அமைந்துள்ளார்.
இக்கோயிலிலில் அமைக்கப்பட்டுள்ள கோமுகம் வேறெந்த ஆலயத்திலும் இல்லாத காட்சிகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. வனப்பகுதியில் நடக்கும் வீரமிக்க நிகழ்ச்சிகளை விவரிக்கும்வண்ணம் சிற்பங்கள் அமைந்துள்ளன. யாழி ஒன்று யானையை துரத்திச் செல்கிறது. அந்த யானையோ ஒரு குதிரையை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அக்குதிரைமீது வீரன் ஒருவன் அமர்ந்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். இக்காட்சிகளை வேட்டையாட வந்த ஒருவர் மரத்தின் மேல் அமர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இவற்றிற்கிடையே தீரமிக்க ஒரு பெண், காட்டுப் பன்றி ஒன்றை நீண்ட வாளால் கழுத்துப் பகுதியில் குத்தி வீழ்த்தும் காட்சி மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. நளின உடல்கொண்ட பெண்களின் நாட்டிய அடவுகளை வெளிப்படுத்தும் சிற்பங்களும் இக்கோமுகத்தில் உள்ளன.
சுவாமிமலை, திருமணஞ்சேரி, கஞ்சனூர், சூரியனார்கோயில், திருநாகேஸ்வரம் என்று கும்பகோணம் சுற்றுவட்ட திருக்கோயில்களுக்கு செல்வோர் திருமண்டங்குடி கோயிலுக்கும் சென்று வரலாம்.

நலம் தரும் கணபதி

நலம் தரும் கணபதி

தாமிரபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியிருக்கிறது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம். இத்திருக்கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இப்புராதனத் திருக்கோயிலில், விநாயகர் தன்னுடைய முப்பத்திரண்டு திருத்தோற்றங்களில் எட்டாவது வடிவமாக போற்றப்படுகின்ற உச்சிஷ்ட கணபதியாக அவதரித்து அருள்பாலித்துவருகிறார்.

ஜீவநதியான ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் எட்டு நிலை மண்டபங்கள், மூன்று பிராகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மூலவராக விநாயகர் எழுந்தருளியுள்ள தனித்திருக்கோயில் இது.

ஹேரண்ட மகரிஷி

கலியுகத்தில் விநாயகரைப் பற்றிப் போதிக்க முக்தல மகரிஷியைத் தென்நாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமையும் இத்திருத்தல மூலவர் உச்சிஷ்ட கணபதிக்கு உண்டு. இங்கு அவர், கருவறையில் அம்பாளை மடியில் தாங்கிக் காட்சி தருகிறார். மும்மூர்த்திகளை விட முதன்மை யான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் வீற்றிருக்கும் ‘நீலவாணி' அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல்

திருமணத் தடை நீங்குவதற்கும், தம்பதியரிடையே மன ஒற்றுமை ஏற்படுவதற்கும் பக்தர்கள் இவரை நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர். செல்வம் பெருகுவதற்குக் கொழுக்கட்டையையும், குழந்தை வரத்திற்குச் சர்க்கரைப் பொங்கலையும், நோய்கள் தீர்வதற்குக் கரும்புச் சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

முற்காலத்தில் பாண்டிய மன்னர்கள் முதல் நாயக்க மன்னர்கள் வரையிலும், அதன் பின்பு நகரத்தார்களும் வணங்கி அருள் பெற்ற இத்திருத்தலத்திற்கு அருகில் பைரவ தீர்த்தக் குளம் உள்ளது. இதில் புனித நீராடி உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. வருடந்தோறும் சித்திரை மாதத்தின் முதல் தினத்தன்று சூரிய ஒளி உச்சிஷ்ட கணபதியின் மீது பரவும் அதிசய நிகழ்வும் இங்கு நடைபெறுகிறது. அந்நாளில் சூரிய பகவான் விநாயகரை வணங்குவதாகச் சொல்லப்படுகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம், வரலாறு ஆகியவற்றால் சிறந்து விளங்கும் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கண்பதி திருத்தலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அன்றைய தினம் உச்சிஷ்ட கணபதிக்கு விசேஷ அபிஷேகங்களும், சிறப்பு தீபராதனைகளும் நடைபெறுகின்றன. அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

உச்சிஷ்ட கணபதியை வணங்க உள்ளம் மகிழும்.

திருவாரூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கமலாம்பாள் சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!

திருவாரூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கமலாம்பாள் சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!

பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர்.
திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.

தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை. இதற்கு சான்று ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.
நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.
எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் .

சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம்.
நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.
நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .
பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.

திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.
இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.
24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.

சுருளிமலை சுருளி வேலப்பர் திருக்கோவில்

சுருளிமலை சுருளி வேலப்பர் திருக்கோவில்
சுருளி அருவி கோவில் 

தேனி மாவட்டம், கம்பம் சுருளி மலையில் ஒரு குகையின் மீது அமைந்துள்ள முருகபெருமான் திருக்கோவில்.இதன் அருகில் சுரபி நதி ஓடுகின்றது. இங்குள்ள அதிசயம் என்னவென்றால், இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது. மேலும் இந்த நீர் பட்ட இலை, தழைகள் தொடர்ந்து 40 நாட்கள் நீரில் நனைந்த பின்னர்,பாறையாக மாறுகிறது.
எவ்வளவு நாட்களும் நீர் இங்குள்ள பாறைகள் மீது விழுந்து கொண்டிருந்தாலும் பாசம் பிடிக்காது, வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது அதிசயம் ஆகும். இங்குள்ள நீர் வீழ்ச்சி இசையோடு இணைந்து சுருதி கொடுத்ததால், சுருதி தீர்த்தம் அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, சுருளி தீர்த்தம் ஆனது. இங்குள்ள முருகபெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.
மஹாவிஷ்ணுவின் மகளான வள்ளியை மலைஅரசனான நம்பிராஜன் வளர்த்து, முருகபெருமானுக்கு மணம் முடித்து வைத்தார். திருமணத்திற்கு பின்னர், முருகனுக்கு தனக்கு சொந்தமான இந்த மலைப்பகுதியை திருமண சீராக அளித்தார். எனவே இந்த தலத்திற்கு வந்து அருளினார்.
ஒருசமயம், சனி பகவான், தனது நியமனப்படி,தேவர்களை ஆட்கொள்ளவேண்டி வந்தது. தேவர்கள் அனைவரும் முருகனை சரணடைந்து, வழிபட, சனியின் பிடி அகன்றது.
சிவபெருமானிடம் இலங்கையை ஆண்ட ராவணேஸ்வரன் தனது தவ வலிமையினால் அண்ட சராசரங்களையும் ஆளும் வரம் பெற்றான். அதன் பின்னர் தேவர்களையும் ரிஷிகளையும் சித்தர்களையும் வதைத்தான். அனைவரும் இங்குள்ள கைலாசநாதர் குகையில் அருள்புரியும் மஹாவிஷ்ணுவிடம் சரணடைந்து காத்து அருள வேண்டினர். இதற்குள் ராவணன் தனது படையுடன் இங்கு வந்து கூச்சலிட மஹாவிஷ்ணு பஞ்ச பூதமாய் உருவெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் பெரிய உருவெடுத்து கோப நிலை காட்ட, இதைக்கண்டு நடுங்கி தன் படைகளுடன் திரும்பி ஓடினான். இத்தகைய பெருமை வாய்ந்த கைலாசநாதர் குகையின் மேற்பகுதியில் சுருளிவேலப்பன் அருள் பாலிக்கிறார்.
முருகன், சுருளிவேலப்பன் சன்னதியில், சிவன், விஷ்ணு, விநாயகர் அனைவரும் காட்சி தருவது சிறப்பான அம்சமாகும். இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசித்து வருவதாக ஐதீகம். ஆதலால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி சிலைகள் உள்ளன. ஆடி அமாவாசை, தை , புரட்டாசி, மஹாளய அமாவாசை தினங்களில், இங்கு நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விசேஷ பூஜைகள் செய்கின்றனர்.
குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு சுருளி வேலப்பரே மகனாக வந்து இறுதிச்சடங்குகள் செய்து முடித்தாராம். எனவே ஆண் வாரிசுகள் இல்லதவர்களும் இறுதி வேளையின் போது இவரை தங்கள் மகனாக பாவித்து வழிபட மன அமைதியும் வளமும் கிடைக்கும்.
இங்கு பெருமாள் சன்னதியில் சிவபெருமானும் இருப்பது ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. விபூதி, குங்கும பிரசாதமும் தருகின்றனர். அத்துடன் சடாரி ஆசீர்வாதமும் செய்கின்றனர். துளசி தீர்த்தமும் வழங்கப்படுகிறது. இது உச்சிக்கால பூஜையில் மட்டும் கொடுக்கப்படுகிறது.
இங்கு பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும் சிவபெருமானுக்கு பரிவார மூர்த்தியாக தெட்ஷிணாமூர்த்தியும் (சின்முத்திரையுடன்) இருக்கின்றனர். சிவபெருமா னாருக்கு விசேஷ அபிஷேகங்கள் உண்டு. பால்குடம் எடுத்து முடி காணிக்கை செலுத்தி, தீர்த்த நீராடி, வழிபட, சகல பாவங்களும் நீங்கும். நல் வாழ்வு கிட்டும். தீராத வியாதி தீரும் என்பதும் நம்பிக்கை ஆகும். இங்கு அன்னதானம் செய்தால், நற்கதியும் மோட்ஷமும் கிட்டும் என்பதால், அன்னதானம் பிரதானமாய் நடைபெறுகிறது.
சிவபெருமானின் திருமணத்தின்போது அனைவரும் இமயமலைக்கு சென்றுவிட்டதால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்ததை சமன் செய்ய அகத்திய முனிவரை தென்பொதிகைக்கு அனுப்பினார். பின்னர் அகத்திய முனிவருக்கு தன் திருமணக்கோலத்தைக்காட்ட, இங்குள்ள குகையில் அருளினார். எனவேதான் இந்த குகை கைலாய குகை என்று அழைக்கப்பட்டது. இந்த தலத்தில் தனித்தனிக் குகைகள், தீர்த்த குளங்களுடன் உள்ளன. விபூதிக்குகை, கன்னிமார் குகை, சர்ப்பக்குகை, கிருஷ்ணன் குகை, பாட்டையர் குகை என பல குகைகள் உள்ளன.
இந்த மலை மீது கன்னிமார்கள் நடனமாடிய தடயங்கள் உள்ளன என்றும்
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறி, மலைக்கோவில்களை “குன்று தோறாடல்” என்று பெயரிடுகிறார். சுருளி வேலப்பர் சுயம்புவாக தோன்றி, குடவரை சன்னதியில் அருள் பாலிக்கிறார்.அவர் அருகில் விநாயகர்,மகாலிங்கம், சந்தான கிருஷ்ணன், வீரபாகு, ராம பிரான், லட்சுமணன் ஆகியோர் உள்ளனர். இம்மலையில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக கூறுகின்றனர்.
குகைகள் மிகவும் சிறிய அளவில் உள்ளன. இதனுள் இருவர் மட்டுமே அமர இடம் இருக்கின்றது. அதனுள் செல்வது யோகாசன பயிற்சி செய்வது போல் இருக்கும். தீர்த்தமும் பாறையின் மீது இருக்கும் துகள்களையே விபூதி பிரசாதமாக தருகின்றனர்.
முக்கிய விழாக்களாக ஆடி பதினெட்டாம்பெருக்கு, தைப்பூசம், ஆடி , தை அமாவாசை, பங்குனி உத்திரம், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, சித்திரை திருவிழா, கந்த சஷ்டி ஆகியவை கொண்டாடப்படுகிறது.
நமது இந்து சமயத்தில் கோவிலுக்கு செல்வது என்பது கலாசாரத்தை வளர்ப்பதற்கும், ஒருவருக்கொருவர் அன்புடனும் கனிவுடனும் உறவை வளர்த்துக்கொள்வதற்குமே ஏற்பட்ட சம்பிரதாயமாகும். இதனால் ஒழுக்கம் மேம்படுகிறது. நாம் குளித்து உடலை சுத்தம் செய்தபின்பே கோவிலுக்குள் செல்கிறோம். மற்ற சமயங்களில் கோவிலுக்குள் செல்லும்பொழுது, கை கால் அலம்பிய பின்பே செல்கிறோம். ஏதாவது சுலோகத்தை உச்சரித்தபடியே செல்வதால், மற்ற சிந்தனைகள் வருவதில்லை. மனம் ஒருமைப்படுகிறது. கோவிலை வலம் வருவதால் நமக்கு நடைப்பயிற்சி கிடைக்கிறது. எனவே கோவில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நல்ல நிறைவையும் தருகிறது.
இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பம் ,கம்பராய பெருமாள் கோவில் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது.
இந்த கோவிலுக்கு செல்ல மதுரை வந்து தேனிக்கு பஸ் மூலம் வந்த பின்பு கம்பம் அல்லது உத்தமபாளையம் செல்லவேண்டும்.இந்த இரண்டு ஊர்களில் இருந்தும் சுருளிதீர்த்தம் செல்லும் பஸ் மூலம் சுருளிப்பட்டி வந்து இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தால்தான் இந்த தலத்தை அடைய முடியும். நல்ல பாதை உண்டு என்றாலும் இரண்டு புறமும் காட்டில் உள்ள செடிகளும் புதருமாகத்தான் இருக்கும். ஆனால் நல்ல சுகமான தென்றலையும் மூலிகை மணத்தையும் அனுபவிக்கலாம். மழைக்காலத்திலும் மற்றும் பருவ காலத்திலும் சுருளி அருவியில் சுகமாய் நீராடலாம். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் திறந்து இருக்கும்.
சைவம் வைணவம் சமரசமாகத் தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்த நல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் சுருளி வேலா போற்றி!
அருள்மிகு சுருளி வேலப்பர் திருக்கோவில், சுருளிமலை,கம்பம் – 625 516. தேனி மாவட்டம்


அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்



அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்
மூலவர் : வீரஆஞ்சநேயர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : அணைப்பட்டி
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா: 
அனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை ஆகியவை முக்கிய திருவிழா. அமாவாசை காலங்களிலும் சனி மற்றும் புதன் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகம்.
தல சிறப்பு:
பெயருக்கேற்றாற்போலவே இந்த ஆஞ்சநேயர் நின்ற திருகோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார். அதேசமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில், ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போலவும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உதவும் கருணையுடன் பார்ப்பது போலவும் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.
முகவரி:
அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் அணைப்பட்டி திண்டுக்கல்.
பொது தகவல்: 
துவாபரயுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வன வாசம் இருந்தனர். தற்போது வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள சித்தர் மலையில் பாஞ்சாலியுடன் வந்து தங்கினர். அவர்களின் தாகத்திற்காக வாயுபுத்திரனான பீமன் தண்ணீர் தேடி இப்பகுதிக்கு வந்தான். அடர்ந்த காட்டின் நடுவே தண்ணீர் ஓடும் சத்தம். தண்ணீரை தேடிவந்த பீமனின் கண்களில் தான் சுயம்புமூர்த்தியான ஆஞ்சநேயர் தென்பட்டார். தருமனின் அனுமதியுடன் வீரனான பீமனே ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்ததால் இவர் வீர ஆஞ்சநேயர் ஆனார்.
பிரார்த்தனை 
வீரம், நல்ல புத்தி, கலங்காத மனம், புத்தி சாதுர்யம், நல்ல படிப்பு, உடல் பலம், செய்யும் செயல்களில் வெற்றி ஆகியவற்றை தருவார். பணி மாற்றம் விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நல்ல பலன் உண்டு என பலன் அடைந்தவர்கள் கூறுகின்றனர்.
நேர்த்திக்கடன்: 
அனுமன் ஜெயந்தியன்று முழு விரதம் இருக்க இயலாதவர்கள் பழம் மட்டும் சாட்பிட்டு ஸ்ரீராம ஜெயம் எழுதலாம். ஆஞ்சநேயர் பாடல்கள் பாடலாம். ஆஞ்சநேயர் கோயில் சென்று வழிபட்டு வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றி வழிபடலாம்.
தலபெருமை: 
வாயு மைந்தனான ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போதே சூரிய பகவானை பழம் என்று நினைத்து அதைப்பறிக்க வானில் தாண்டிக்குதித்தவர். ராமனின் அடிமையாக திகழ்ந்த இவர் "ஸ்ரீராமஜெயம்' எழுதுபவர்களை பல இன்னல்களிலிருந்து காக்கிறார். ராமாயணமோ அல்லது ராமனின் பெருமைகளோ கூறும் இடங்களில் எல்லாம் அனுமன் இருப்பார். அந்த அளவுக்கு ராமர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்.
வீர ஆஞ்சநேயர் :பெயருக் கேற்றார்போலவே இந்த ஆஞ்சநேயர் நின்ற திருகோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார். அதேசமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில், ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போலவும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உதவும் கருணையுடன் பார்ப்பது போலவும் அமைந்துள்ளது.
ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியம் என்பதால் இங்கு நவக்கிரக பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர், நாகர், சப்த கன்னிகள், கருப்பணசாமி தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
தல வரலாறு: 
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையநாயக்கனூர் ஜமீன்தாரான காமயசாமியின் கனவில் வீர ஆஞ்சநேயர் தோன்றி, வேகவதி ஆற்றின் தென்கரையில் (வைகை ஆற்றின் புராணப்பெயர்) தாழம்பூ புதருக்குள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாககவும், ஆலயம் அமைத்து வழிபடும்படியும் கூறினார். ஆஞ்சநேயரின் கட்டளைப்படி புதரை சுத்தம் செய்து பார்த்த போது சிறிய பாறை தென்பட்டது. அதை தோண்டி எடுக்க முயன்றும் முடியவில்லை. அதுவே வீர ஆஞ்சநேயராக சுயம்புவாக மாறியது. பின்னர் அந்த இடத்தில் கோயில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: பெயருக்கேற்றாற்போலவே இந்த ஆஞ்சநேயர் நின்ற திருகோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார். அதேசமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில், ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போலவும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உதவும் கருணையுடன் பார்ப்பது போலவும் அமைந்துள்ளது

அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டம்.


காலை 6.40 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் மதனகோபாலசுவாமி
தாயார் பாமா, ருக்மணி
தல விருட்சம் வாழை
ஆகமம் வைகானசம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
வரலாறு
ஒரு முறை சிவன், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின், சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் இலிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார். சிவன், தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். இதனால் சிவனின் உடலில் வெப்பம் அதிகமாகி, அக்னி ஜுவாலையாக மாறி இந்த உலகை பாதிக்கிறது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைக் கூறி இந்த உலகைக் காக்கும் படி வேண்டுகின்றனர். சிவனின் தியானத்தை கலைத்தால் மட்டுமே அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து, உலகம் காக்கப்படும் என்பதை அறிந்தார் விஷ்ணு. உடனே தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறார். இந்த இசை என்னும் இன்ப வெள்ளம் சிவனின் செவிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இசைக்கு மயங்கிய சிவன் கண் விழிக்கிறார். தியானம் கலைகிறது. உலகம் காக்கப்படுகிறது. சிவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் “மகாவிஷ்ணு, தாங்கள் எப்போதும் மதன கோபாலன் என்ற திருநாமத்துடன் என் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து என்னை மகிழ்விக்க வேண்டும்” என்றார். மகாவிஷ்ணுவும் சிவனின் விருப்படியே, மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையிலும் நன்மை தருவார் என்ற சிவாலயத்திற்கு அருகில், மதன கோபால சுவாமி என்ற கோயிலில் வீற்றிருந்து புல்லாங்குழல் இசைத்து சிவனையும் மகிழ்வித்து நம்மையும் காத்து அருள்புரிகிறார்.
ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன்பு, பெரியாழ்வாருடன் பல்லக்கில் வந்து இங்கு எழுந்தருளி மதனகோபாலரைத் தரிசனம் செய்துள்ளார்கள் என்றும், பின் ஆண்டாள் அரங்கப் பெருமானின் திருமேனியில் ஐக்கியமானார் என்றும் வரலாறு கூறுகிறது.
கோயிலில் நுழைந்தவுடன் இடதுபக்கம் அரசமரத்தடியில் முழுமுதற்கடவுளாக விநாயகர் அமர்ந்திருக்கிறார். மூலவர் மதனகோபால சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து, இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூபக் கண்ணனாகப் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர். மதுரவல்லி தாயார் தனிசன்னதியிலும், ஆண்டாள் தனி சன்னதியிலும் இருந்து அருள் பாலிக்கின்றனர்.
நவநீதகிருஷ்ணன், சேனை முதல்வர், கருடாழ்வார், நம்மாழ்வார், உடையார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரை இத்தலத்தில் நாம் தரிசிக்கலாம். கருவறையை கடக்கும் வழியில் இராமர் தனிசன்னதியில் காட்சி தருகிறார்.
மேலும் சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஹரி ஹர ஸர்ப்ப ராஜா, பஞ்ச முக ஆஞ்சநேயர் என ஒவ்வொருவரும் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கின்றனர். குழலூதும் கண்ணன், இராமானுஜர் சன்னதியும் உண்டு.
திருவிழா:
இத்தக்கோயிலில் மாதம் தோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி பாவை நோன்பு சிறப்பானவை.
கோரிக்கைகள்:
இசையில் நாட்டம் உடையவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வதால் இசை மேதை ஆகலாம் என்றும், இத்திருத்தலத்தில் அறுபதாம் கல்யாணம் செய்பவர்களின் சந்ததி சிறப்பு பெறும் என்றும் பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
இங்குள்ள நாக தேவி, ஹரி ஹர ஸர்ப்ப ராஜா என அழைக்கப்படுகிறார். இங்கு வெள்ளி தோறும் இராகு கால பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.
நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜை செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்